நடராசர் கோவில் - சிதம்பரம் 1

திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியிட்டுள்ள ‘சிதம்பர விலாசம்’
நூல் இக்கோயிலமைப்பைப் பற்றிக் கூறுகின்றது.

இக்கோயிலுக்கு, மிகச்சிறப்பான திருப்பணிகளைச் செய்த விக்கிரம
சோழன் காலம் வரையில் வழங்கப்பட்ட நிவந்தங்கள் சண்டேஸ்வரர்
பெயரால் நடைபெற்று வந்தன. அம்மன்னனின் காலத்திற்கு பிறகு
குறிப்பிட்ட குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. அக்குழுவில்
தில்லை வாழ் அந்தணர்கள் சிலரும் வழிபாடு செய்யும் உரிமை கருதிச்
சேர்க்கப்பட்டனர். சோழ மன்னர்களின் ஆட்சிக்குப் பிறகு இக்கோயில்
தில்லைவாழ் அந்தணர்க்கு உரியதாயிற்று. இவ்வாறு, கல்வெட்டுத்
துறையின் ஆண்டறிக்கை கூறுகின்றது. (Annual Reports on South
Indian Epigraphy)

‘மணவில்’ என்ற ஊரின் தலைவனும், முதற்குலோத்துங்க சோழன்
விக்கிரமசோழன் ஆகியோரின் படைத்தலைவனுமாகிய பொன்னம்பலக்
கூத்தன் என்பவன் தில்லையில் நூற்றுக்கால் மண்டபத்தைத் தன்
மன்னன் பெயரால் விக்கிரம சோழன் மண்டபம் செய்வித்தான் ; தேவாரம்
ஓதுவதற்கு மண்டபம் கட்டினான் ; தேவாரப் பதிகங்களைத் தன்
அமைச்சனான காளிங்கராயனைக் கொண்டு செப்பேட்டில் எழுதுவித்தான் ;
ஞானசம்பந்தப் பெருமான் கோயிலைப் பொன்னால் வேய்ந்தான் ;
நடராசப் பெருமான் மாசிக்கடலாட்டின் போது எழுந்தருளியிருக்க,
‘கிள்ளை’ என்னும் ஊரில் மண்டபம் அமைத்தான். பேருந்துச்
சாலையோரத்தில் அமைந்துள்ள கீழ்வாசல் கோபுரம் ஏழு நிலைகளுடன
்விளங்குகிறது. வாயிலைக் கடந்து உட்சென்றால் உள்கோபுரமும்
ஏழு நிலைகளுடன் காட்சியளிக்கிறது. வலப்பால் தில்லைமரம் வளரும்
மேடையுள்ளது. நாற்புற வாயில்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் அழகுற
அமைக்கப்பட்டுள்ளன. வாயிலைக் கடந்ததும் வலப்பால் ஆயிரக்கால்
மண்டபம் உள்ளது.

அடுத்துள்ளது சிவகங்கைத் தீர்த்தம். கரையில் தென், கீழ்புறச்
சுவர்களில் திருவாசகப் பாடல்கள் முழுவதும் கல்வெட்டுக்களாகப்
பதிக்கப் பட்டுள்ளன. குளத்தின் மேற்கரையில் ‘பாண்டி நாயகம்’ என்கிற
முருகன் சந்நிதி உள்ளது. சிவகாம சுந்தரி சந்நிதி தனிக்கோயிலாகப்
பொலிவுற உள்ளது. உள் பிராகாரத்தில் சபாநாயகர் (தருமை) கட்டளை
அறை, நிருத்தசபையில் வலக்காலை மேலே தூக்கியுள்ள ஊர்த்துவ
தாண்டவர், சரபமூர்த்தி முதலிய சந்நிதிகள் உள்ளன. வெளிப்பக்கத்தில்
பிட்சாடனர் சுதை சிற்பம் உள்ளது.

நடராச சந்நிதிக்கான தங்கத்தகடு வேய்ந்த கொடிமரம் உள்ளது.
பிராகாரத்தில் அம்பாள் சந்நிதி, கம்பத்திளையனார், தாயுமானவர்,
விநாயகர், சுப்பிரமணியர், படிகளேறிச் சென்றால் திருமுறை காட்டிய
விநாயகர் (பொல்லாப் பிள்ளையார்) சுதை சிற்பம் முதலியனவுள்ளன.
தொடர்ந்து பிராகாரத்தில் விசுவநாதர் லிங்கம், வைத்தியநாதர் தையல்
நாயகி சந்நிதி, காலபைரவர், சண்டேசுவரர், விநாயகர், அறுபத்துமூவர்
திருமேனிகள் உள்ளன. திருமூலட்டானம் சுவாமி சந்நிதி. பக்கத்தில்
‘உமைய பார்வதி’ தங்கக் கவசத்தில் பேரழகோடு காட்சி தருகின்றாள்.
அர்த்தசாம அழகர் புறப்பாட்டுச் சபையுள்ளது. உற்சவமூர்த்திகள்
வைத்துள்ள மண்டபம், சனிபகவான் சந்நிதி உள்ளது.

சிற்றம்பலத்து நடமாடும் சிவக்கொழுந்தைத் தரிசிக்கும்போது மனம்
லயிப்புற்றால் ‘என்று வந்தாய்’ எனும் குறிப்பு நமக்கும் கிடைக்கும்.
அம்பலக் கூத்தர் இருப்பது சிற்றம்பலம் - சிற்சபை. முன் மண்டபம்
பேரம்பலம். நடராசப் பெருமானுக்குப் பக்கத்தில் ‘சிதம்பர ரகசியம்’
உள்ளது. இந்த ரகசியம் உள்ள இடத்தில் வில்வதளங்கள் தொங்குகின்றன.

நடராசப் பெருமானை நின்று தரிசிக்கும் போது இடப்பால்
கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியுள்ளது. ‘திருச்சித்ரகூடம்’ எனப்படும்
இச்சந்நிதியில் பெருமாள் கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார். உள்ளே
வலமாக வரும் போது வேணு கோபாலர் சந்நிதி யதிராசர், யோக
நரசிம்மர், கூரத்தாழ்வார், ஆசார்யர்களின் உற்சவ மூர்த்தங்கள்,
ஆஞ்சநேயர் திருமேனிகள் முதலியவை உள்ளன.

தில்லையாடியின் திருவடி - ஆடஎடுத்திட்ட பாதம் - குஞ்சிதபாதம்
நம் குறைகளைப் போக்கி நிறைவையும் நல்வாழ்வையும் தருமே !
ஆனித் திருமஞ்சனமும் மார்கழித் திருவாதிரையும் இத்திருக்கோயிலில்
நடைபெறும் மிகச்சிறப்பான விழாக்களாகும். மகுடாகமப்படி பூசைகள்
நடைபெறுகின்றன.

‘செல்வநெடு மாடம் சென்று சேணோங்கிச்
செல்வமதி தோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே.’
                (சம்பந்தர்)

‘பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தினாற் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா
முத்தனே முதல்வாதில்லை அம்பலத்தா டுகின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே
                (அப்பர்)

‘மடித்தாடும் அடிமைக் கணன்றியே
    மனனே நீ வாழு நாளுந
் தடித்தாட்டித் தருமனார் தமர் செக்கி
    லிடும் போது தடுத்தாட
் கடுத்தாடு கரதலத்தில் தமருகமும்
    எரியகலும் கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம் பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே’
                (சுந்தரர்)

“ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.”
            (ஐயடிகள் காடவர்கோன்)

இருவினையின் மதி மயங்கித் - திரியாதே
    எழுநரகிலுழலு நெஞ்சுற் - றலையாதே
பரமகுரு அருள் நினைந்திட் - டுணர்வாலே
    பரவு தரிசனையை யென்றெற் - கருள்வாயே
தெரி தமிழை யுதவு சங்கப் - புலவோனே
    சிவனருளு முருக செம் பொற் - கழலோனே
கருணை நெறி புரியுமன்பர்க் - கெளியோனே
    கனக சபை மருவு கந்தப் - பெருமாளே.
                (திருப்புகழ்)

“சொற் பேறு மெய்ஞ்ஞானச் சுயஞ் ஜோதியாந் தில்லைச்
சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையாந்
தாயின் உலகனைத்துங் தாங்குத்திருப்புலியூர்க்
கோயிலமர்ந்த குணக் குன்றமே.”
                (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
அ/மி. நடராசப்பெருமான் (சபாநாயகர்) தேவஸ்தானம்
சிதம்பரம் & அஞ்சல் - 608 001.
சிதம்பரம் வட்டம் - கடலூர் மாவட்டம்.

முன்