பக்கம் எண் :

தமிழில் சமயம் - புத்த ஜாதகக் கதைகள்163

அல்லன், சக்கன். இந்திரலோகத்திலிருந்து வந்தேன். உமக்கு வேண்டிய வரத்தைக்கேளும், தருகிறேன்.”

போதிசத்துவர், “என் தந்தையார் என்னை மறுபடியும் நாட்டுக்கு அழைத்துக்கொள்ளும்படி வரம் அருளவேண்டும். நாள்தோறும் தானங்களைச் செய்வதற்கு வேண்டிய பொருளை யும் வாய்ப்பையும் தந்தருள வேண்டும். உலகத்திலே, அறவழியிலே நடந்துகொள்ள வரம் அருளவேண்டும்” என்று வேண்டினார். “நீர் விரும்பிய வரங்களைத் தந்தேன்” என்று கூறி, இந்திரன் மறைந்து போனான்.

வெசந்தர குமரானும், மத்தியும் தன்னந்தனியே காட்டில் இருந்தனர். ஜூஜகப் பார்ப்பனன் சிறுவர்களை நடத்திக்கொண்டு காட்டு வழியே போனான். அறுநூறு யோசனை தூரம் கால் நடையாகவே நடந்தார்கள். இரவு ஆனதும், அவன் அவர்களின் காலையும் கையையும் கட்டி மரத்தின் அடியில் விட்டுவிட்டுக் காட்டு மிருகங்கள் தன்னைத் தொந்தரவு செய்யாதபடி தான் மட்டும், மரத்தின்மேல் ஏறிக் கிளையின் கவைகளில் உட்கார்ந்து உறங்குவான்.

இரவு நேரங்களில் இரண்டு தெய்வங்கள் சிறுவர்களைக் காத்து வந்தன. வெசந்தரகுமரானைப் போலவும், மத்தியைக் போலவும் உருவங்கொண்டு இரண்டு தெய்வங்களும் குழந்தை களிடம் வந்து, கட்டுக்களை அவிழ்த்து நீராட்டி, உணவு கொடுத்து உறங்கச் செய்யும். விடியற் காலையில், முன் போலவே கைகால்களைக் கட்டிவிட்டுப் போய்விடும். இந்தத் தெய்வங்களின் உதவியினாலே சிறுவர்கள் யாதொரு துன்பமும் இல்லாமல் காட்டைக் கடந்தனர். ஜூஜகனை இந்த தெய்வங்கள் வழிதிருப்பி விட்டன. அவன் கங்கதேசம் போகாமல் சிவி நாட்டுக்குப் போகும்படி அவனைச் செலுத்திவிட்டன. பதினாறு நாட்களுக்குப் பிறகு, இவர்கள் ஜேதுத்தர நகரத்தை அடைந்தார்கள்.

அன்று இரவு சிவி நாட்டு மன்னன் ஒரு கனவு கண்டார். தாம் சபையிலே சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போலவும், அப்போது ஒரு ஆள்வந்து இரண்டு பூக்களைத் தம்மிடம் கொடுத்தது போலவும், அப்பூக்களைத் தமது காதுகளில் அணிந்துகொண்டது போலவும் அப்பூக்களில் இருந்து பூந்தாது கள் தமது மார்பில் உதிர்ந்தது போலவும் அவர் கனவு கண்டார். பொழுது விடிந்தபிறகு இந்தக் கனவை நிமித்திகரிடம் கூறினார். அவர்கள், நெடுநாள் பிரிந்திருந்தவர் தங்களிடம் வருவார்கள் என்று இக்கனவுக்கு விளக்கம் கூறினார்கள்.