துரு ஐயர் (Rev. W. H. Drew) இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயர் அவர்களிடம் தமிழ் கற்றவர். கவிராயர் அவர்கள் எழுதிய இராமாநுச காண்டிகை என்னும் நன்னூல் உரைப்பாயிரத்தில், ”இல்லையாந் தன்னிகரென வுலகோ துறூஉ முல்லையாந் துருவெனு மொளிகொள் போதகனும்.” என்று கூறப்பட்டவர் இவரே. துரு ஐயர் சமய சம்பந்தமான சில துண்டுப் பிரசுரங்களை எழுதியிருக்கிறார். திருக்குறளின் சில அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பண்டைக்காலத்தில் இருந்த தமிழறிந்த ஐரோப்பியர்கள் பற்பலராவர். அவர்களில் ஒருசிலரை மட்டும் மேலே எழுதினோம். ஏனையோரைப் பற்றி எழுதப் புகுந்தால் புத்தகம் பெரிதாகும் என அஞ்சி எழுதாமல் விடப்பட்டது. ஷுல்ஸ் ஐயர் (1689-1760), வால்த் ஐயர் ( 1729-1760), சுவார்ச் ஐயர் ( 1726-1741), அருளானந்தர் என்னும் ஜான்-டி-பிரிட்டோ, பிரெஞ்சியரான பிஷப் சார் ஜன்ட், ஜுலியன் உவின்சன், வாக்கர் ஐயர், கிரால் ஆசிரியர் முதலிய இன்னும் பற்பல தமிழறிந்த ஐரோப்பியரைப் பற்றி இங்கு விரிவாக எழுத இடமில்லாதது பற்றி வருந்துகிறோம். இவர்களைப்பற்றித் தனிப் புத்தகம் எழுதுவது நலம். இப்போது உள்ள தமிழறிந்த ஐரோப்பியரைப்பற்றி இங்கு எழுதப்படவில்லை. |