பக்கம் எண் :

142மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 11

“இங்கிருந்து பதினைந்து யோசனை தூரம் இருக்கிறது வங்க மலை என்னும் கந்தமாதனமலை. பாறைகள் நிறைந்த அந்த மலை யிலே தாங்கள் மனைவி மக்களுடன் தங்கலாம். சேத நாட்டினராகிய நாங்கள், கண்களில் நீர்வழிய மனம் வருந்தித் தங்களை வடக்கு நோக்கிச் செல்ல வழியனுப்புகிறோம். போகிற வழியிலே குளிர்ந்த நிழலைத் தருகிற மரங்கள் அடர்ந்த விபுலமலை இருக்கிறது. அங்கு, மலை மேலிருந்து ஓடிவருகிற ஆழமான குளிர்ந்த நீருள்ள கேதுமதி என்னும் ஆற்றைக் காண்பீர்கள். அழகான ஆற்றங்கரையிலே தங்கி, மீன்கள் நிறைந்த ஆற்று நீரிலே குளித்துச் சற்று நேரம் தங்கிக் குழந்தைகள் விளையாடிய பிறகு புறப்பட்டுச் செல்லுங்கள். அப்பாலே காட்சிக்கினியதான, குன்றின்மேலே பெரியதோர் ஆலமரத்தைக் காண்பீர்கள். பழங்கள் நிறைந்த அந்தக் குளிர்ச்சியான ஆலமரத்தைக் கடந்து சென்றால், காடு அடர்ந்த நாலிக மலையைக் காண்பீர்கள்.

அங்குப் பலவிதமான பறவைகள் பல்வேறு குரல்களில் கூவும் இனிய ஓசைகளைக் கேட்பீர்கள். அக்காட்டைக் கடந்து மேலும் வடக்கு நோக்கிச் சென்றால், முசலிந்தம் என்னும் ஏரியைக் காண்பீர்கள். அந்த ஏரியின் நீரிலே நீலநிறத் தாமரையும், வெண் ணிறத் தாமரையும் பூத்து மலர்ந்திருக்கும். ஏரிக்கு அப்பால், மேகம் சூழ்ந்ததுபோல அடர்ந்த காடு உண்டு. அங்குத் தரையிலே புற்கள் அடர்ந்து இருக்கும். உயரமான மரங்களில் பூக்களும் பழங்களும் நிறைந்து இருக்கும். பலநிறப் பறவை களின் பாட்டு களைக் கேட்கலாம். இரைதேடித் திரியும் சிங்கங்களும் உண்டு. காட்டின் ஊடே ஓடுகிற அருவி வழியே சென்றால் தாமரைப் பூக்களும், மீன்களும் நிறைந்த தூய நீரையுடைய ஆழமான ஏரி யொன்றைக் காண்பீர்கள். அமைதியான அந்த இடம் தங்கியிருப்பதற்குத் தகுதியானது. அங்கே இலைகளினால் குடிசை அமைத்துக் கொண்டு அதில் தங்கி இருங்கள்.”

இவ்வாறு போகவேண்டிய வழியைக் கூறியபிறகு அவர்கள் விடைபெற்றுத் திரும்பித் தமது நகரம் போனார்கள். திரும்பிப் போவதற்கு முன்னர், தமது நாட்டைச் சேர்ந்தவனும் அறிவும் ஆற்றலும் உள்ளவனும் காட்டில் நன்கு பழகியவனுமான ஒரு ஆளை இளவரசனோடு அனுப்பினார்கள்.