தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு | 143 |
கட்டமைந்த உடம்புள்ளவர்களைப் பார்த்து உடல்கட்டுமுள்ளவர் என்று கூறுகிறோம். இதற்குக் கன்னடத்தில் மைகட்டு (மெய் கட்டு) என்று கூறுவர். இந்திரனுக்கு உடம்பெல்லாம் கண் உண்டு என்று புராணக் கதை கூறுகிறது. கண்ணாயிரம் என்று பெயர் தமிழில் உண்டு. கன்னடத்தார் இந்திரனுக்கு மைகண்ண (மெய்கண்ணன் - உடம்பில் கண்ணை யுடையவன்) என்று பெயர் இட்டுள்ளனர். மைகூடு (மெய்கூடுதல்), மையிளி (மெய் இழிதல்) என்னும் சொற்களும் கன்னடத்தில் உண்டு. உடல் பருத்தல், உடல் மெலிதல் என்னும் பொருளை உடையவை இச்சொற்கள். மைநெற என்னும் சொல் பொருள் நிறைந்த கன்னடச் சொல். பெண்கள் வயதடைவதை இச்சொல் சுட்டுகிறது. மைநெறெ என்பது மெய்நிறை என்பதாகும். உடல் நிறைதல் என்பது இதன் பொருள். பெண்கள் உடல் நிறைந்து முழுவளர்ச்சியடைவதைக் குறிக்கிறது இந்த அழகான பொருள் பொதிந்த சொல். ஆண்களும் முழு வளர்ச்சி யடைவதைக் குறிக்கிறது இந்த அழகான பொருள்பொதிந்தசொல். ஆண்களும் முழுவளர்ச்சியடைந்து மெய்நிறைகிறார்கள். ஆனால், ஆண்களின் முழுவளர்ச்சி பெண்களின் முழுவளர்ச்சி போல, வெளிப்படையாகத் தெரிவதில்லை. பெண்களுக்கு மட்டுமே உடல்வளர்ச்சி வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகவே பெண்கள் முழுவளர்ச்சியடைந்து மணப்பருவம் அடைந்தார்கள் என்பதை மைநெறெ (மெய்நிறை) என்னும் சொல் நன்றாகக் குறிப்பிடுகிறது. மூத்திரம் என்னும் சொல்லைத் தமிழில் இப்போது வழங்கு கிறோம். சிறு நீர் என்றும் கூறுகிறார்கள். மூத்திரம் என்பது வடமொழி. கன்னடத்தில் மைநீரு என்று ஒருசொல் உண்டு. மெய்நீர் என்பதன் திரிபு மைநீரு என்பது. இதை முன்னீரு என்றும் கன்னடத்தில் வழங்கு கிறார்கள். சிறுநீர், மூத்திரம் என்னும் பொருளுடைய மைநீரு (மெய்ந்நீர்) முன்னீரு என்பன நல்ல திராவிடச்சொற்கள். முன்னீர் என்பது மைநீரு என்பதன் திரிபு. (முன்னீர் என்று கடலுக்குத் தமிழில் ஒரு பெயர் உண்டு. கன்னடத்திலும் கடல் என்னும் பொருளில் முன்னீர் என்னும் சொல் வழங்குகிறது.) ஆனால், சிறுநீர், மூத்திரம் என்னும் பொருளில் முன்னீரு என்று வழங்குகிற கன்னடச்சொல், உண்மையிலேயே மைநீரு (மெய்ந்நீர்) என்னும் சொல்லின் திரிபுபெற்றுத் தோன்றுகிறது.. |