பக்கம் எண் :

தமிழகக் கலை வரலாறு - சிற்பம் - கோயில்291

அமைக்கப்பட்டன. ஆதிகாலத்தில் இந்த மண்டபங்களும் கட்டடங் களும் இல்லை. இக்கோவில்களைப் பௌத்தரிடமிருந்து சைவ வைணவர்கள் கைப்பற்றிக்கொண்ட பிறகு. புதிய மண்டபங்களும் கட்டடங்களும் மூலக் கோவிலைச் சூழ்ந்து கட்டினார்கள். சுற்றிலுமுள்ள கட்டடங்களே நீக்கிவிட்டுப்பார்த்தால் நடுவில் உள்ள பழைய பௌத்தக்காலத்து யானைக்கோயிலைக் காணலாம். இனி இவற்றின் கட்டட அமைப்பைப் பார்ப்போம். (Plates 50, 51, 52. Archaeological Survey of India. Annual Report 1902-03)

இரண்டு கட்டடங்களும் ஒரேவிதமாக அமைப்புள்ளவையாகத் தெரிகின்றன. தரையமைப்பு நீண்டு பின்புறம் வளைந்து அரை வட்டமாக இருக்கின்றன. சுவர்களும் அதே அமைப்புள்ளதாக இருக்கின்றன. மேற்கூரை (விமானம்) யானை முதுகுபோன்று வளைவாக இருக்கிறது. அதாவது படகைக் கவிழ்த்து வைத்தது போன்று இருக்கிறது. முன்புறத்தில் வாயிலும் வாயிலுக்கு மேலே ‘நெற்றி முகமும்’ அமைந்துள்ளன. இரண்டு கட்டடங்களிலும் உள்ள செங்கற்கள் ஒரே அளவுள்ளவையாக இருக்கின்றன. ஒவ்வொரு கல்லும் 17 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் 3 அங்குல கனமும் உள்ளதாக இருக்கிறது. முழுவதும் சுடுமண்ணால் (செங்கல்லினால்) கட்டப்பட்டு வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் வெண்சுதை பூசப்பட்டுள்ளன. யானையை நிறுத்தி அதைப் பின்புறத்திலிருந்தும் பக்கங்களிலிருந்தும் பார்த்தால் எப்படி இருக்குமோ அவ்வித அமைப்புள்ளதாக இந்த யானைக்கோவில் கட்டடங்கள் இருக்கின்றன.

இரண்டு கட்டடங்களிலும் சுவரில் சிறு வேறுபாடுகள் காணப் படுகின்றன. கபோ தேசுவரர் கட்டடத்தில் சுவருக்கும் கூரைக்கும் இடையிலே ‘கழுத்து’ என்னும் உறுப்பு இல்லாமல் சுவரும் கூரையும் ஒன்றாக இருக்கின்றன. ஆனால், திரிவிக்கிரமன் கட்டடத்தில் சுவருக்கும் கூரைக்கும் இடையிலே ‘கழுத்து’ என்னும் உறுப்பு அமைந்திருக்கிறது. மேலும், சுவரில் இடையிடையே சுவரோடு சுவராகத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தூண்கள். ‘கழுத்து’ வரையில் அமைந்துள்ளன. ‘கழுத்து’க்குக் கீழே எழுதகம் அமைந்திருக்கிறது. ‘கழுத்து’ தூண்கள், எழுதகம் ஆகிய இவை யெல்லாம் இக்கட்டடத்துக்கு அழகு தருகின்றன.