பக்கம் எண் :

110மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19

துடி விலகியிருப்பதனால் அதன் செயலாகிய படைத்தல் தொழில் முடிந்துவிட்டது என்பது தெரிகின்றது. அபயகரம் காத்தல் செயலைக் காட்டுகிறது. இடது கையில் இருக்க வேண்டிய தீச்சுடருக்குப் பதிலாக அந்த இடத்தில் பாம்பு சிறப்புப் பெற்றிருக்கிறது. ஆகவே, இது காத்தல் என்னும் இரண்டாவது செயலைக் குறிக்கிறது என்பது நன்கு தெரிகின்றது.

அருளல் (வீடு -மோக்ஷம்) என்னும் செயல் இச் சிற்பத்தில் சிறப்புப் பெறாமல், அச்செயல் அரும்புகிற நிலையில் இருக்கிறது. அதாவது, குஞ்சித பாதம் உயரத் தூக்கப்படாமலும், வீசிய கரம் (கஜஹஸ்தம்) தூக்கிய திருவடியைச் சுட்டிக்காட்டாமலும் வெவ்வேறாக உள்ளன. இந்தக் குறிப்புகளையெல்லாம் கருதும்போது, இந்தத் தாண்டவம் காத்தல் என்னும் செயலைத் தெரிவிக்கிறது என்று அறிகிறோம்.

பாம்புக்கு ஆதரவு அளிக்கப்படுவது கொண்டு, இந்தத் தாண்டவம் காத்தல் செயலாகிய சந்தியா தாண்டவம் என்பதில் சற்றும் ஐயமில்லை.

ஆவணியூர் சிற்பம்

மைசூரில் கோலார் தாலுக்காவில், ஆவணி என்னும் ஊரில் இராமலிங்கேசுவரர் கோவிலில், சந்தியா தாண்டவத்தின் சிற்பம் ஒன்று இருக்கிறது. இதுவும் கருங்கற் பாறையில் அமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாகும். (படம் 6 காண்க).

இந்தச் சிற்ப உருவத்தில் வலது கையொன்றில் துடியும், மற்றொரு வலது கையில் அபய முத்திரையும், இடது கையொன்றில் பாம்பின் உருவமும், மற்றோர் இடது கை வீசிய கரமாக வலது பக்கம் தாழ்ந்தும் இருக்கின்றன. (இதனுடன் திருமழபாடி சிற்பத்தை ஒப்பிடுக.)

காலின் கீழே இரண்டு முயலகன் உருவங்கள் உள்ளன. இது வியப்பாக இருக்கிறது. இடது காலின்கீழே உள்ள முயலகன் கவிழ்ந்துகிடக்கிறான். வலது காலின்கீழே உள்ள முயலகன் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறான். தாண்டவ மூர்த்தியின் இரண்டு கால்களும் கூத்தாடும் பாவனையில் அமைந்துள்ள இந்தச் சிற்ப உருவம் காத்தல் செயலாகிய சந்தியா தாண்டவம் ஆகும்.

பரங்குன்றச் சிற்பம்

பாண்டி நாட்டில் மதுரைக்கு அடுத்த திருப்பரங்குன்றில் உள்ள குகைக்கோவிலில் பாறையில் அமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பம்