பக்கம் எண் :

50மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 17

இதிகாசங்களையும் உரைநடை நூல்களாக எழுதி வெளியிடத் தொடங்கினார்கள். அன்றியும், இந்த நூற்றாண்டில், கிறித்துவ மதத்தாருக்கும், இந்து மதத்தாருக்கும், சைவருக்கும் வைணவருக்கும், மதச்சார்பான வழக்கு எதிர்வழக்குகள் ஏற்பட்ட படியால், அவரவர்கள் தத்தம் மதத்தைப் புகழ்ந்தும் அயலார் மதத்தைக் குறை கூறியும், உரைநடைப் புத்தகங்களையும், துண்டு வெளியீடுகளையும் எழுதி அச்சிட்டு வழங்கி வந்தனர்.

இவை ஒரு புறமிருக்க, 19-ஆம் நூற்றாண்டில் கல்விவளர்ச்சியை முன்னிட்டுச் சில சங்கங்கள் தோன்றி, தமிழ் உடைநடை நூல்களை வெளியிட உதவிபுரிந்தன. `சென்னைக் கல்விச் சங்கம்’4 என்னும் ஒரு சபை ஏற்பட்டு, பாடப் புத்தகங்களையும் மற்றும் சில உரைநடைப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டது. ‘சென்னைப் பாடசாலைப் புத்தகச் சங்கம்’5 என்னும் சங்கம் 1850-இல் ஏற்பட்டுப் பல உரைநடை நூல்களை எழுதி வெளியிட்டு உதவிற்று. இந்தச் சபையோர் நல்ல உரைநடை நூல் எழுதுவோருக்குப் பொருள் உதவிசெய்து, பரிசளித்து வந்தனர். ‘இராபின்சன் குரூசோ,’ ‘இந்திய சரித்திரம்,’ ‘உலக சரித்திரம்’ முதலிய சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் இச்சங்கத்தார் அளித்த பரிசு காரணமாக வெளி வந்தவை. அக்காலத்தில் வெளிவந்த சிறந்த உரைநடை நூல்கள் மீண்டும் மீண்டும் அச்சிடப் படாமையால் இப்போது மறைந்துவிட்டன. சென்ற நூற்றாண்டில் அரசாண்ட கிழக்கிந்திய அரசாங்கத்தார், ‘நன்னூல்’ இலக்கணத்தை உரைநடையாக எழுதுவோருக்கு வெகுமதி யளிப்பதாக விளம்பரம் செய்தார்கள். அதன் பயனாகத்தான் தமிழில் உரைநடை இலக்கணங்கள் தோன்றின. இவையன்றியும் சென்ற நூற்றாண்டில்தான் செய்தித் தாள்களும்6 மாத வார வெளியீடுகளும் தமிழ்நாட்டில் தோன்றி உலாவத் தொடங்கின. இவ்வாறு பற்பல வழிகளில் தமிழ் உரைநடை இலக்கியங்கள் சென்ற 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வேரூன்றிச் செழித்தோங்கி வளரத் தொடங்கின.

அடிக்குறிப்புகள்

1. Flos Sanctorum.         2. Doctrina Christiana.

3. Anriquez         4. Madras College

5. The Madras School Book Society    6. News Papers