110 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18 |
என்றும் பொதிகை நிகண்டு பேசுகிறது. இவ்வாறே ஏனைய நிகண்டுகளும் கூறுகின்றன. எனவே, ஆல் அல்லது ஆலம் என்னும் சொல்லுக்குத் தண்ணீர் என்னும் பொருள் உண்டென்பதைத் திட்டமாக அறிகிறோம். சில சமயங்களில் மேகத்திலிருந்து நீர்த் துளிகள் கட்டிக் கட்டியாக நிலத்தில் விழுவது உண்டு. இந்த நீர்கட்டிகளை ஆலங்கட்டி என்று தமிழில் கூறுகிறோம். (ஆல், ஆலம் : நீர். ஆலங்கட்டி : நீர்க்கட்டி) கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளில் ஆலங்கட்டியைஆலி என்று கூறுகிறார்கள். தமிழர் ஆலங்கட்டி என்றும், தெலுங்கரும், கன்னடத்தாரும் ஆலிகல் என்றும், மலையாளத்தார் ஆலிப்பழம் என்றும் கூறுகிறார்கள். ஆலங்கட்டியைத் தமிழில் ஆலி என்றும் கூறுவது உண்டு. “ஆலமும் விடமும் அலர்ந்த பூவும் மழையும் நீரும் மழுவும் ஆலும் துளிபெய லாலி உறைதுளி யாகும் ஆலி யாலங் கட்டி யாகும்” என்பன சேந்தன் திவாகரம். “துளியும் நீர்கொள் ஆலங் கட்டியும் மழையும் ஆலி யெனவகுத் தனரே” என்பது பிங்கல நிகண்டு. “ஆலியே யாலங் கட்டித் துளி காற்றோடமுத நீராம்” என்பது அரும்பொருள் விளக்க நிகண்டு. “ஆலி அழிதுளி பொழிந்த வைகறை வால் வெள்ளருவிப் புனல்மலிந் தொழுகலின்” -(அகம். 308 : 3-4) “நன்றே காதலர் சென்ற வாறே யாலித் தண்மழை தலை இய வாலிய மலர்ந்த முல்லையு முடைத்தே”. |