பக்கம் எண் :

88மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 12

சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல்
                                           தரணியெல்லாம்
பிலமூகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ.

கங்காதர மூர்த்தியின் வரலாற்றை மகேந்திரவர்மன் காலத்தவரான திருநாவுக்கரசர் இனிய பாக்களினாலே அழகாகக் கூறுகிறார்: “பகீரதற்கா வானோர் வேண்டப், பரந்திழியும் புனற் கங்கை பனிபோலாகச் செறுத்தான்,” என்று அவர் கூறுகிறார். மேலும்,

மையறு மனத்தி னாய
     பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் அமரர் ஏத்த
     ஆயிர முகம தாகி
வையகம் நெளியப் பாய்வான்
     வந்திழி கங்கை யென்னும்
தையலைச் சடையில் ஏற்றார்
     சாய்க்காடு மேவி னாரே.

என்றும்,

அஞ்சையும் அடக்கி ஆற்றல்
     உடையனாய் அநேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று
     மன்னிய பகீர தற்கு
வெஞ்சின முகங்க ளாகி
     விசையொடு பாயுங் கங்கை
செஞ்சடை யேற்றார் சேறைச்
     செந்நெறிச் செல்வ னாரே.

என்றும் அவர் பாடியது காண்க.

கங்கையின் வரலாற்றைச் சொல்லோவியமாகத் திருநாவுக்கரசர் பாடியதை, அவர் காலத்தில் இருந்த மகேந்திரவர்மன் தான் அமைத்த குகைக்கோயிலிலே கல் ஒவியமாக அமைத்துக் கொடுத்தான். இந்தச் சொல் ஒவியத்தைப் பாடிக்கொண்டே கல்லோவியத்தைக் காணும் சிற்பக்கலை ரசிகர்களுக்கு மனத்தில் தோன்றும் இன்பவுணர்ச்சி அனுபவித்தறியவேண்டியது தவிர எழுத்தில் படித்து அனுபவிப்ப தன்று.