268 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
இவர்களில் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் ஆடுகோட் பாட்டுச் சேரலாதனும் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் (மாற்றாந்தாய் வழித்) தமயன் தம்பியர் ஆவர். தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் இவர்களுக்குத் தாயாதிச் சகோதரர் ஆவர். இந்தச் சகோதரர் எல்லோரும் ஏறத்தாழச் சமகாலத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர்கள். இவர்களில் இளங்கோவடிகளும் குட்டுவன் இரும்பொறையும் தவிர மற்றவர் எல்லோரும் பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பத்துக்குத் தலைவர் ஆவர். இவர்களில் அதிக காலம் அரசாண்டவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன். இவன் ஐம்பத்தைந்து ஆண்டு அரசாண்டான். இவனுடைய மற்றச் சசோதரர்கள் எல்லோரும் இவனைவிடக் குறைந்த காலம் அரசாண்டார்கள். இவனுடைய தமயனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தைந்து ஆண்டு அரசாண்டான். தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டு ஆண்டும் தாயாதித் தமயனான பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழு ஆண்டும் அரசாண்டார்கள். இவர்கள் எல்லோரையும்விட அதிகக் காலம் (55 ஆண்டு) அரசாண்டவன் செங்குட்டுவன் ஒருவனே. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்தான். அவன் விழாச் செய்தது அவனுடைய ஐம்பதாம் ஆட்சி ஆண்டில் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அந்த விழாவைச் சிறப்புச் செய்ய அயல் நாடுகளிலிருந்து சில அரசர்கள் வந்திருந்தனர் என்றும் அவர்களில் இலங்கை அரசனான கயவாகுவும் (கஜபாகுவும்) ஒருவன் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. ‘கடல்சூழ் இலங்கைக் கயவாகு (கஜபாகு) வேந்தன்’ கி.பி. 171 முதல் 193 வரையில் இருபத்திரண்டு ஆண்டு இலங்கையை அரசாண்டான் என்று மகா வம்சம் என்னும் நூல் கூறுகிறது. எனவே, கஜபாகுவும் செங்குட்டு வனும் சமகாலத்தில் இருந்தவர் என்று தெரிகின்றனர். கஜபாகு ஏறத்தாழ கி.பி. 175-ல் வஞ்சிமா நகரத்துக்கு வந்து பத்தினி விழாவைச் சிறப்புச் செய்தான் என்று கொள்வோமானால், அந்த ஆண்டு செங்குட்டுவனுடைய ஐம்பதாவது ஆட்சியாண்டாக அமைகிறது. செங்குட்டுவன் 55-ஆண்டு ஆட்சி செய்தபடியால், அவன் கி.பி. 175க்குப் பிறகு ஐந்து ஆண்டு ஆட்சி செய்து கி.பி. 180-ல் இறந்திருக்க வேண்டும் என்று கருதலாம். எனவே, செங்குட்டுவன் ஏறத்தாழ கி.பி. |