பக்கம் எண் :

42மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 17

ருக்கவில்லை. இறந்துபட்ட பெருந்தேவனார் பாரதமும், தகடூர் யாத்திரையும் போக, வழக்காற்றில் உள்ள சிலப்பதிகாரம் ஒன்றினைத் தவிர்த்து, “உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்” நூல் தமிழில் வேறொன்றும் இல்லை. எனவே, தனி உரைநடை நூல்கள் பண்டைக் காலத்தில் இயற்றப்படவில்லை என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது.

தமிழ்த் தொல்லாசிரியர்கள் பாட்டையே பெரிதும் போற்றிச் செய்யுள்நடையிலேயே எல்லா நூல்களையும் இயற்றிவைத்தனர் என்பது உண்மை. இதனால், பண்டை ஆசிரியர்களுக்கு உரைநடை எழுதத் தெரியாது என்று நினைக்கக்கூடாது. அவர்கள் சிறந்த உரைநடையில் நூல் இயற்றும் ஆற்றல் வாய்ந்தவர் என்பதிற் சற்றும் ஐயமில்லை. இறையனார் அகப்பொருளின் உரைப்பாயிரம் ஒன்றே, அவர்கள் உரைநடை எழுதுவதில் தலைசிறந்தவர் என்பதற்குச் சான்று பகரும். இறையனார் அகப்பொருளின் உரைப்பாயிர உரைநடையின் அழகையும் இனிமையையும் படித்து இன்புறாத தமிழர் உண்டோ? அத்தகைய தீஞ்சுவை சொட்டும் உரைநடையினை இயற்றியருளிய பண்டைத் தமிழர், தனி உரைநடை நூல்களை இயற்ற நினைத்திருப் பாரானால், எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கக் கூடுமன்றோ? தனி உரைநடை நூல்கள் இயற்றுவது அக்காலத்தில் வழக்கமில்லாத படியால், அவர்கள் உரைநடை நூல்களை இயற்றாமல், எல்லா நூல்களையும் செய்யுளிலே செய்து வைத்தனர். (ஸ்ரீபுராணம் முதலான, சமண சமயத்தவரால் இயற்றப்பட்ட சில உரைநடை நூல்கள் உள. அவை தமிழ் என்றும் சொல்லக்கூடாமல் சமக்கிருதம் என்றும் சொல்லக்கூடாமல் மணிப்பிரவாள நடையாக இருப்பதால், அவற்றைத் தமிழ் உரைநடை நூல்கள் என்று யாம் கொள்ளவில்லை.) இங்ஙனம் பண்டைத் தமிழர் செய்யுள் நடையில் மட்டும் நூல் இயற்றி, உரைநடையில் நூல் இயற்றுவதை ஏன் புறக்கணித்தனர்? உரைநடை எழுத நன்கறிந்திருந்தும், பண்டைக் காலத்தில் உரைநடை நூல் எழுதும் வழக்கம் ஏற்படாத காரணம் என்ன? அவற்றை ஆராய்வோம்.

இக்காலத்தில் வருத்தமின்றி எழுதுவதற்கேற்ற கருவிகளும் பொருள்களும் ஏராளமாக அமைந்திருக்கின்றன. காகிதம், பேனா, பென்சில் முதலிய கருவிகள் எழுதுவோருக்கு யாதொரு வருத்த மின்றி உதவியாய் நிற்கின்றன. ஆனால், பண்டைக்காலத்தில் எழுதுகருவிகள் இவ்வளவு துணையாய் அமைந்திருக்கவில்லை.