பக்கம் எண் :

நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள்23

திருநூற்றந்தாதி பாடிய அவிரோதி ஆழ்வாரே திருப்பள்ளி எழுச்சியாம் ‘திருவெம்பாவை’ என்னும் நூலை இயற்றியுள்ளார். அவை தமிழ் ஜைனர்களினால் படிக்கப்பட்டு வருகின்றன. அவற்றையெல்லாம் இங்கு எழுதினால் இடம் பெருகும் என்று அஞ்சி இதனோடு நிறுத்துவோம்.

மயிலாப்பூர் நேமிநாதர் கோயில் இருந்ததென்பதற்கு இந்த இலக்கியச் சான்றுகள் உறுதி கூறுகின்றன.

இனி எபிகிராபி (சாசனச்) சான்று உள்ளதா என்பதை யாராய்வோம்.

மயிலாப்பூரில் சென்தோம் பெரிய சாலையில், சென்தோம் ஹைஸ்கூல் கட்டிடத்தின் மாடிக்குச் செல்லும் கருங்கற்படிகள் ஒன்றில் கீழ்கண்ட சாசனம் காணப்படுகிறது. இந்தச் சாசனம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அறைகுறையாகவுள்ளது.

“................ உட்பட நேமிநாத ஸ்வாமிக்(கு)
க் குடுத்தோம் இவை பழந்தீபரா.........”

இந்த அறைகுறையான சாசனம், இங்கே இருந்த நேதிநாத சுவாமி கோயிலுக்கு யாரோ எதையோ தானம் செய்ததைக் கூறுகிறது. இந்தச் சாசனக்கல் நேமிநாத சுவாமி கோயிலருகில் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் இதைக்கொண்டுவந்து படிக்கல்லாக அமைத் தார்கள் போலும். இந்தச் சாசனம் இங்கிருந்ததை Antiquities of Santhome Mylapore என்னும் நூலில் 74-ஆம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தச் சாசனம் உள்ள கல் இப்போது மேற்படி இடத்தில் இல்லை. Rev. B.A. Figredo, Archdiocese of Madras-Mylaore அவர்கள் பொறுப்பில் வேறு இடத்தில் இருக்கிறது. இந்தச் சாசனம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

இனி, ஆர்க்கியாலஜி சான்றுகளைப் பார்ப்போம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தோமாஸ் கோயில் இருக்கும் இடத்தின் அருகில் பூமியைக் கிளறிப் பார்த்தபோது உடைந்துபோன கற்றூண்கள், சாசனக்கற்கள், கல் உருவங்கள் முதலியன அகப்பட்டன. அப்படி அகப்பட்டவைகளில் தலையுடைந்துபோன ஜைன உருவமும் ஒன்று. இந்த உருவமும் இப்போது மேற்படி தோமாஸ் கோவில் அதிகாரிகளிடம் இருக்கிறது.