162 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
ஆளுடையார்க்கு ஒரு திருநந்தாவிளக்கும், திருவக்கரை ஆழ்வார்க்கு ஒரு திருநந்தா விளக்கும், துர்க்கைக்கொரு சந்தி விளக்கும், இரண்டு தேவர்களுக்கும் சனி எண்ணெய் காப்பு மாசத் திருநாழி எண்ணெயும் நீக்கி நின்றது தூண்டுவான் கூலியாகவும் இப்பரிசு சந்திராதித்தவல் இக்கோயி லிரண்டுங், குடமும் அலகுங்கொண்டு புகுவார் இத்திரு விளக்கும் எரித்து இக்கோயில் கைக்கொண்டு திருவாராதனை செய்வோம்” என்று இந்தச் சாசனப்பகுதி கூறுகிறது. (203) சாலிவாகன சக ஆண்டு 1352 - இல் (கி.பி. 1430 - இல்) செம்மந்தை காங்கேயன் என்பவர் இக்கோவிலில் ஒரு கோபுரத்தையும் ஒரு மண்டபத்தையுங் கட்டினார் என்று ஒரு செய்யுட் சாசனங் கூறுகிறது. இந்தக் கோபுரமும், மண்டபமும் முற்கூறிய கண்டர் சூரியன் சாம்புவராயன் அமைத்த கோபுரமும் மண்டபமும் அல்ல ; இவை வேறு, “விம்பச் சகர மற்றொராயிரத்து முந்நூற்றுக்குமேல் ஐம்பத் திரண்டினில் வக்கரையார்க்கு அணிகோபுரமுஞ் செம்பொற்றிரு மண்டபமுங் கண்டான் செஞ்சொல் தேவரசன் கப்பக் களிற்றண்ணல் இதூர்மன் செம்மந்தை காங்கேயன்” (218) இந்தக் கோபுரமும் மண்டபமும் பிற்காலத்தில் பழுதடைந்த போது செவ்வன்னன் என்பவர் இவற்றைப் புதுப்பித்தாரென்று இங்குள்ள இன்னொரு சாசனச் செய்யுள் கூறுகிறது. இந்தச் சாசனத்தின் எழுத்து பிற்காலத்தது. இந்தச் சாசனச் செய்யுள் இது! “பன்னாக பூஷணர் வக்கரை ஈசற்குப் பத்தியுடன் முன்னளிற் காங்கயன் கோபுரம் மண்டபம் முற்றுங்கண்டான் இந்நாள் அதனை யெல்லாம் நவமாக்கினன் எங்கள் கச்சிச் சின்னான் துணைவன் அரசன் குமாரன்நற் செவ்வண்ணனே” (219) |