பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு283

“வேறு பலர் கோடு (கொம்பு) பெற்ற நெடி
லுயிர்மெய்களைக் கோட்டுட்சுழித்து மெழுதுவர்.
வரலாறு: கொல்-கோல் என வழங்கும்.”

என்று வீரமா முனிவர் அமைத்த குறியீட்டைக் காட்டினார்.

வீரமா முனிவர் அமைத்த இக்குறியீடுகள், சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே எல்லோராலும் பயிலப்பட்டபடியினாலே

“எகர ஒகர மெய்புள்ளி பெறும்”

என்னும் பழைய இலக்கணச் சூத்திரம் மாற்றியமைக்கப் படவேண்டியதாயிற்று. ஆகவே. இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயர் தாமியற்றிய நன்னூற் காண்டிகையை 1847-ஆம் ஆண்டு அச்சியற்றியபோது இச்சூத்திரத்தைத் தலைகீழாக மாற்றியமைத்தார்.

“தொல்லைவடிவின எல்லா எழுத்தும் ஆண்டு
எய்தும் ஏகாரம் ஒகாரம் மெய் புள்ளி”

என்று சூத்திரத்தை மாற்றினார். மாற்றியதற்கு இவ்வாறு விளக்கங் கூறினார்:

தொல்லாசிரியர் முதலாயினோர்,

“பழையன கழிதலும் புதியண புகுதலும்
வழுவல கால வகையினானே”

எனவும்.

“இறந்தது விலக்கல் எதிரது போற்றல்”

எனவுங் கூறினமையால், எகர மொகர மெய் புள்ளிபெறும் என்ற இச்சூத்திரத்தை ஏகார மோகார மெய் புள்ளி பெறும் எனத் திருப்ப வேண்டிற்று என்னெனின், இக்காலத்தார் ஏகார ஒகாரங்களுக்கே புள்ளியிட்டெழுதுவது பெருவழக்காயினமையா லென்க.”

இராமாநுச கவிராயர், ஏகாரம் ஒகாரம் புள்ளி பெறும் என்று கூறுவது, ஏகார ஒகார உயிர்மெய் எழுத்துக்களின் கொம்புகள் மேலே சுழிக்கப்படுவதையே.

ஆனால், பழைய இலக்கண முறைப்படி எகர ஏகார ஒகர ஓகாரங்கள் எ எ ஒ ஓ என்று எழுதப்பட வேண்டியவை. இக் காலத்து எ ஏ ஒ ஓ என்று எகர ஒகரங்களின் புள்ளி எடுபட்டு ஏகார ஓகாரங்கள்