தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு | 173 |
கலித்தொகையிலும் சீவகசிந்தாமணியிலும் கூறப்படுகிற இதே கருத்தை, அண்மையில் எழுதப்பட்ட ருஷிய தேசத்துநவீனம் ஒன்றில் கண்டு பெரிதும் வியப்படைந்தேன்! “கோஜாநாசருட்டின் அல்லது புக்காராதேசத்தின் துணிகரச் செயல்கள்” என்னும் நவீனத்தை, லியோனிட் ஸோலோவ்யேவ் என்னும் ஆசிரியர் எழுதி யிருக்கிறார். அந்தக் கதையில், கோஜா நாசருட்டீன் என்பவன் பல துணிகரமான செயல்களைச் செய்து புக்காரா தேசத்துப் பொது ஜனங்களின் அன்பைப் பெறுகிறான். கடைசியில் நியாஸ் என்னும் கிழவனுடைய மகளான குல்ஜான் என்பவளைக் காதலித்து, அவளைத் திருமணம் செய்துகொண்டு, அவளுடன் புறப்பட்டுத் தன் ஊருக்குப் போய் விடுகிறான். தன் மகளின் பிரிவினால் வருத்தமடைந்த நியாஸ் தன்னந்தனியே பெரிதும் கவலையடைகிறான். அவ்வமயம் அவனுடைய நண்பர்கள் அவனிடம் வந்து அவனுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். அவர்கள் கூறியது இது: “உன் மகள் குல்ஜான், கோஜா நாசருட்டீனுடன் போய்விட்டாள். அவளுக்காக நீர் வருந்துவது கூடாது. உலக இயற்கை இதுதான். பெண்புறா, ஆண்புறாவைவிட்டு வாழுமா? காளைமாடு இல்லாமல் பசுமாடு வாழுமா? ஆண்பறவையைவிட்டு அன்னப்பேடு பிரிந்து இருக்குமா? மங்கையொருத்தி காதலனைவிட்டுப் பிரிந்து வாழமுடியுமா? ஏன், பருத்திப் பூவிலும் ஆண்பூ என்றும், பெண்பூ என்றும் பூக்களைக் கடவுள் படைக்கவில்லையா? இது உலக இயற்கையில் காணப்படுகிற நிகழ்ச்சி. ஆதலின், உன் மகளுக்காக நீர் வருந்துவது ஒழிக.” மல்லிகைப்பூவின் இனிய மணத்தை அதை முகர்பவர்தான் அனுபவிக்க முடிகிறதல்லாமல், மல்லிகைச் செடி அந்த மணத்தை முகர்ந்து அநுபவிப்பதில்லை. கடலிலிருந்து தூய இனிய காற்று சுகமாக வீசுகிறது. அந்தக் காற்றை அநுபவிப்பவருக்கு அக்காற்றின் இன்பம் தெரியுமே தவிரக் கடல் அநுபவித்து இன்புறுகிறதில்லை. ஆகாயத்திலிருக்கும் வெண்ணிலா தண்ணிய நிலவை வாரி வீசுகிறதை மக்கள் மகிழ்ந்து ஏற்று அநுபவிக்கிறார்கள்; ஆனால், அந்த இன்பத்தை வெண்ணிலா அனுபவிப்பதில்லை. இதுபோலத்தான் மணமகளின் வாழ்க்கையும். இது அன்றும், இன்றும், என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிற இயற்கைச் சட்டம். அரசன் மகள் முதல் ஆண்டியின் மகள் இறுதியாக எல்லா மகளிர்க்கும் பொதுவான மனிதகுலச் சட்டம் இது.. |