ஏகாம்பரநாதர் கோவில் - காஞ்சிபுரம் 1

இத்திருக்கோயில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ளது.திருவேகம்பம்,
திருக்கச்சியேகம்பம், ஏகாம்பரநாதர் திருக்கோயில் எனப் பலவாறு
அழைக்கப்படுவதும் இத்திருக்கோயிலே.

மாணிக்கவாசகர்     இத்திருக்கோயிலைக் ‘கச்சித் திருவேகம்பன்
செம்பொற்கோயில்’ என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். அருணகிரிநாதரின்
திருப்புகழும் உள்ளது. முற்றத் துறந்த பட்டினத்தாரின் ‘திருவேகம்
பமுடையார் திருவந்தாதியும்’ கந்த புராணமும் இத்தலத்தின் சிறப்பையும்,
மூர்த்தியின் புகழையும் பலவாறு புகழ்கின்றன. மணிமேகலை, தக்கயாகப்
பரணி, மத்தவிலாசப்பிரகசனம், தண்டியலங்காரம் முதலிய நூல்களிலும்,
பன்னிரு திருமுறைகளில் பலவிடங்களிலும் இத்தலச் சிறப்பு
பேசப்படுகின்றது.

இறைவன் - திருவேகம்பர், ஏகாம்பரநாதர், ஏகாம்பரேஸ்வரர
இறைவி - ஏலவார்குழலி
தலமரம் - மா
தீர்த்தம் - சிவகங்கைத் தீர்த்தம்
    மூவர் பாடலும் பெற்றது.

ஏகாம்பரேஸ்வரர் மூலவர் - மணல் (பிருதிவி) லிங்கம். உமாதேவியார்
கம்பை நதிக்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட, இறைவன்
ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்ய, உமையம்மை இலிங்கத்தைத்
தழுவிக் காத்தாள் என்பது தலவரலாறு. தழுவிய போது இறைவன் தன்
திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத்
தழுவக் குழைந்தார். இதனால் இறைவனுக்குத் ‘தழுவக் குழைந்த பிரான்’
என்றும் பெயர்.

“எள்கலின்றி இமையவர்கோனை ஈசனை வழிபாடு செய்வாள்போல்
உள்ளத்துள்கி உகந்து உமைநங்கை வழிபடச் சென்றுநின்றவாகண்டு
வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக்கம்பனை எங்கள் பிரானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே”
                 (சுந்தரர்)

தற்போது ‘கம்பா நதி’ ஆலயத்துள் ஆயிரக்கால் மண்டபத்திற்கு
முன்னால் குளமாகிய
நிலையில் உள்ளது. தலமரம் மாமரம். ஆம்ரம் - மாமரம்.
ஏகம்+ஆம்ரம் = ஏகாம்ரம் - ஒற்றை மாமரம்.

இம்மாவடியின்கீழ் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இறைவன் ஏகாம்
அரநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பெயரே ஏகாம்பரநாதர் என்று
வழங்கலாயிற்று. “ஒரு மாவின்கீழ் அரையர்” என்னுந் தனிப்பாடல்
தொடர் இங்கு நினைக்கத்தக்கது. ‘கம்பர்’ என்பது தமிழில் வழங்கும்
பெயர். ஊர்ப் பெயர் கச்சி, காஞ்சி என்றாலும் கோயிலுக்குப் பெயர்
ஏகம்பம் என்பதே.

காஞ்சிபுர மண்டலம் முழுமைக்கும் தேவி, காமாக்ஷியே யாவாள்.
ஆதலின் காஞ்சியில் எச்சிவாலயத்திலும் தனியாக அம்பாள் (மூல)
சந்நிதி கிடையாது. எனினும் ஒவ்வொரு கோயிலிலும் உற்சவமூர்த்தமாக
ஓர் அம்பாள் சந்நிதி ஒரு பெயர் தாங்கி இருக்கும். அவ்வகையில்
இத்திருக்கோயிலில் உள்ள அம்பாளுக்கு ‘ஏலவார் குழலி’ என்று பெயர்.
ஆயினும் தேவஸ்தானத்தின் பெயர் ஸ்ரீ காமாக்ஷியம்பாள் சமேத ஸ்ரீ
ஏகாம்பரநாதர் தேவஸ்தானம் என்றே வழங்கப்படுகிறது.

மிகப் பெரிய கோயில். உயர்ந்த ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன்
கம்பீரமாகக் காட்சி தருகின்றது. நுழைவு வாயிலில் முன்னால் விநாயகரும்
முருகப்பெருமானும் இடம் மாறிக் காட்சி தருகின்றனர். இக்கோபுரம்
விஜயநகர     மன்னரான     கிருஷ்ணதேவராயரால்     கி.பி.1509ல்
கட்டப்பட்டதாகும். ‘ஒன்பது நிலை தழீஇ ஓங்கும் கோபுரம்’ என்பது
காஞ்சிப் புராணம்.

இவ்வாயிலில் நின்றால் தண்ணென்ற காற்று எப்போதும் வீசுவதை
அனுபவிக்கலாம். இவ்வாறு அனுபவித்த புலவரொருவர் தம் தனிப்
பாடலில் ‘கம்படித்தடி காற்று’ என்று புகழ்ந்துள்ளார்.

உள்ளே நுழைந்தால் நேரே தெரிவது வாகன மண்டபம். இதற்குச்
சரபேச மண்டபம் என்று பெயர். திருவிழாக் காலங்களில் சுவாமி
இங்கெழுந்தருளி, உபசாரங்களை ஏற்று, வாகனங்கள் மீது ஆரோகணித்து
திருவீதியுலாவுக்குப் புறப்படுவார்.

(பெரும்பாலான     தலங்களில்     வாகனங்களின்     அமைப்பு
பக்கவாட்டிலேயே அமைந்திருக்கும். சுவாமி நேராக நோக்குவார்.
ஆனால் இங்குச் சுவாமியின் நோக்கும் வாகனங்களின் முகமும் ஒரே
திசையில் - நேராகவே இருக்கும்.)

விசாலமான உள் இடம். இடப்பால் நந்தவனம். அடுத்து குளமாகத்
தேங்கியுள்ள நிலையில் கம்பையாறு உள்ளது. நேரே தெரிவது
ஆயிரக்கால் மண்டபம். சற்றுப் பழுதடைந்துள்ளது. இக்கோபுரம்
பல்லவகோபுரம் எனப்படும். இக்கோபுர வாயிலில்தான், தல விநாயகராகிய
‘விகடசக்கர விநாயகர்’ உள்ளார்.

சலந்தரனை அழிக்கத் திருமால் இறைவனை வேண்டிப் பெற்ற
சக்கராயுதத்தை, வீரபத்திரர்மேல் ஏவியபோது அவர் அணிந்திருந்த
வெண்டலைமாலையில் உள்ள ஒருதலை அதை விழுங்கிவிட்டது. திருமால்
பெரிதும் வருந்தினார். இதையறிந்த விஷ்வக்சேனர் வீரபத்திரரிடம்
சென்று வேண்டி, அவர் சொல்லியவாறே பிரம கபாலம் சிரிக்கும்
வகையில் விகடக் கூத்தாடினார். அக்கூத்தைக் கண்டு பிரமகபாலம்
சிரிக்க, சக்கரப்படை கீழே விழுந்தது. அப்போது அருகிலிருந்த விநாயகர்,
அதை விரைந்து எடுத்துக் கொண்டு, மறுமுறையும் விகடக்கூத்து
ஆடுமாறு பணிக்க, அவரும் அவ்வாறே ஆடினார். மகிழ்ந்து விநாயகரும்
சக்கரப்படையைத் தந்தருளினார். ஆதலின் விகடக் கூத்தினை
விரும்பிக்கொண்டமையால் ‘விகடசக்கர விநாயகர்’ என்று பெயர்
பெற்றார். விநாயகரை வணங்கிக் கோபுர வாயில் கடந்து வலப்பக்கமாகத்
திரும்பிக் கோயிலுக்கு வரவேண்டும்.

இதுவே முறையான வழியாகும். பிற்காலத்தில் திருப்பணிகள் நடந்த
காலத்தில் அமைக்கப்பட்ட மதில் ‘வளைவு’ ராஜகோபுரத்திற்கு நேராக
இருப்பதால் இன்று மக்கள் பெரும்பாலும் இவ்வளைவின் வழியாகவே
செல்கின்றனர்.

(சுவாமி புறப்பாடு இன்றும் இம்முறையான வாயில் வழியாகவே
நடைபெறுவதை நேரில் காணலாம்.)

கோயிலுக்கு முன்புள்ளது ‘திருக்கச்சி மயானம்’ கோயிலாகும். இது
வைப்புத் தலமாகும். அப்பரால் வைத்துப் பாடப்பட்டதாகும். அப்பாடல்:-

“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
    மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லால்
ஒப்புடையான் அல்லன் ஓருருவனல்லன்
    ஓரூரனல்லன் ஓர்உவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
    இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”

எதிரில் வள்ளல் பச்சையப்பர் கட்டிய மண்டபம் உள்ளது.
இம்மண்டபத் தூண் ஒன்றில் அவருடைய உருவமும் உள்ளது.

ஏகம்பத்தின் நாற்புறத்திலும் நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள்
கச்சிமயானம் ஒன்று. மற்றவை வாலீசம், ரிஷபேசம், சத்தியநாதேசம்
என்பன. மறுபுறம் சிவகங்கைத் தீர்த்தம் உள்ளது. அழகிய பெரிய குளம்,
நல்ல படித்துறைகள் உள்ளன. நாற்புறமும் கோபுரங்கள் உள்ளன.
உயர்ந்துள்ள கொடி மரம் பணிந்து கோயிலுள் நுழையும்போது வாயிலில்
இரு துவார பாலகர்கள் நம்மை வரவேற்கின்றனர். பக்கத்தில்
உட்புறமாகக் கரிகாற்சோழனின் சிலையொன்றுள்ளது.

உட்செல்லுகிறோம். வலப்பால் வாகன மண்டபம். இடப்பாலுள்ளது
பவித்ர உற்சவ மண்டபம். இங்கிருந்து பார்த்தால் நேரே மூலவர் காட்சி
தருகிறார். சற்று முன்னால் சென்று இடப்புறமாகத் திரும்பினால்
அம்மூலையில் உள்ள தூணில் இறைவன், இறைவியைத் திருமணங்
கொள்ளும் அழகான சிற்பம் உள்ளது. அதன் எதிர்த்தூணில் இறைவி,
இறைவனின் கண்களைமூடும் சிற்பம் உள்ளது. இடப்பால் திரும்பிப்
பிராகார வலம் வருகிறோம். வலப்பால் ‘பிரளயகால சக்தி’யின் சந்நிதி
உள்ளது. ‘ஈறுசேர் பொழுதினும் இறுதியின்றியே காத்துக் காஞ்சியை
மாறிலாது இருத்திடுகின்ற’ அம்பிகை இவள். வழிபட்டுத் தொடர்கிறோம்.
பிரகாரம் மிக்க அழகுடையது. பக்கத்துத் தூண்களின் அமைப்பும்
உச்சிப்பகுதியும் அற்புதமான அழகுடையவை. செல்லும்போதே வலப்பால்
இருப்பது “சபாநாயகர்” மண்டபம். இது நாளடைவில் ‘நாயகர்’ மண்டபம்
என்றாகி, இன்று மக்கள் வழக்கில் கொச்சையாக நாயர் மண்டபம் என்று
வழங்குகிறது : இங்குத்தான் ஏகம்பரநாதரின் உற்சவத் திருமேனி உள்ளது.
சந்நிதியுள் பெருமான் (இங்கு) சோமாஸ்கந்த வடிவில் காட்சி தருகிறார்.
இம்மூர்த்தம் இராசசிம்ம பல்லவனின் உபயமாகச் செய்துவைக்கப்பட்டது.
இதற்குச் சான்றாக இதன் பின்னால் பிரபாவளி செருகுமிடத்தில் சிங்கம்
உள்ளது. பின்னால் உமாமகேசுவரர், சந்திரசேகரர், ஸ்ரீ கண்டசிவாசாரியார்
முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
பெருவிழாக் காலங்களில் அபிஷேகங்களும் அலங்காரங்களும்
செய்யப்படுவதும், பெருமான் உலாவுக்குப் புறப்படுகின்ற சிறப்புடையதும்
இம்மண்டபத்தில்தான். இச்சந்நிதியில் இரு பக்கங்களிலும் பெரிய
கண்ணாடிகள் வைக்கப் பட்டுள்ளன. அவற்றில் திருமேனியைப் பார்த்துத்
தரிசிப்பதே தனியழகு. பிராகாரம் முழுவதிலும் இடப்பால் வரிசையாகச்
சிவலிங்கங்கள் வைக்கப் பட்டுள்ளன.

முன் பின்