பக்கம் எண் :

தமிழில் சமயம் - புத்த ஜாதகக் கதைகள்127

கும் குழந்தை தன் ஆயுள்காலம் வரையிலும் தான தருமம் செய்வதி லேயே கண்ணுங் கருத்துமாயிருக்கும். எவ்வளவு தான தருமம் செய்தாலும் அக்குழந்தை திருப்தி அடையாது” என்று கூறினார்கள். அரசன் அதைக்கேட்டு மகிழ்ந்து, முன் சொன்னதுபோல, ஆறு அறச் சாலைகளை அமைத்து அதில் நாள் தோறும் ஆறு இலட்சம் பொன் தான தருமங்களைச் செய்தார். போதிசத்துவர் பூவதி அரசியின் திரு வயிற்றிலே கருவாக அமர்ந்தது முதல், சிவி நாட்டரசன் சஞ்சயனுக்குச் செல்வம் பெருகுவதாயிற்று. நாவலந் தீவிலுள்ள மன்னர்கள் அனைவரும் சஞ்சய மன்னனுக்குப் பொன்னையும் பொருளையும் கையுறையாக வழங்கினார்கள்.

அரசியார் வயிறு வாய்த்துப் பத்துத் திங்கள் ஆயின. அப் போது அவர் நகரத்தைச் சுற்றிப்பார்க்க விரும்பினார். அரசன் நகர வீதிகளைப் புனைந்து அலங்கரித்து, அரசியாரைத் தேரில் அமர்த்தி அனுப்பினான். அரசியார், யானை சேனை சூழ்ந்துவரப் புறப்பட்டு நகர்வலம் வரும் போது, பிள்ளைப் பேறுக்காலம் வந்தது. இதையறிந்த அரசன் அத்தெரு விலே ஒரு நல்ல மாளிகையில் இடம் அமைத்துக் கொடுத்தார். அவ் விடத்திலே போதிசத்துவர், அரசியார் வயிற்றில் ஆண் குழுந்தையாய் பிறந்தார். அக்குழந்தைக்கு வெசந்தரகுமரன் என்று பெயரிட்டார்கள். அரசன் அறுபதினாயிரம் செவிலித் தாய்மாரை அமைத்துக் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தான்.

வெசந்தரகுமாரன் பிறந்த அதே நாளில், காட்டில் ஒரு பெண் யானை, ஒரு கன்றை ஈன்றது. நல்ல ஓரையில் பிறந்த இந்த யானைக் கன்று உடல் முழுவதும் வெண்ணிறம் உடையதாக இருந்தது. இக் கன்றை ஈன்ற பிடியானை அக்கன்றைக் கொண்டு வந்து அரசனுடைய யானைப் பந்தியில் விட்டுச் சென்றது.

குழந்தைப் பருவம் முதற்கொண்டு வெசந்தர குமாரனுக்குத் தானம் வழங்குவதில் மனஞ்சென்றது. ஐந்து வயதானபோது, அரசர் பெருமான், நூறாயிரம் பொன் பெறுமதியுள்ள பொன்னரி மாலையை இக்குமாரனுக்குக் கழுத்தில் அணிவித்தார். குமரன் அந்த மாலையை எடுத்து அதைத் தன் செவிலித் தாயாருக்கு வெகுமதியாக அளித்தான். செவிலித்தாயார் இச்செய்தியை அரசனுக்குக் கூற அரசன், “என் மகன் தானமாகக் கொடுத்தது தானந்தான். அதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார். அரசர் பெருமான், தன் அருமை