பக்கம் எண் :

130மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 17

நிகண்டு முதலிய நூல்களை ஏட்டுப் பிரதியிலிருந்து ஆராய்ந்து அச்சிட்டு வெளிப்படுத்தினார். வில்லிபுத்தூரார் பாரதத்தை ஆராய்ந்து அச்சிடுவதற்காகச் சென்னையில் ஒரு கமிட்டி (சபை) ஏற்படுத்திய போது அதன் பதிப்பாசிரியராக இவரை நியமித்தார்கள். ஆனால், இவர் ஏடுகளைத் தேடிக் கொண்டிருக்கும் போதே திடீரெனக் காலமானார்.

பிலிப்பு-தெ-மெல்லோ:(1723-1790) - இவர் உயர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். இலங்கையைச் சேர்ந்த கொழும்பில் கேட்வாசல் முதலியார் என்னும் உயர்தர உத்தியோகத்தராயிருந்த சைமன்-தெ-மெல்லோ என்பவரின் புதல்வர். தமிழ், எபிரேயு, கிரீக்கு, லத்தீன், டச்சு, போர்ச்சுகீஸ் பாஷைகளை நன்கு கற்றவர். சமய ஊழியம் செய்து, பின்னர்க் கொழும்பு நார்மல் பாடசாலையில் ஆசிரியராக இருந்தார். 1753 வருசம் இலங்கை வட மாகாணத்திற்குப் பெரிய மத குருவாக ஏற்படுத்தப்பட்டார். அரசாங்கத்தாராலும் மற்றவர்களாலும் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் “சத்தியத்தின் செயம்”என்னும் நூலையும், கேட்வாசல் முதலியார் உத்தியோகம் செய்திருந்த மருதப்ப பிள்ளை என்பவர்மேல் “மருதப்பக் குறவஞ்சி”என்னும் நூலையும் இயற்றியிருக்கிறார். இவர் இயற்றிய 120 செய்யுள்கள் சூடாமணி நிகண்டிற் சேர்க்கப்பட்டு, 1859-இல் மானிப்பாய் அச்சுக்கூடத்தில் அச்சிடப் பட்டிருக்கின்றன. இன்னும் மத சம்பந்தமாக சில நூல்களையும் இவர் இயற்றியிருப்பதாகத் தெரிகிறது. கூழங்கைத் தம்பிரான் என்பவர் “யோசேப்புப் புராணம்” இயற்றி, அதனை இவருக்கு உரிமை செய்ததாகக் கூறுவர்.

முத்துசாமிப் பிள்ளை:- இவர் புதுச்சேரியிற் பிறந்தவர். தமிழைச் செவ்வனே கற்றுக் கவியியற்றும் வல்லமை வாய்ந்தவர். தெலுங்கு, சமக்கிருதம், லத்தீன், ஆங்கிலம் என்னும் மொழிகளையும் கற்றவர். சென்னைக் கல்விச் சங்கத்தின் மேலாளராக6 இருந்தார். தமிழ்ப் புலமை வாய்ந்த எல்லிஸ் துரையவர்கள் விருப்பப்படி இவர் தமிழ்ச் சில்லாக்களில் யாத்திரை செய்து ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கொண்டு வந்து, சென்னைக் கல்விச்சங்கப் புத்தகசாலைக்குக் கொடுத்தார். வீரமாமுனிவர் சரித்திரத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார். கிறித்து மதத்தைத் தாக்கி, சந்தகவி பொன்னம்பலம் என்பவர் எழுதியதை மறுத்துத் திக்காரம்என்னும் நூலைப் பாட்டும் வசனமுமாக இயற்றி, அதனைப் பல அறிஞர் கூடிய சபையில் அரங்கேற்றிப் பல்லோராலும் புகழ்ந்து கொண்டாடப்பட்டார். எல்லிஸ்