பக்கம் எண் :

  

போப் ஐயர் (1820-1907)

(Rev. G.U. Pope, M.A., D.D.,)

போப் ஐயர் ஆங்கிலேயர், வெஸ்லியன் மிஷன் சார்பாகத் தமிழ்நாட்டிற் சமயத் தொண்டு செய்து வந்தார். 1839 முதல் பத்து ஆண்டுகள் திருநெல்வேலியில் இருந்தார். அங்கிருக்கும்போது சாயர்புரம் என்னும் இடத்தில் ஒரு பாடசாலையை நிறுவினார். பிறகு தஞ்சாவூரில் எட்டு ஆண்டுகள் வசித்து அங்குள்ள மிஷனையும் உயர்தரப் பாடசாலையையும் மேற்பார்வையிட்டு நிலைப்படுத்தினார். பிறகு, உதகமண்டலம் சென்று சில ஆண்டுவரையில் தொண்டாற்றினார். 1871-இல் பெங்களூருக்குச் சென்று மத குருவாகவும் பிஷப் காட்டன் பாடசாலையின் தலைமை ஆசிரியராகவும் உத்தியோகம் செய்து வந்தார். 1882-இல் இங்கிலாந்து சென்று மான்செஸ்டர்1 மாகாணத்து எஸ்.பி.ஜி. காரியதரிசியாய் மூன்றாண்டுகள் இருந்தார். பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராக அமர்ந்திருந்தார். 1894-ஆம் ஆண்டில் காந்தர்பரி நகரத் தலைமை அத்யட்சகரால் ‘வேதசாஸ்திரி’ என்னும் டி.டி.2 பட்டம் இவருக்கு அளிக்கப்பட்டது.

போப் ஐயர், மகா வித்துவான் இராமானுசக் கவிராயரிடம் தமிழ் கற்றார். தமிழ் மொழியின் உண்மைச் சிறப்பை உலகம் அறியும்படி செய்தவர்களில் இவரும் ஒருவர். இவர் இயற்றிய தமிழ்சார்பான நூல்களாவன : திருவாசகம் ஆங்கில மொழிபெயர்ப்பு (இஃது இவரது 80 -ஆவது வயதில் எழுதி முடிக்கப்பட்டது), நாலடியார் ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள். இவையன்றியும், தமிழ்ச் செய்யுள்களைத் தொகுத்து, “தமிழ் செய்யுட் கலம்பகம்” என்னும் பெயருடன் அச்சிட்டு வெளியிட்டார்; மத சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களைத் தமிழில் எழுதி வெளியிட்டிருக்கிறார். புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல்களிலிருந்து சில பாட்டுக்களை ஆங்கிலத்திற் செய்யுளாக மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் இலக்கியங்களைப் பற்றி பல3 பத்திரிகைகளிற் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.