பக்கம் எண் :

132மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18

ஊழியர்களாகக் கொண்டிருந்தார்கள். இதனைப் பழைய இலக்கியங்களி லிருந்து அறியலாம்.

பாண்டிய அரசனுடைய அரண்மனையில் பாண்டிமா தேவியின் ஊழியப் பெண்களில் கூனர், குறளர், ஊமர்களும் இருந்தார்கள்.

‘கூனுங் குறளும் ஊமுங் கூடிய
குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர’

(சிலம்பு. 20 : 17)

பாண்டிமா தேவியார் பாண்டியனின் மண்டபத்துக்குச் சென்றார் என்று கூறப்பட்டுள்ளார்.

சேர மன்னனாகிய செங்குட்டுவன் வடநாட்டு யாத்திரை யிலிருந்து வஞ்சிமா நகருக்குத் திரும்பிவந்த போது, கூனர்களும், குறளர்களுமாகிய ஊழியர்கள் அரண்மனைக்கு ஓடிவந்து சேரமா தேவியிடம் அரசன் வந்துவிட்ட செய்தியைக் கூறினார்கள்.

‘சிறுகுறுங் கூனும் குறளும் சென்று
பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான்’

(சிலம்பு. 27 : 214-15)

சேரன் செங்குட்டுவன் தன் தேவியுடன் அரண்மனையிலுள்ள நிலா முற்றத்துக்குச் சென்றபோது அரசியுடன் கூனர், குறளர் முதலிய ஊழியர்களும் சென்றார்கள்.

‘மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும்
கூனுங் குறளுங் கொண்டனர் ஒருசார்
வண்ணமும் கண்ணமும் மலர்ப்பூம பிணையலும்
பெண்ணணிப் பேடியர் ஏந்தினர் ஒருசார்’

(சிலம்பு. 26 : 57-60)

அவந்தி நாட்டரசனாகிய பிரச்சேதன அரசனுடைய அரண்மனை யிலும் தேவியின் ஊழியப்பெண்களாகக் கூனர், குறளர் முதலியோர் இருந்தனர் என்று பெருங்கதை என்னும் காவியம் கூறுகிறது.

‘கூனுங் குறளும் மாணிழை மகளிரும்
திருநுதல் ஆய்த்துத் தேவியர் ஏறிய
பெருங்கோட் டூர்திப் பின்பின் பிணங்கிச்
செலவு கண்ணுற்ற பொழுதில்’

(பெருங்கதை-உஞ்சை. 178-81).