நகில் குறைத்தல்* ‘நகில் குறைத்தல்’ என்பது ‘மகளிர்முலை அறுத்தல்’ என்று பொருள்படும். பெண்மகள் ஒருத்தி ஒரு காரணம் பற்றித் தானே தனது மார்பில் உள்ள கொங்கையை அறுத்தெறிதல் என்பது இதன் கருத்தாகும். ஆனால், இஃது இயலுமா? இயற்கையில் நடைபெறக் கூடிய செயலா? இத்தகைய செயலை நாம் கண்டதில்லையே! இது நம்பத்தகுந்த செய்தியல்லவே! ஆம். இயற்கைக்கு மாறுபட்ட, உலகில் நடைபெறாத, ஒருவரும் கண்டிராத செய்திதான் இது. ஆனால், இச்செய்தி பண்டைக்காலத்துத் தமிழிலக்கியங்களிலே காணப்படுகிறது. சிலப்பதிகாரத்திலும், நற்றிணைச் செய்யுளிலும், ஆண்டாள் திருவாய்மொழியிலும் இச்செய்தி கூறப்படுகிறது. இயற்கைக்கு மாறுபட்டதும் நம்பத்தகாதது மான இச்செய்தி, தமிழர் போற்றும் உயர்ந்த இலக்கிய நூல்களிலே சிறந்த புலவர்களால் கூறப் பட்டுள்ளது. ஆகவே, இதன் உண்மைப் பொருளை ஆராய வேண்டுவது நமது கடமையாகும். இதன் கருத்தை ஈண்டு ஆராய்வோம். சிலப்பதிகாரக் காவியத் தலைவியராகிய கண்ணகியார் தாமே தமது கொங்கையைக் குறைத்துக்கொண்ட (அறுத்தெறிந்த) செய்தி அக்காவிய நூல் பல இடங்களில் கூறப்படுகிறது. “பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் ஒருமுலை இழந்தாளோர் திருமா பத்தினி” (பதிகம் 4-5) “முத்தார மார்பில் முலைமுகந் திருகி நிலைகிளர் கூடல் நீளெரி யூட்டிய பலர் புகழ் பத்தினி ... ... ... ... ... ...” “முலை குறைத்தாள் முன்னரே வந்தாள் மதுராபதி என்னும் மாது” (அழற்படுகாதை) *செந்தமிழ்ச்செல்வி, 24:3,1949.. |