பக்கம் எண் :

222மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

“சங்கத் தமிழைத் தளர்வின்றி யான்பெறவே
அங்கங் குடன்வந்து அளித்திட்டோன்-பொங்குபுகழ்
இன்போடு மீசனடி யெண்ணுநெல்லை யப்பனைப்போல்
அன்போ டுதவிசெய்வா ரார்?”

காசி விசுவநாத முதலியார் .

சைதாபுரம் என்பது இவர் ஊர். சைதாபுரம் என்பது சென்னைக்கு அருகில் உள்ள சைதாப்பேட்டை போலும். சென்னையில் இருந்தவர். டம்பாச்சாரி விலாசம். தாசில்தார் நாடகம். வேதப்பொருள் விளக்கம், யாப்பிலக்கண வினாவிடை என்னும் நூல்களை இயற்றினார். எடின்பர்க்கு பிரபு வந்தபோது “கும்மிப்பாட்டு” பாடினார் (1870) “கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிச்சிகள் நடிப்பு” என்னும் நூலை 1870-இல் இயற்றினார். டம்பாச்சாரி விலாசம் என்பது சென்னையில் இருந்த டம்பாச்சாரி என்பவரின் உண்மை வரலாறு. பிரம்ஹ சமாஜ நாடகம்’ என்னும் நூலை 1871-இல் இயற்றினார். இந்நூலுக்கு பூண்டி அரங்கநாத முதலியார் புரசை அஷ்டாவதானம் சபாபதிமுதலியார். வித்துவான் காஞ்சிபுரம் இராமசாமி நாயகர், திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை முதலியோர் சாற்றுக்கவிகள் வழங்கியுள்ளனர்.

கார்த்திகேயப் புலவர்

யாழ்ப்பாணத்துக் காரைத்தீவு இவர் ஊர், தம் தந்தையாராகிய முருகேசையரிடம் வடமொழியையும், சண்முக உபாத்தியாயரிடம் தமிழும் கற்றார். பின்னர், இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் தமிழ் பயின்றார். இவருடைய தந்தையாரான முருகேசையர் “தன்னை யமகவந்தாதி” என்னும் நூலை இயற்றி அதனை முடிக்கும் முன்பே 1830-இல் காலமானார். அவர் முடிக்காமல் விட்டிருந்த முப்பது செய்யுட்களைக் கார்த்திகேயப் புலவர் பாடி முடித்தார். இவர், சிதம்பரம் சென்றிருந்தபோது திருத்தில்லைப் பல் சந்தமாலை என்னும் நூலை இயற்றினார். சி. வை. தாமோதரம் பிள்ளை. மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை இவர்களுடன் பழகியவர்.

கிருஷ்ணையங்கார்

அஷ்டாவதானம் செய்தவர். முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவராக இருந்தார். இவர் இயற்றிய நூல்களாவன: