| காபாலி: | சிவபெருமான் திருவருளால் நான் மீண்டும் காபாலி ஆனேன். (மண்டையோட்டை எடுத்துக் கொள் கிறான்.) |
| பைத்திய: | தேவடியாள் மகனே, விஷத்தைக் குடியேன். (மண்டையோட்டைப் பிடுங்கிக் கொண்டு போகிறான்) |
| காபாலி: | (அவனைத் தொடர்ந்து சென்று) இந்த யமதூதன் என்னுடைய உயிரைக் கொண்டு போகிறான். ஐயா, எனக்கு உதவி செய்யுங்கள். |
| பிக்குவும் பாசுபதனும்: | அப்படியே உதவி செய்கிறோம். (எல்லோரும் பைத்தியக்காரனை மறித்துக் கொள்ளுகிறார்கள்) |
| காபாலி: | ஏ! நில்லு, நில்லு. |
| பைத்திய: | என்னை ஏன் வழி மறிக்கிறாங்கோ. |
| காபாலி: | என்னுடைய கபால பாத்திரத்தைக் கொடுத்து விட்டுப் போ. |
| பைத்திய: | முட்டாள்! இது தங்கப் பாத்திரம் இன்னு தெரியலையா, உனக்கு? |
| காபாலி: | இது தங்கப் பாத்திரம் என்றால், இதை யார் செய்தார்கள்? |
| பைத்திய: | அதைச் சொல்லட்டுமா? பொன் நிறமான போர்வையைப் போர்த்துக்கிட்டு இருக்கானே, அந்தத் தட்டான்; அவன் தான் இதைச் செய்தான். இது பொன் கிண்ணம். |
| பௌ. பிக்கு: | என்ன சொல்லுகிறாய்! |
| பைத்திய: | இது பொன் கிண்ணம்; தங்கக் கிண்ணம். |
| பௌ. பிக்கு: | இவன் என்ன, பைத்தியக்காரனா? |
| பைத்திய: | அடிக்கடி பைத்தியக்காரன், பைத்தியக்காரன் இன்னு சொல்லுறாங்கோ. இதைப் பிடிச்சுக்கோ! அந்தப் பைத்தியக்காரனை எனக்குக் காட்டு. (காபாலிகனிடம் மண்டையோட்டைக் கொடுக்கிறான்.) |