152 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18 |
பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக் கனியமற் றின்னணம் கடவுள் கூறினான்” - (இரதநூபுரச் சருக்கம், 78) இதில், ‘பயாபதி என்னும் அரசன் முனிவர் ஒருவரைக் கண்டு வணங்கி, தனக்கு அறநெறி கூறவேண்டும் என்று வேண்டிக் கொள்ள, அக்கடவுள் (முனிவர்) அவனுக்கு உபதேசம் செய்தார்’ என்று கூறப்படுகிறது. பெருங்கதை என்னும் நூலாரும் முனிவர்களைக் கடவுளர் என்னும் சொல்லால் பல இடங்களில் குறிப்பிடுகிறார். “பட்டதை யறியான் பயநிலங் காவலன் கட்டழ லெவ்வமொடு கடவுளை வினவ” - (இலாவாணகாண்டம் : அவலம் தீர்ந்தது) என்றும், “அளப்பருவம் படிவத் தறிவர் தானத்துச் சிறப்பொடு சென்று சேதீயம் வணங்கிக் கடவது திரியாக் கடவுளர்க் கண்டு” - (வத்தவகாண்டம் : கனாவிறுத்தது) என்றும், “வடுத்தீர் மாதவம் புரிவேன் மற்றெனக் கேட்டவன் கலுழ வேட்கையின் நீங்கிக் காசறு கடவுட் படிவம் கொண்டாங்கு ஆசறச் சென்றபின் ... ... ... ... ... ... ...” - (வத்தவகாண்டம் : விரிசிறை வதுவை) என்றும், “கண்ணுறக் கடவுள் முன்னர் நின்று” - (மேற்படி பிரச்சேதனன் தூதுவிட்டது) “காவும் தெற்றியும் கடவுட் பள்ளியும்” - (மகதகாண்டம் : புறத்தொடுங்கியது) கூறப்பட்டது காண்க. இவற்றில் துறவிகள் கடவுள் என்னும் சொல்லால் சுட்டப் பட்டிருப்பது காண்க. திருக்கலம்பகம் என்னும் நூலிலும் இச்சொல் இப்பொருளில் வழங்கப்படுகிறது. |