பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு183

என்பவரிடத்தில் ஆங்கிலமும் கற்றார். இவர் வேண்டுகோளின்படி மகாவித்துவான் அவர்கள் சீர்காழிக் கோவையைப் பாடினார். அக் கோவையை வேதநாயகம் பிள்ளை தலைமையில் சீர்காழியில் 1861-ஆம் ஆண்டில் அரங்கேற்றினார். மகாவித்துவான் அவர்கள், வேத நாயகம் பிள்ளைமீது குளத்தூர்க் கோவை என்னும் ஐந்தினைக் கோவைப் பிரபந்தத்தைப் பாடினார். இது 438 செய்யுட்களைக்கொண்ட நூல்.

வேதநாயகம் பிள்ளை இசைக்கலையிலும் வல்லுநர். இவர் இயற்றிய நூல்கள்: சித்தாந்த சங்கிரகம், 1862. இது நீதிமன்றச் சட்டங்களைத் தொகுத்துக் கூறுவது, பெண்புத்தி மாலை, 1869, திருவருளந்தாதி, 1873. பிரதாப முதலியார் சரித்திரம், 1876 தமிழில் முதல் முதலாக எழுதப்பட்ட நாவல் இது. சர்வ சமய சமரசக் கீர்த்தனை, 1878. சுகுணசுந்தரி சரித்திரம், 1887 சத்திய வேதக் கீர்த்தனை, 1889. திருவருள்மாலை, தேவதோத் திரமாலை, தேவமாதா அந்தாதி.

கிருஷ்ண பிள்ளை (1827-1900)

திருநெல்வேலியில் பாளையங்கோட்டைக்கு அடுத்த இரட்டி யார்பட்டியில் பிறந்தவர். திருப்பாற்கடல்நாதன் கவிராயரிடம் கல்வி பயின்றவர். வைணவக் குடும்பத்தில் பிறந்து வைணவப் பற்று மிகுந்திருந்த இவர், பிற்காலத்தில் சிறிஸ்து சமயத்தில் சேர்ந்தார். அப்போது இவருக்கு என்ரி ஆல்பிரெட் கிருஷ்ண பிள்ளை என்று பெயர் ஏற்பட்டது. இவர் கம்ப ராமாயணத்தை நன்கு கற்றவர். இவர் இயற்றிய நூல் இரட்சணிய யாத்திரிகம் என்பது. இனிய பாக்களால் இயன்றது. 1894-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

நாகநாத பிள்ளை (1829-1884)

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் இவர் ஊர். நாகநாத பண்டிதர் என்றும் இவருக்குப் பெயர் உண்டு. வட்டுக் கோட்டைக் கலா சாலையில் கல்வி பயின்றார். தமிழ் ஆங்கிலம், சிங்களம், வடமொழி ஆகிய நான்கு மொழிகளைக் கற்றவர். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் இவரிடம் கல்வி கற்றார்.

நாகநாதபிள்ளை, ‘இலங்காபிமானி’ பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். வடமொழியிலிருந்து மானவ தருமசாத்திரம், பகவத்கீதை, மேக தூதம் சாந்தோக்கிய உபநிடதம், சாங்கிய தத்துவம் ஆகிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்.