114 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18 |
அதன் வடக்குப் பக்கத்திலே வைகையாறும், மற்றப் பக்கங்களில் அகழி நீரும் அமைந்து நீரின் நடுவிலே அமைந்திருந்தபடியால் ஆலவாய் (நீரை இடமாக உள்ளது) என்னும் காரணப் பெயர் ஏற்பட்டது. ஆகவே, ஆலவாய் என்பது தமிழ்ச்சொல் என்பது தெளிவாகிறது. இதன் உண்மையை அறியாத பிற்காலத்துப் புராணிகர், ஆலம் (விஷம்) என்னும் சொல்லிலிருந்து ஆலவாய் என்னும் பெயர் தோன்றியது என்றும், பாம்பு ஆலத்தை (விஷத்தை)க் கக்கியபடியால் இந்நகரத்துக்கு இப்பெயர் வந்தது என்றும் பொருத்தமற்ற போலிக் கதையைக் கட்டிவிட்டனர். ஆல், ஆலம் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு நீர் என்னும் பொருள் உண்டு என்பதை அவர்கள் அறியாமல் இவ்வாறு பொருந்தாத போலிக் கதைகளைக் கூறியுள்ளனர். மரங்களுக்கு நீர்பாய்ச்ச அமைக்கப்படும் பாத்திக்கு ஆலவால என்று கன்னட மொழியில் பெயர் கூறுகிறார்கள். நீர் பாய்ச்ச அமைக்கும் பாத்திக்கு ஆலாலம் என்னும் பெயர் தமிழில் உண்டு என்பதை அ. குமாரசுவாமிப் புலவர் இயற்றிய இலக்கியச் சொல் அகராதியில் காணலாம். எனவே, ஆலவால, ஆலாலம் என்னும் பெயர்கள் ஆல்(நீர்) என்னும் சொல்லடியாகப் பிறந்த சொற்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆலாஸ்ய என்னும் சொல் ஒன்று உண்டு. இதற்குப் பொருள் முதலை என்பது. இச்சொல் இப்பொருளில் கன்னட மொழியில் வழங்குகிறது. ஆனால், இது சமஸ்கிருதச் சொல் என்று கூறப்படுகிறது. இச்சொல் சமஸ்கிருதமாக இருக்குமானால், இது திராவிட மொழியி லிருந்து சமஸ்கிருதத்திற்குச் சென்ற சொல்லாக இருக்கவேண்டும். ஏனென்றால், நீர் என்னும் பொருள் உள்ள ஆல், ஆலம் என்னும் திராவிடச் சொற்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதாலும், நீரில் வாழும் முதலையைக் குறிக்க இச்சொல் வழங்கப்படுவதாலும் என்க. வடமொழியில் மதுரை மாநகரை ஆலாஸ்யம் என்பர். இதுவும் ஆலவாய் என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து தோன்றியதாதல் வேண்டும். நீர் என்னும் பொருள் உள்ள ஆல் என்னும் சொல்லை ஆராய்ந்ததன் பலனாக ஒரு பழைய தமிழ்ச் சொல்லின் உண்மை விளங்குகிறது. அச்சொல் ஆறு என்பது. பாலாறு, பெண்ணையாறு, காவிரியாறு, பொருனையாறு, வைகையாறு முதலிய தமிழ்நாட்டு ஆறு களுக்குப் பழந்தமிழர் ஆறு என்று பெயரிட்டிருக்கின்றனர். திராவிட இனத்தாராகிய மலையாளிகளும், கன்னடத்தாரும் ஆறு என்று பெயர் . |