பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்125

  

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

நட: (தனதுள்)
  55ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்!
  

(ஆசிரியத்துறை)

நற்:  நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன்
ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம்.
காணப் பிறர் பொருள் கள்ளல மாதலினால்
வாணிக்குரித்தெனக்கேட்டபின்வௌவலம்வாரலையோ.     2
  

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

நட:  (தனதுள்)
நாராயணன் அன் றுரைத்தது மெய்யே!
  

(ஆசிரியத்துறை)

நற்:  நாணமி லாமகள் சாவுக் கினிவெகு நாள் களில்லை
காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டுகொள்வை.
பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால்
வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ.     3
  

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

நட: (தனதுள்)
ஆயினும் இத்தனை பாதகனோ இவன்!


கட்டம் - கஷ்டம். அவள் தன் தலைதொட்டு - அவளுடைய தலையை உன் கையினால் தொட்டு. நவின்ற - சொன்ன. கள்ளலம் - களவு செய்யமாட்டோம். வௌவலம் - பற்றிக் கொள்ள மாட்டோம். காணிய - காண, பார்க்க. விரும்பலை - விரும்பவில்லை.

(ஆசிரியத்துறைச் செய்யுள்கள் மூன்றும், தன் மகளுடன் பலதேவன் களவொழுக்கம் கொண்டிருந்து, இப்போது அவன் வாணியை மணம் செய்யப்போகும் வதந்தியைக் கேட்ட ஒரு தாயின் கூற்று.)