பக்கம் எண் :

136மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 11

“பல்லக்கிலும் தேரிலும் யானையிலும் ஊர்வலம் வந்த வெசந்தரகுமாரன், இன்று கால்கடுக்க தரையில் நடந்து கானகம் செல்வதோ!”

“பாட்டுப்பாடி துயில் எழுப்பி பனிநீரில் குளித்து நறுஞ் சாந்து பூசி பட்டாடை உடுத்திச் செல்வமாக வளர்ந்த செல்வ மகன், தோல்ஆடை அணிந்து வெட்டரிவாளும் கோடரியும் சுமந்து காட்டில் வாழ்வதோ!”

“காசிப்பட்டும் பால் ஆவிபோலும் மெல்லிய கலிங்க ஆடையும் உடுத்த இளவரசி, மரவுரியும் புல் ஆடையும் எவ்வாறு அணிவளோ?”

“சிவிகையிலும் வண்டியிலும் அமர்ந்து சென்ற அழகிய மாதி, மெல்லிய பாதங்கள் நோவக் காட்டிலே கல்லிலும் முள்ளிலும் நடக்கவோ!”

“ஆயிரம்பேர் ஏவல் செய்யச் சுகமாக வாழும் என் மருமகள், தன்னந்தனியே காட்டில் வாழ்வதோ?”

“நரியின் குரலைக் கேட்டும், ஆந்தையின் அலறலைக் கேட்டும் நடுங்குகிற இவள், காட்டில் கொடிய மிருகங்களின் கூச்சலைக் கேட்டு என்ன ஆவாள்?”

“கூட்டில் வளர்ந்த குஞ்சுகள் கொல்லப்பட்டதைக் கண்டு கதறுகிற பறவையைப்போல, என் மக்கள் காட்டுக்குப் போனால் என் மனம் பதறுமே!”

இவ்வாறு பலவாறு சொல்லி அரசியார் அழுதாள்.

வெசந்தரகுமாரன் தானம் செய்யப்போகிற செய்தி நாடெங் கும் பரவிற்று. பல திசைகளில் இருந்தும் மக்கள் தானம் பெறவந்தார்கள். அரச குலத்தாரும், பிராமணரும், வைசியரும், சூத்திரரும் எல்லோரும் வந்து தத்தமக்கு வேண்டிய பொருள்களைத் தானமாகப் பெற்றுக் கொண்டு போனார்கள். நாள் முழுவதும் ஓயாமல் தானம் செய்தும் மேன்மேலும் மக்கள் கூட்டம் வந்துகொண்டேயிருந்தது. இளவரசர் எல்லோருக்கும் தானம் வழங்கினார். பொழுது மறைந்து இரவு வந்தது. இளவரசர், பெற்றோரிடம் விடைபெறுவதற்காகச் சென்றார். சென்று தந்தையிடம், “காட்டுக்குப் போகிறேன். நாட்டு மக்களுக்கு நான் செய்த குற்றம் தானம் வழங்கியதேயாகும். அவர்கள் தீர்ப்புப்படி நான் நாடு கடந்து காட்டுக்குப் போகிறேன்” என்று கூறி, தமது அன்னையாரிடம், “அன்னையே! காட்டுக்குப் போகிறேன். ஆசியளியுங்கள்” என்று கூறினார்.