எட்டுக்கரங்களுடன் பெருமாள் எழுந்தருளியிருப்பது 108 திவ்ய
தேசங்களில் இங்கு மட்டுந்தான். வலப்புறம் உள்ள 4 கரங்களில்
சக்கரம், வாள், மலர், அம்பு, ஆகியவற்றையும் இடப்புறம் உள்ள
நான்கு கரங்களில் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம்
போன்றவற்றைப் பெற்றுத் திகழ்கிறார். அஷ்டாச்சர ரூபன்,
அட்டாக்கர ரூபனாய் இருப்பது இங்கு மட்டுந்தான்.
சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாள் காளியின்
கொட்டத்தை இவ்விடத்தே அடக்கினார். இதற்கு ஆதாரம்
தரத்தக்க வகையில் இச்சன்னதியின் அருகே கருங்காளியம்மன்
கோவிலொன்றுள்ளது.
தொண்டை மண்டலத்து திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே
பரமபத வாயில் உள்ளது.
மகாசந்தன் என்னும் முனிவர் மஹாவிஷ்ணுவைக் குறித்து
தவமிருந்தார். இவர் இந்திரனுக்கு எதிரி. தனது இந்திர
பதவியைப் பெறுவதற்காகத்தான் இம்முனிவர் தவமிருக்கிறார்
போலும் என்று நினைத்த இந்திரன் தேவலோக மாதர்களை
(அப்ஸரஸ்களை) அனுப்ப முனிவர் அவர்களை
வெறுத்தொதுக்கினார். எனவே இந்திரன் எப்படியும்
இம்முனிவரின் தவத்தைக் கலைக்க வேண்டுமென்றெண்ணி
யானை வடிவங்கொண்டு தன்னோடு பல யானைக் கூட்டங்களை
அழைத்துக் கொண்டு இம்முனிவர் தவமிருக்கும் இடத்திற்கு
வந்து காமப்புணர்ச்சி கொண்டு நிற்க இதைக் கண்ட முனிவர்
சித்தம் கலங்கி தவவலிமையிழந்து தாமும் ஒரு யானையாக
மாறினார். தம் நிலை மறந்து பெண்யானைகளுடன் இன்புற்று
திரிந்தார். இவ்வாறே நாட்கள் பல நகர்ந்து மாதங்கள்
உருண்டோடி வருடங்களுக்குள் நுழைந்தன.
யானைக்கூட்டங்களுடனே காடு மலையெங்கும் சுற்றித் திரிந்தார்.
இவ்விதம் அலையும்போது ஒரு நாள் சாளக்கிராமத்தில் யானைக்
கூட்டங்கள் நீராடின. அப்போது யானை வடிவிலிருந்த
முனிவனுக்கு தீர்த்த மகிமையால் தனது முன்பிறவி ஞானம்
வரலாயிற்று. தம் நிலையுணர்ந்த அந்தக் களிறு மிகவும் வாடி
களிறினக் கூட்டங்களைத் துறந்து தனித்தேயோடி
வனாந்திரங்களில் விழுந்து புரண்டு தனது கஜ உடலுடனே பல
திவ்ய தேசங்கட்கும் சென்று இறைவனை வணங்கி வரும்போது
ஒருநாள் கோதாவரியில் நீராட அங்கிருந்த மிருகண்டு
முனிவரிடம் யானை தனது பாஷையில் தன் நிலைமையினைச்
சொல்லி விமோச்சனம் வேண்ட அவர் சகல பாவத்தையும்
தீர்க்கும் காஞ்சிபுரத்திற்கு செல் எனச் சொல்ல காஞ்சிபுரம்
வந்த இந்தக் களிறு (முனிவர்) வரதராஜப்பெருமாளுக்கு
தினந்தோறும் மலர்பறித்துச் சமர்ப்பித்து கைங்கர்யம் செய்து
வந்தது. இவ்வித மிருக்கையில் ஒருநாள் மலர் பறிக்க வரும்
வழியில் அட்ட புயக்கரத்தோனைக் கண்டு மயங்கி அன்று
முதற்கொண்டு அவனுக்கே தனது மலர்க் கைங்கர்யத்தைச்
செய்துகொண்டே வந்தது. இவ்விதம் 14000 மலர்கள் பறித்துச்
சமர்ப்பித்ததாகக் கூறுவர். இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றுக்
கொண்டிருக்கும்போது ஒரு சமயம் மழை இல்லாமல் போக மலர்
பறிக்க நெடுந்தொலைவு சென்ற யானை ஒரு குளத்தில் இறங்கி
அங்கிருந்த மலர்களை பறிக்க, அதிலிருந்த முதலை யானையின்
காலை கவ்வியது (ஆதிமூலமே என்று அன்று ஒரு கஜேந்திரன்
அழைத்தது போலவே இந்த யானையும் திருமாலைக் கூவி
அழைக்க அட்டபுயக்கரத்தோன் வந்து சக்கராயுதத்தால்,
முதலையின் தலையைக் கொய்ய, யானைக்கு சாபம் நீங்கியது.
யானையாகிய மகாசந்தன் தனக்கு மோட்சம் வேண்டுமென
பெருமாளைக் கேட்க அவரும் இம்முனிவருக்கு மோட்சம்
நல்கினார்.
‘தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துள்
கோள்முதலை துஞ்சர் குறித்தெறிந்த சக்கரத்தான்
தான் முதலே நங்கட்குச் சார்வு’
மூன்றாந்திருவந்தாதி - 99
என்று பேயாழ்வார் இந்நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார்.
காளியுடன் வரப்பெற்ற நக்கரன் என்னும் அரக்கனைக்
கொல்வதற்காகவே எம்பெருமான் 8 கரங்களுடன்
வடிவெடுத்ததாகவும் கூறுவர்.
-
திருமங்கையாழ்வாராலும், பேயாழ்வாராலும் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம்.
-
மணவாள மாமுனிகளும், சுவாமி தேசிகனும் மங்களாசாசனம்
செய்த ஸ்தலம்.
அட்டபுயக்கரத்தான் கஜேந்திர மோட்சமளித்த நிகழ்ச்சியை
தமக்கு அப்படியே காட்ட வேண்டுமென இப்பெருமானைப்
பேயாழ்வார் வேண்டிக்கொள்ள அவ்விதமே அவருக்கு காட்சி
கொடுத்ததாகவும் ஒரு வரலாறு உண்டு.
வைரமேகன் என்னும் தொண்டை நாட்டு மன்னன்
இப்பெருமாளுக்கு தொண்டு புரியும் பொருட்டு தற்போதுள்ள
வடிவமைப்பில் இக்கோவிலைக் கட்டினான் என்றும்
அறியமுடிகிறது.
‘மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும்
நீண்முடி மாலை வயிரமேகன்
தன்வலிதன் புகழ் சூழ்ந்த கச்சி
அட்ட புயகரத்து ஆதி தன்னை’
என்ற திருமங்கையாழ்வாரின் பாடலாலும் இதை உணரலாம்.
இங்கு வந்த சரபம் ஒன்று அட்டபுயக்கரத்தானைக் கண்டு
அஞ்சி சரண் அடைய அச்சரபத்தை நோக்கிய எம்பெருமான்
இச்சன்னதியில் வாயு மூலையில் உள்ளயாக சாலையைக்
காக்குமாறு சொல்ல சரபேசன் என்ற பெயரில் இன்றும் காவல்
காப்பதாக ஐதீஹம்.
இக்கோவிலில் அமைந்துள்ள வராகப் பெருமாள் சன்னதி
சக்கரவர்த்தி திருமகள் சன்னதி, புஷ்பவல்லித் தாயார் சன்னதி,
ஆண்டாள் சன்னதி ஆகியன காண்பதற்கும் பேரழகு
பொருந்தியனவாகும்.
இப்பெருமாள் தனது 8 கரங்களில் கொண்டுள்ள
ஆயுதங்களை திருமங்கையாழ்வார்.
‘செம்பொனிலங்கு வலங்கை வாளி
திண்சிலை தண்டொடு சங்க மொள்வாள்
உம்பரிரு சுடராழியோடு
கேடக மொன் மலர் பற்றியெற்றே’
- என்ற பாடலால் படம் பிடித்துக் காட்டுகிறார்.
திருமங்கையாழ்வார் இப்பெருமானுக்கு அருளிய 10 பாசுரங்களில்
பெருமானின் சிறப்பியல்புகளைப் பற்றிக் கூறி, அவதாரங்களையும்
நினைவு கூர்ந்து யாரிவர், யாரிவர் என்று வினவுவது மிகவும்
ஆழ்ந்து ரசிக்கத் தக்கதாகும்.
-
பிள்ளைப் பெருமாளையங்காரின் 108 திருப்பதியந்தாதியில்
இப்பெருமானைக் கண்ணனாக காண்கிறார்.
எப்போதும் துயருற்று இருக்கிறீர்களே உங்கள் துயரத்தை
தொலைமின். இளம்வயது எதற்கும் பயப்படாதவயதாகும்.
இளங்கன்று பயமறியாது என்று கூறியிருப்பதும் தங்கட்கும்
தெரியவில்லையா தெரியாவிட்டாலும் பரவாயில்லை. நீங்களும்
கண்ணனின் சரித்திரத்தை அறிந்திருப்பீர்கள் அல்லவா? அதில்
அவன் பயங்கரமான காளியங்கன் என்னும் பாம்பினை
அடக்கினான். யாரும் நெருங்குவதற்கு கூடப் பயப்பட்டுக்
கொண்டிருந்த காளிங்கன் அருகில் இளங்கன்று பயமறியாது
என்பது போல துள்ளிக் குதித்து காளிங்கன் கொட்டத்தை
அடக்கிய கண்ணனின் திருவடிகளைச் சேவியுங்கள். நீங்களும்
இளங்கன்று போல் துள்ளிக் குதித்து களித்திருங்கள் அந்த
திருவடிகளைக் கொண்ட கண்ணபிரான்தான்
அட்டபுயக்கரத்தோடு இங்கு உள்ளான். அவனைத் தரிசித்து
அச்சத்தை தொலைத்து இளமை பெற்றுத் திகழுங்கள்.
அட்டபுயக்கரத்தானே சரணமென்று வாருங்கள் என்று கூறுகிறார்.
இதைத்தான் ஆழ்வாரும் ‘வன்புகழ் நாரணன் தின் கழல்
சேர்மின்’ என்றாரோ. இதைத்தான் வேதமும் ‘அதேபோபயம்
கதோபவதி’ என்கிறது.
இப்போது பாடலைப் பாருங்கள்,
என்றுள் துயருழக்கு மேன்புகாள் நீங்களிளங்
கன்று போல் துள்ளிக் களித்திரீர், அன்று நட
மிட்ட புயங்கத்திரு சரணமே சரணென்று
அட்ட புயங்கத்திற் காளாய்
என்று கண்ணனாய் காண்கிறார்.