| தமிழில் சமயம் - புத்த ஜாதகக் கதைகள் | 43 |
தரையில் விழுந்து கிடக்கும் சாமனைக் கட்டிக்கொண்டு அழுதார்கள். “சாமா! தூங்குகிறாயா? எழுந்திரு. எங்கள்மேல் கோபமா உனக்கு? எங்களை மறந்து விட்டாயா? சாமா! கண்மணி! ஏன் பேசாமலிருக்கிறாய்?” “எங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்தாயே! உண்ண உணவும் குடிக்க நீரும் தந்தாயே! குளிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வந்தாயே! எங்களை விட்டுப் போய் விட்டாயே! குருட்டுக் கிழவராகிய நாங்கள் மட்டும் உயிருடன் வாழ்வதோ? இனி எங்களுக்கு யார் துணை? வீட்டைத் துப்புரவு செய்பவர்யார்? காய்கனி கொடுப்பவர்யார்? குருடராகிய எங்களுக்கு நீர்கொண்டு வருபவர் யார்?” இவ்வா றெல்லாம் அவர்கள் வாய்விட்டுக் கூறி மனம் உருகி அழுது அரற்றினார்கள். நெடுநேரம் தாய் அழுதாள். கடைசியில் ஒருவாறு தேறி, ஏதோ ஆழ்ந்து சிந்தித்தாள். கடைசியில் இவ்வாறு கூறினாள்: “இதெல்லாம் வீண் துக்கம். என் மகன் இறக்கவில்லை. அவன் உடம்பில் விஷம் ஏறி மயங்கிக் கிடக்கிறான். சத்தியவாக்கு கூறி இவன் உடம்பிலுள்ள நஞ்சை வெளிப்படுத்துவேன்” என்று இதைச் சொன்னாள்: “சாமன் தூய உள்ளம் உடையவன் என்பது உண்மை யானால், இவன் உடம்பில் ஏறிய நஞ்சு இறங்கட்டும். சாமன் தன் பெற்றோருக்கு உண்மையாகப் பணிவிடை செய்தான் என்பது உண்மையானால், இவன் உடம்பில் ஏறிய நஞ்சு வெளிப்படட்டும். இவனுடைய பெற்றோ ராகிய நாங்கள் தவம்செய்து புண்ணியம் உடையவர்களாயிருப்பது உண்மையானால், இவன் உடம்பில் ஏறிய நஞ்சு வெளிப்பட்டு இவன் உயிர்பெற்று எழட்டும்.” இவ்வாறு தாயார் கட்டுரை கூறியபோது, அசைவற்றுக் கிடந்த சாமன் ஒருபுறமாகத் திரும்பினான். பிறகு, அவனுடைய தகப்பனாரும் அவனுடைய அன்னை கூறியதுபோன்று கட்டுரை கூறினார். அப்போது சாமன் இப்புறமாகத் திரும்பினான். அப்போது அவர்களுக்குத் தெரியாமல் அங்கு இருந்த பகுகோதரி என்னும் தெய்வமகள் இவ்வாறு கட்டுரை கூறினாள். அவள் கூறிய சொற்கள் இவர்கள் எல்லோருக்கும் கேட்டன. “மானிடர்களில் சாமனை நான் நேசிக்கிறேன் என்பது உண்மை யானால், இவன் உடம்பில் உள்ள நஞ்சு நீங்கி உயிர்பெற்று எழட்டும். இவனுடைய பெற்றோரின் கண்படலமும் நீங்கட்டும்.” |