பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 285

பூதிவிக்ரமகேசரி கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று கூறுவோர் என்ன காரணம் காட்டுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

1. விக்ரமகேசரியின் கொடும்பாளூர்ச் சாசன எழுத்து கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் எழுதபட்டதாகக் காணப்படுவதனாலே, விக்ரமகேசரி கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்தவனாதல் வேண்டும் என்பது இவர்கள் கருத்து.

இந்தச் சாசனத்தின் முன்பகுதி அழிந்துவிட்டது; பின்பகுதியும் அழிந்துவிட்டது. எனவே, இதுதான் மூல சாசனமா என்பதில் சந்தேகம் தோன்றுகிறது. இது, பழைய சாசனத்தின் பிரதியாகப் பிற்காலத்தில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருக்கக்கூடும் அல்லவா? ஆகவே, இது மூல சாசனமா அல்லது பிற்காலத்துப் படிஎழுத்துச் சாசனமா என்பது தெரியாத நிலையில், வெறும் எழுத்தின் சான்று கொண்டு காலத்தைத் தீர்மானிப்பது தவறு. பழைய சாசனங்களைப் பிற்காலத்தில் படிஎடுத்துப் புதுப்பிக்கிற வழக்கம் உண்டு. உதாரணமாக நந்திவர்மன் III காலத்துச் சாசனத்தைப் பிற்காலச் சோழர் படி எடுத்து எழுதி வைத்திருக்கிறார்கள். 144 of 1928-29; S. I. I. Vol. XII No.55. மூன்றாம் நந்தியின் மற்றொரு சாசனத்தையும் பிற்காலச்சோழர் படி எடுத்து எழுதி வைத்திருக்கிறார்கள். 480 of 1954 No. 58 S. I. I.
Vol. XII. எனவே, முற்பகுதியும் கடைப்பகுதியும் மறைந்துபோன கொடும்பளூர்ச் சாசனத்தை கி.பி. 10-ம் நூற்றாண்டுச் சாசனம் என்று கூறுவது தவறு. சாசனத்தில் கூறப்படும் செய்திகள் கி.பி. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுச் செய்தியாக இருப்பதனாலே இந்தச் சாசனம் பழைய சாசனத்தின் படியாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

2. பூதிவிக்ரமகேசரி, வீரபாண்டியன் என்பவனை வென்றான் என்று இச் சாசனம் கூறுகிறது. இந்த வீரபாண்டியன், இராஜராஜ சோழனுடைய மூத்த தமையனான ஆதித்ய கரிகாலன், தன் இளமைப் பருவத்தில் போர் செய்த வீரபாண்டியன் என்று சிலர் யூகிக்கிறார்கள். இந்த யூகத்தை ஆதாரமாகக் கொண்டு பூதிவிக்ரமகேசரி, ஆதித்தியன் கரிகாலன் இருந்த கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் (கி.பி. 970-க்குமுன்) இருந்தவன் என்று கூறுகிறார்கள்.

இந்த முடிவும் ஏற்கத்தக்கதன்று. ஏனென்றால், வெறும் பெயர் ஒற்றுமையைமட்டும் சான்றாகக்கொண்டு இது முடிவு செய்யப்பட்டது. பூதிவிக்ரமகேசரி போர் செய்த வீரபாண்டியனும், ஆதித்த கரிகாலன்