பக்கம் எண் :

206மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

   தங்குவ தனைத்தும் அவனருட் சார்பில்
அண்டகோ டிகளிங் கொன்றோ டொன்று
 155விண்டிடா வண்ணம் வீக்கிய பாசம்,
அறியில் அருளலாற் பிறிதெதுஆ கருஷணம்?
ஒன்றோ டொன்றியாப் புற்றுயர் அன்பில்
நின்றஇவ் வுலகம், நிகழ்த்திய கருணை
பயிற்றிடு பள்ளியே அன்றிப் பயனறக்
 160குயிற்றிய பொல்லாக் கொடியயந் திரமோ?
பாரும்! பாரும்! நீரே கூறிய
சிலந்தியின் பரிவே இலங்கிடு முறைமை!
பூரிய உயிரிஃ தாயினும், தனது
சீரிய வலையிற் சிக்குண் டிறந்த
 165ஈயினை ஈதோ இனியதன் குஞ்சுகள்
ஆயிரம் அருந்த அருகிருந் தூட்டி
மிக்கநல் அன்பெனும் விரிந்தநூல் தெளிய
அக்கரம் பயில்வ ததிசயம்! அதிசயம்!
இப்படி முதற்படி. இதுமுத லாநம்
 170ஒப்பறும் யாக்கையாம் உயர்படி வரையும்
கற்பதிங் கிந்நூற் கருத்தே. அதனால்
இத்தனி உலகில் எத்துயர் காணினும்
அத்தனை துயரும், நம் அழுக்கெலாம் எரித்துச்
சுத்தநற் சுவர்ணமாச் சோதித் தெடுக்க
 175வைத்தஅக் கினியென மதித்தலே, உயிர்கட்கு
உத்தம பக்தியென் றுள்ளுவர். ஒருகால்
காரண காரியம் காண்குவம் அல்லேம்.


விண்டிடா - பிண்டுபோகாது. வீக்கிய - கட்டிய. பாசம் - கயிறு. ஆகருஷ்ணம் - இழுக்கும் சக்தி. யாப்புஉற்று - கட்டுண்டு. பயிற்றிடு - பயிற்சி அளிக்கின்ற. குயிற்றிய - செய்த. பூரிய - எளிய. அக்கரம் - அட்சரம், எழுத்து.

வரி 174 - 175. பொன்னை நெருப்பில் இட்டுப் புடம் போட்டால் அதன் அழுக்கை நீக்கிப் பிரகாசிக்கச் செய்கிற நெருப்பு என்பது கருத்து. உள்ளுவர் -நினைப்பார்கள்.