பக்கம் எண் :

52மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18

“நாய்கரை ஆடி ஆவணியில் இரண்டிடை உவாநம் கிராமப் பிரதக்ஷிணம் சந்திராதித்தவரை எழுந்தருளப் பொலி ஊட்டாகக் கொண்ட பழங்காசு ஒன்றரையே யிரண்டு காசு”6

என்றும் கூறுகிறது காண்க. இதில் முழு நிலா நாளாகிய பௌர்ணமியை இடை உவா என்று கூறியிருப்பது காண்க. எனவே, உவா என்பது நிலா முழுவதும் மறைந்த நாளையும், இடை உவா என்பது முழுநிலா நாளையும் இந்தச் சாசனம் கூறுவதை உய்த்துணர்க.

உவா என்பது மறை நிலாவுக்கும் நிறை (முழு) நிலாவுக்கும் பொதுப்பெயர். அந்நாட்களைக் காருவா என்றும் வெள்ளுவா என்றும் கூறுவார்கள். அப்பெயர்கள் இக்காலத்தில் அமாவாசை என்றும் பௌர்ணமி என்றும் கூறப்படுகின்றன.

தமிழ் (திராவிட) இனத்தவரான மலையாளிகள் இன்றும் பழைய உவா என்னும் சொல்லை மறந்துவிடவில்லை. கறுத்த உவா, வெளுத்த உவா என்று அவர்கள் இன்றும் வழங்கி வருகிறார்கள். ஆனால், திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த தமிழைப் பேசுகிற தமிழரோ, பழைய தமிழ்ச் சொற்களை மறைத்துவிட்டு, அமாவாசை பௌர்ணமி என்னுஞ் சொற்களை வழங்குகிறார்கள். சொந்தக் காசைப் பெட்டியில் வைத்து மறந்துவிட்டு, அயலான் காசைக் கடன் வாங்கிச் செலவு செய்கிறவன் செயல் போல இருக்கிறது இவர்கள் செய்கை. பெட்டியில் உள்ள சொந்தக் காசை எப்போது வெளியில் எடுக்கப்போகிறார்கள்? பழைய காசு செல்லாக் காசாவதற்கு முன்பே வழங்குவதுதான் அறிவுடைமையாகும்.

அடிக்குறிப்புகள்

1. சிந்தாமணி கேமசரியார் - 13ஆம் செய்யுள்.

2. புறம்-65.

3. 1-ஆம் பாட்டு, 12ஆம் அடி.

4. S.I.I. Vol. VII No.27.

5. S.I.I. Vol. VIII No.30.

6. S.I.I. Vol. VII No.40..