பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு187

கல்வியில் தேர்ந்தவர். பல தனிப்பாடல்களைப் பாடியிருக்கிறார். நூல் இயற்றவில்லை.

மீனாட்சி சுந்தரக் கவிராயர் (?-1895)

பாண்டிநாட்டுச் சேற்றூருக்கு அருகியல் உள்ள முகவூரிற் பிறந்தவர். எட்டயபுரத்துச் சமஸ்தானப் புலவராக இருந்தார். முகவூர் கந்தசாமிக் கவிராயரின் (1823-1887) மகனார். இவர் இயற்றிய நூல்கள்: இராசவல்விபுரம் முத்துசாமிப்பிள்ளை மீது வண்டுவிடு தூது, பயோதரப் பத்து, எட்டயபுரம் ஆண்டியப்ப பிள்ளைமீது பிள்ளைத் தமிழ், உதாரசோதனை மஞ்சரி, ஒரு துறைக்கோவை, முருகர் அனுபூதி, கழுகுமலைத் திரிபந்தாதி, திருப்பரங்கிரிப் பதிகங்கள், குதிரைமலைப் பதிகம், வண்டுவிடுதூது, தனிச்செய்யுட்கள்.

சிதம்பர பாரதியார் (?-1897)

பாண்டிநாட்டுத் திருப்பூவணத்திற்குத் தென்கிழக்கிலுள்ள மழவராயனேந்தல் என்னும் ஊரில் பிறந்தவர். முத்தமிழ்ப் புலமை உள்ளவர். புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் அரசர்களிடம் அடிக்கடி சென்று பரிசில் பெற்றுவந்தார். பிற்காலத்தில் துறவு பூண்டு சிதம்பர சுவாமிகள் என்னும் பெயருடன் விளங்கினார்.

இவர் இயற்றிய நூல்களாவன: அம்பரீட்ச சரித்திரம், ‘உருக்குமணி கலியாணம்,’ குலசேகர சரித்திரம், ஞானாநந்தப் பேரின்பக் கீர்த்தனை, திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் பல சந்தக் கும்மி, துருவ சரித்திரம், பெரியபுராணக் கீர்த்தனை, மதுரை மீனாட்சியம்மை பலசந்தக் கும்மி, மயூரகிரிநாதர் வண்ணம்.

முருகேச பண்டிதர் (?-1899)

இவர் ஊர் யாழ்ப்பாணத்துச் சுன்னாகம். சிவசம்புப் புலவரிடத் திலும், சங்கர பண்டிதரிடத்திலும் தமிழ் பயின்றார். யாழ்ப்பாணம், சிதம்பரம், கும்பகோணம், சென்னை, திருப்பாற்றூர் முதலிய ஊர்களில் தமிழாசிரியராக இருந்தார். இலக்கணம் நன்கு பயின்றவராதலால் இவரை “இலக்கணக் கொட்டன்” என்று கூறுவர்.

மயிலணிச்சிலேடை வெண்பா, ஊஞ்சல், பதிகம், சந்திரசேகர விநாயகர், ஊஞ்சல், குடந்தை வெண்பா நீதிநூறு, பதார்த்த தீபிகை என்னும் நூல்களை இயற்றினார். பல தனிக் கவிகளைப் பாடியுள்ளார்.