பக்கம் எண் :

168மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18

“இரும்புகொப் புளித்தயானை ஈருரி போர்த்த ஈசன்”

“உத்தரமலையர் பாவை உமையவள் நடுங்க அன்று
அத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீ ரட்டனாரே”

“கரியுரி செய்துமை வெருவக் கண்டார் போலும்”

“படமுடை அரவினோடு பனிமதி யதனைச்சூடிக்
கடமுடை யரிவைமூடிக் கண்டவர் அஞ்ச அம்ம.”

“பொருப்பொ டொக்கும் மதகளி யானையின் தோல்
மலைமகள் நடுங்கப் போர்த்த குழகன்.”

“பைங்கண் யானையின் ஈருரி போர்த்தவர்”

“கலாவெண் களிற்றுரிவைப் போர்வை மூடி”

“கருத்துத்திக் கதநாகம் கையி லேந்திக்
      கருவரைபோற் களியானை கதறக் கையால்
உரித்தெடுத்துச் சிவந்ததன்தோல் பொருந்தமூடி
      உமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனி.”

இந்த மேற்கோள்களிலிருந்து நாம் மூன்று செய்திகளை அறிகிறோம். அவை :

1. சிவபெருமான் யானையின் தோலை உரித்தார். அந்த யானை வெள்ளையானை என்று சில இடத்திலும், கரியயானை என்று சில இடத்திலும் கூறுகிறார். நிறத்தைப் பற்றிக் கவலையில்லை. யானையின் தோலை உரித்தார் என்பது கருதத்தக்கது.

2. உரித்த உடனேயே, அத்தோல் ஈரம் உலர்வதற்கு முன்னரே போர்த்துக்கொண்டார். ஏனென்றால் ஈருரி என்று கூறப்படுகிறது. அஃதாவது ஈரமுள்ள, இரத்தம் உலராத தோல் என்பது கருத்து.

3. அத்தோலைப் போர்த்துக் கொண்டதைக் கண்டவர் யாவரும் அஞ்சினார்கள். முக்கியமாக உமையம்மையார் அஞ்சி நடுங்கினார்.

சிவபெருமான் புலியின் தோலை உரித்து அத்தோலை அரையில் அணிந்துகொண்டார் என்று இன்னொரு கதையுண்டு. புலித் தோலையுரித்து அணிந்தபோது, உமையம்மையாரும், மற்றவர்களும் அஞ்சி நடுங்கவில்லை. அவ்வாறு யாண்டும் கூறப்படவில்லை. யானையின் தோலை உரித்துப் போர்த்த போதுமட்டும் ஏன் அச்சங்கொள்ளவேண்டும்? இதன் காரணம் என்ன?.