120 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 11 |
அப்போது காரண்டியன் இவ்வாறு சொன்னான்: “இந்த உலகத்தை எல்லாம் சமமாக்கப் போகிறேன். குன்றுகளையும் குகைகளையும் சமமாக நிரவப்போகிறேன்.” “இதுமனிதர் செய்யக்கூடிய காரியமா! இந்த ஒரு குகையைத் தானும் உன்னால் அடைக்க முடியுமா? இது என்ன பைத்தியக் காரத்தனம்” என்றார் ஆசிரியர். “என்னால் உலகத்தை நிரவிச் சமப்படுத்த முடியாவிட்டால், தங்களால் மட்டும் உலக மக்களை எப்படித் திருத்தமுடியும்?” என்று வினாவினான் காரண்டியன். இதைக்கேட்ட ஆசிரியருக்குத் தனது மாணவனின் உண்மைக் கருத்து விளங்கிற்று. இனி நான் கண்டவருக்கெல்லாம் அறவுரை கூற மாட்டேன்’ என்று தமக்குள் உறுதிசெய்துகொண்டு, இவ்வாறு கூறினார். “காரண்டிய! நீ ஏன் இப்படிச் செய்தாய் என்பதை அறிந் தேன். உலகத்தை ஒருவராலும் சமப்படுத்த முடியாது. எல்லா மக்களையும் நல்வழிப்படுத்தவும் முடியாது.” இவ்வாறு ஆசிரியர் கூறி, தமது மாணவனைப் புகழ்ந்தார். பிறகு ஆசிரியர் மாணவருடன் தமது இல்லம் சென்றார். இந்தக் கதையைக் கூறியபிறகு, பகவன் புத்தர் “அக்காலத்தில் சாரிபுத்தர் ஆசிரியராகவும், நான் காரண்டிய மாணவனாகவும் இருந்தோம்” என்று ஒப்புமை கூறினார். |