100 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18 |
“இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி விளங்கொளி மேனி விண்ணவர் வியப்பப் பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத் திருவின் செய்யோள் ஆடிய பாவையின் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ஓவியன் உள்ளத்து உன்னியது வியப்போன் காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து,” என்று மணிமேகலை (5-ஆம் காதை : 1-8) கூறுகிறது. வாசவதத்தை என்னும் அரசகுமாரி தான் கற்ற இசைக் கலையை அரங்கேற்றியபோது அவள், எழினியால் அமைந்த மண்டபத்திலே இருந்து இசை அரங்கேற்றினாள் என்று பெருங்கதை என்னும் காவியம் கூறுகிறது. அந்த எழினி மண்டபத்தை “கண்டங் குத்தியமண்டப எழினி” என்று கூறுகிறது. பல நிறமுள்ள திரைச்சீலைகளினால் கண்டக்கோல் நிறுத்தி மண்டபமாக அமைந்த அரங்கம் என்பது இதன் பொருள். மேலும், “எதிர்முகம் வாங்கி எழினி மறைஇப் பதுமா நங்கையும் பையெனப் புகுந்து” என்றும், “கஞ்சிகை எழினியில் சுரந்து நிற்போரும்” என்றும் பெருங்கதை என்னும் காவியம் கூறுகிறது. இவற்றால், திரை என்னும் பொருள் உடைய எழினி என்னும் சொல் தமிழ் மொழியில் வழங்கி வந்தது என்பது தெரிகின்றது. இந்த எழினி என்னும் சொல்லைத்தான் சமஸ்கிருத மொழி கடனாகப் பெற்றுக்கொண்டு இதனை யவனிகா என்று திரித்து வழங்கியது என்பதை விளக்குவோம். சம்ஸ்கிருத மொழியில் ழகர எழுத்து இல்லாதபடியால் சம்ஸ்கிருதக்காரர்கள் எழினியில் உள்ள ழகரத்தை உச்சரிக்க முடியாமல் ழகரத்தை வகரமாக்கி உச்சரித்தார்கள். அதாவது எழினியை எவினி என்று உச்சரித்தார்கள். பிறகு எவினி, யவனியாகி அதன் பின்னர் யவனி, யவனிகா ஆயிற்று.. |