278 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
“‘பொருதல் தும்பை புணர்வ தென்ப’ (யாப்பருங்கலம், ஒழிபியல் உரை மேற்கோள்) இவற்றின் விகற்பமெல்லாம் பன்னிரு படலத்துட் காண்க.” (யாப்பருங்கலம், ஒழிபியல் உரைமேற்கோள்) இளம்பூரண அடிகள் கீழ்க்காணும் பன்னிருபடலச் சூத்திரத்தைத் தமது உரையில் (தொல். பொருளதிகாரம்) மேற்கோள் காட்டுகிறார். “தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன விரு வகைத்தே வெட்சி.” பன்னிருபடலத்திலே, தொல்காப்பியர் இயற்றியதாகக் கூறப் படுகிற சூத்திரங்கள் உண்மையில் தொல்காப்பியர் இயற்றியன அல்ல என்று இளம்பூராண அடிகள் மறுக்கிறார், ஏனென்றால், தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், தொல்காப்பியர் கூறியுள்ள கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்துகள், பன்னிருபடலத்தில் தொல்காப்பியர் இயற்றிய தாகக் கூறப்படுகிற சூத்திரங்களில் காணப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அவர் எழுதுவது வருமாறு: “பன்னிருபடலத்துள் ‘தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன விரு வகைத்தே வெட்சி என, இரண்டு கூறுபடக் கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை முதலாயின எடுத்துச் செலவு, எயில் காத்தல், போர் செய்தல் என்பன, அரசர்மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழிலெனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன்நிரை கோடலின் இவர் அரசனது ஆணையை நீக்கினராவர் ஆதலால் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிரு படலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினாரென்றால் பொருந்தாது. என்னை? ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமு மின்றி நேரிதின் முப்பத் திருவகை யுத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்’ (தொல். பொருள். மரபு) எனவும், |