பக்கம் எண் :

126மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

விளக்கம் : குகாநாத சுவாமி கோவில் என்னும் பெயருடன் இப்போது இடிந்து கிடக்கிற இந்தக் கோவிலின் பழைய பெயர் இராஜ இராஜேசுவரம் என்பது. இது, சோழ மன்னன் இராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது. சோழ மன்னனுடைய அமைச்சன் மங்கலக்கால கிழான் ஆன அய்யனம்பி என்பவர், கன்னியாகுமரியில் தண்ணீர்ப் பந்தல் அமைத்ததை இச்செய்யுள் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

தெண்டிரைநீர்த் தென்குமரி மானகர்த்தண் ணீர்ப்பந்தல்
எண்டிசையும் ஏத்த வினிதமைத்தான் - விண்டிவரும்
ஐந்தெரியலான் அய்யனம்பி அடல்வளவன் மந்திரி
தென்மங் கலக்கால மன்.

ஐயனம்பி

இடம் : கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி கிராமம், குகநாத சுவாமி கோவிலில் உள்ள சாசனம்.

பதிப்பு : திருவாங்கூர் சாசனங்கள், பக்கம் 170. (T. A. S. Page.170)

விளக்கம் : கன்னியாகுமரியில் தண்ணீர்ப்பந்தல் அமைத்த மங்கலக்கால கிழான் அய்யனம்பி, மேற்படி தண்ணீர்ப் பந்தல் நடை பெறுவதற்காக மணற்குடி என்னும் ஊரில் நிலம் தானங் கொடுத்ததைக் கூறுகிறது இச்செய்யுள்.

சாசனச் செய்யுள்

மானமிக்க வேல்ஐயன் மங்கலக்கா லமன்குமரித்
தானமைத்த பந்தலிற்றண் ணீரட்ட - தேனரைத்த
மயத்தங்கு சோலை மணற்குடியிலே வைத்தா
னித்தம் பதினாழி நெல்.