பக்கம் எண் :

தமிழகக் கலை வரலாறு - சிற்பம் - கோயில்141

இரண்டாம் பதிப்பின் பதிப்புரை

தமிழ் இலக்கியத்தின் வளமைக்கும் தமிழர் பண்பாட்டின் மேன்மைக்கும் வித்திட்ட ஜைன சமயத்தினர் சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் முதலிய கலைகளையும் வளம்பட வளர்த்தார்கள். தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தங்களது பணியினைச் செயல் படுத்தியுள்ளனர். பின்னர் ஏற்பட்ட பூசல்கள் ஜைன சமயத்தினரின் தொண்டினை மறைக்கவும் மாற்றவும் வழி கோலின. ஜைன சமயத்தினர் சிற்பம், ஓவியம் ஆகிய துறைகளில் மேம்பட்டிருந்த தற்கான சான்றுகளாக இன்றும் பல இடங்கள் திகழ்கின்றன. இவைகளில் ஒன்று “மகாபலிபுரம்” ஆகும். இங்குக் காணப்படும் சிற்பங்களிலே சிறந்து விளங்குவது “அர்ச்சுனன் தபசு” எனக் குறிப்பிடப்படும் புடைப்புச் சிற்பமாகும். இச்சிற்பக் காட்சி இரண்டாம் தீர்த்தங்கரர் அஜிதநாதரின் புராணத்தில் கூறப்படுகிற சகர, சாகரர்களின் கதையினைத் தெரிவிக்கிறது.

தமிழ்நாடு ஜைன சங்கத்தின் இரண்டாம் வெளியீடாக வெளிவரும் “மகாபலிபுரத்து ஜைன சிற்பம்” எனும் இந்நூலில், ஆராய்ச்சி அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் நடுநிலை மையோடு ஆய்ந்தறிந்த உண்மைகளின் அடிப்படையில், இச்சிற்பம் ஜைனக் கதையினையே விளக்குகிறது என விவரிக்கிறார். இவர் 1947 ஆம் ஆண்டில் தென் இந்திய புதை பொருள் ஆராய்ச்சி சங்கத்தில் ராவ் சாகிப், பேராசிரியர் ஏ. சக்ரவர்த்திநயினார் அவர்கள் தலைமையில் இச்சிற்பக் காட்சியின் விளக்கம் பற்றிய கட்டுரையினைப் படித்துள்ளார். இதனைப் பலரும் ஏற்றுப் போற்றி இருக்கின்றனர். பின்னர் 1950ஆம் ஆண்டில் வேதாரணியம் திரு அ. ஜீ. அனந்தராஜய்யன் முதலியார் அவர்கள் இக்கட்டுரையினைப் படங்களுடன் தனி நூலாக தம் சொந்தச் செலவிலே வெளியீட்டு சிற்பக் காட்சியின் உண்மை விளக்கம் பரவ உதவினார்கள். அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.