பக்கம் எண் :

112மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 11

முன்னிலையில் அரண்மனையில் நடக்கப்போகிறது. இசைக்கலையில் தேர்ந்தவர் யார் என்பதை அன்று சபையில் அறியலாம். நகர மக்கள் யாவரும் வந்து அவர் கள் புலமையைக் காணுங்கள்” என்று நகர மக்களுக்கு அறிவிக்க பட்டது.

போதிசத்துவர் தமக்குள் எண்ணினார்: ‘இந்த மூசிலன் இளைஞன், துடிப்புள்ளவன். நானோ, கிழவன்; வலிமையற்றவன். கிழவன் செய்யும் காரியங்கள் போற்றப்பட மாட்டா. என் மாணவன் தோல்வியடைந்தால், அதனால் எனக்குப் பெருமையோ புகழோ இல்லை. அவனிடம் நான் தோல்வியடைந்தால், அந்த வெட்கக்கேட்டைவிட காட்டுக்குப்போய் உயிர்விடுவது மேலானது’ இவ்வாறு எண்ணி குட்டிலப் புலவர் காட்டுக்குப் போனார். போனவர் சாவுக்கு அஞ்சி வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்கு வந்தவர் மானத்துக்கு அஞ்சி மீண்டும் காட்டுக்குப் போனார். இவ்வாறு வீட்டுக்கு வருவதும், காட்டுக்குப் போவதுமாக ஆறு நாட்கள் கழிந்தன. நடந்து நடந்து கால் தேய்ந்து புல்லில் பாதையும் ஏற்பட்டுவிட்டது.

அப்போது சக்கனுடைய சிம்மாசனம் சூடுகொண்டது. (சக்கன் என்பவன் சக்கரச் செல்வன், இந்திரன், தேவர்களின் அரசன்.) சக்கன் ஆய்ந்து பார்த்துக் காரணத்தை அறிந்து கொண்டார். ‘இசைவாண ராகிய குட்டிலப் புலவர் தமது மாணவனால் துன்பமுற்றுக் காட்டில் கிடக்கிறார். அவருக்கு நான் உதவி செய்ய வேண்டும்’ என்று எண்ணிய சக்கன் வானுலகத்திருந்து இறங்கிவந்து போதிசத்துவரின் எதிரில் நின்றார். நின்று, “கலைவாணரே! ஏன் காட்டுக்கு வந்தீர்?” என்று வினவினார்.

“நீர் யார், ஐயா?” என்றார் கலைவாணர். “நான் சக்கன்” என்று விடை கிடைத்தது.”

“தேவர் கோமானே! நான் காட்டுக்கு வந்த காரணம் இது: என் மாணவனால் நான் தோல்வியடைவேன் என்று அஞ்சு கிறேன். மானம் இழந்து வாழ்வதைவிட காட்டில் இருந்து சாவது மேலானது என்று நினைக்கிறேன். ஏழு நரம்புடைய யாழின் இனிய இசையை உண்டாக்க நான் அவனுக்குக் கற்பித்தேன். இப்போது அவன் தன்னுடைய ஆசிரியனை வெல்ல போட்டி போடுகிறான். கோசிய! தங்கள்தான் எனக்கு உதவி செய்யவேண்டும்” என்று வேண்டினார் குட்டிலப் புலவர்.