“நீதியால் வாழ்கிலை நாள்செலா நின்றன நித்த நோய்கள்
வாதியாவாதலானாளு நாளின்பமே மருவினாயே
சாதியார் கின்னரர் தருமனும் வருணனமேத்து முக்கண்
ஆதியாரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல்
நெஞ்சே.”
(சம்பந்தர்)
“பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய் வண்ணத்தானும்
கூடிளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்
ஓடிளவெண்பிறையானும் ஒளிதிகழ் சூலத்தினானும்
ஆடிளம்பாம் பசைத்தானும் ஆரூரர் அமர்ந்த அம்மானே.”
(அப்பர்)
“சொல்லிடில் எல்லையில்லை சுவையிலாப் பேதைவாழ்வு
நல்லதோர் கூரைபுக்கு நலமிக அறிந்தேனல்லேன்
மல்லிகைமாட நீடு மருங்கொடு நெருங்கியெங்கும்
அல்லிவண்டியங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.”
(சுந்தரர்)
“விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின் (று)
இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம்
கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர் அரநெறியாரே.”
(அப்பர்)
“அம்மானே ஆகமசீலர்க்கு அருள் நல்கும்
பெம்மானே பேரருளாளன்பிட வூரன்
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே.”
(சுந்தரர்)
வன்மீகநாதர்
பூமேவு திருமடந்தை பொன்முகத்தா மரைமலரப் புவிவிளங்க,
நாமேவு சுருதியிசை முனிஞிமிறு ஞானமண நனியுண் டார்ப்பக்,
காமேவு தமனியநாட் டமரர்மனக் கவலையிருட் கங்குல் நீங்கத்,
தேமேவு பொழிலாரூர்ப் புற்றிங்கொண் டெழுசுடரைச் சிந்தை
செய்வாம்.
தியாகராசர்
கார்பொருவும் கருங்கூந்தல் செவ்வாய் வெண்ணகைப் பச்சைக்
கன்னியோடும்,
தார்கமழ்பூங் காந்தளந்தோட் குமரனொடு மணிச்சிங்கா தனத்து
மேவிச்,
சீர்பரவு வான் புலவர் நினைந்தனயா வையும் நல்கிச் சிறப்பின்
வைகும்,
வார்புனல் சூழ்வயற்கமலைத் தேவர்கள் சிந்தாமணியை மனத்துள்
வைப்பாம்.
கமலாம்பிகை
அறந்தழையக் கலைத்தெரிவை வனப்பெய்தச்
சசியெனும்பேர் அரிவை வாழ
நிறங்கெழுபூ மடந்தையோடு நிலமங்கை
மங்கலத்தின் நிறைந்து மல்கப்
பிறங்குமுயிர்த் தொகையனைத்தும் களிகூரத்
தவம்புரியும் பீடு சான்ற
சிறந்தகம லாலயநா யகிசெம்பொற்
சேவடிகள் சென்னி சேர்ப்பாம்.
அல்லியங்கோதை
தொல்லைமா ஞாலமாதித் தொகையிலா அண்டம் நல்கிச்
செல்வமாண் கருணையாகுஞ் சிறகால் அணைத்துப் போற்றும்
மல்லலஞ் செழுநீர் வாவி வண்கம லாலயத்துள்
அல்லியங்கோதை என்னும் அன்னத்தை அகத்துள் வைப்பாம்.
திருப்புகழ்
நீதானெத் தனையாலும் - நீடூழி க்ருபையாகி
மாதானத் தனமான - மாஞானக் கழல்தாராய்
வேதாமைத் துனவேளே - வீராசற் குணசீலா
ஆதாரத் தொளியானே - ஆரூரிற் பெருமாளே.
அசபாநடனப் பதிகம்
நீடுசந்த் ரோதயம் போல்வதன மசையவருள்
நிறைகமல நயனமசைய
நின்றநதி மதியசைய வொன்றுசடை முடியசைய
நிகழ்மந்த காசமசையத்
தோடலர் செவந்தியந் தோடசைய மார்பில்
தொடுத்தசெங் குவளையசையத்
துங்கமழு மானசைய வங்கதஞ் சதகோடி
சூரியர்கள் போலசையமால்
தேடுமர வக்கிண் கிணிப்பாத மசையவொரு
செம்பொன்மலை வல்லியசையச்
செய்யகும ரேசர்நடு நின்றசைய நவரத்ன
சிம்மா சனத்திருந்தே
ஆடுமுன் னசபைநட மடியனென் றுங்காண
அருளுவாய் தியாகேசனே
அசைவில்கம லேசனே அசபா நடேசனே
ஆனந்த உல்லாசனே.
(ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்)
ஆரூரன் சந்நிதிபோல் ஆரூரன் ஆலயம்போல்
ஆரூரன் பாதத்த ழகுபோல் - ஆரூர்
மருவெடுத்த கஞ்சமலர் வாவிபோல் நெஞ்சே
ஒரு இடத்தில் உண்டோ உரை.
(தனிப்பாடல்)
- தக்கநெடும்
தேரூர் அணிவீதிச் சீரூர் மணிமாட
ஆரூரில் எங்கள் அரு மருந்தே - நீரூர்ந்த
காரூர் பொழிலுங் கனியீந்திளைப்பகற்றும்
ஆரூர் அரனெறி வேளாண்மையே - ஏரார்ந்த
மண்மண்டலிகர் மருவும் ஆரூர்ப்பரவை
யுண்மண்டலியெம் உடைமையே.”
(அருட்பா)
க்ஷேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ்
உன் கருணை மெய்யாட வுதயரவி யொளியாட
உபயசரணங்களாட
உயர்நாதமான சபை யொலியாட விந்துவாம்
ஓங்குமிகு தண்டையாட
மின்குலவு நவரத்ன மகரகுண்டலமாட
மிகு கருணை வதனமாட
வெற்றிவேல் தாங்கு செங்கையாட அருளாட
விமல மலர் நயனமாட
என்கண்ணி னிற்குமருள் நகையாட நுதலாட
இட்ட வெண்ணீறாடவே
ஏரார் விராட் புருட னாறுதானத்தே
இலங்கு மூலாதாரமாந்
தென்கமல நகர்மேவு தேவாதி தேவனே
செங்கீரை யாடியருளே
தியாகேசனுமை தவசி நடனஞ் செய்கந்தனே
செங்கீரை யாடியருவே.
“காளைவடி வொழிந்து கையுறவோடை யுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் - பாளை
அவிழ் கமுகம் பூஞ்சோலை ஆரூரற்காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புக என் கை.”
(ஐயடிகள் காடவர் கோன்)
அஞ்சல் முகவரி :-
அ/மி. தியாகராஜசுவாமி திருக்கோயில்
திருவாரூர் & அஞ்சல் - 610 001
திருவாரூர் மாவட்டம்.