சியாமளமேனிப் பெருமாள் கோவில் - திருக்கண்ணங்குடி
வரலாறு

கருடபுராணம், நாரத புராணம், இவ்விரண்டிலும் இத்தலத்தின்
மேன்மை பரக்கப் பேசப்படுகிறது. கருட புராணத்தின் 5வது
அத்தியாயத்தில் 320 ஸ்லோகங்களில் இத்தலம் பற்றிய விவரங்கள்
உள்ளடங்கியுள்ளன.

கிருஷ்ண பக்தியில் வசிட்டர் மிகவும் சிறந்தவர். “கிருஷ்ண
பிரேமை வசிட்டாய நாமா” என்று சொல்வார்கள். வசிட்டர்
வெண்ணையில் கிருஷ்ணனைப் போல் விக்ரகம் செய்து தமது பக்தியின்
மேலீட்டால் வெண்ணெய் இளகி திரவமாகாமல் கட்டி வைத்து, திவ்ய
மங்கள விக்கிரகமாகச் செய்து தியானத்தில் ஈடுபட்டு வழிபடுவாராம்.
இவ்வாறு வெகுகாலம் செய்து வர இவரது பக்தியை மெச்சிய
கிருஷ்ணன், ஒரு நாள் சிறு குழந்தையாக, கோபாலனாக
வடிவங்கொண்டு வசிட்டர், ஆராதனைக்கு செய்து கொண்டிருந்த
வெண்ணையைக் கண்ணன் அப்படியே எடுத்து விழுங்கி விட்டு, ஓட்டம்
பிடிக்க, இதைக் கண்ட வசிட்டர் கோபாலனை அடே, அடே என்று
கூறி விரட்டிக் கொண்டே சென்றார்.

திருக்கண்ணங்குடியை, கிருஷ்ணாரண்யம் (கிருஷ்ணனின் காடு)
என்றே புராணங்குறிப்பிடுகிறது. இந்தக் கிருஷ்ணாரண்யத்தில், மகிழ
மரத்தின் அடியில் மஹாவிஷ்ணுவைக் குறித்து எண்ணற்ற ரிஷிகள்
தவஞ்செய்து கொண்டிருந்தார்கள்.

இப்பகுதியில் கிருஷ்ணன் ஓடிவருவதை தமது, ஞான திருஷ்டியால்
உணர்ந்த ரிஷிகள், தமது பக்தியென்னும் பாசக்கயிற்றால் கண்ணனைக்
கட்டுண்ணப் பண்ணி நிறுத்தினர்.

அவர்கள் பக்திக்கு கட்டுண்டு நின்ற கண்ணன், வசிட்டன் என்னை
விரட்டி வருகிறான். வேண்டிய வரத்தைச் சீக்கிரம் கேளுங்கள் என்று
அவசர அவசரமாகச் சொல்ல, அவர்களோ எங்களுக்கு காட்சி
கொடுத்ததைப் போலவே இங்கேயே நின்று எப்போதும் காட்சியருள
வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர்.

வேண்டுதலுக்கு இணங்கி நின்ற வேணுகானனை, ஒரு நிமிட
நேரத்தில் ஓடிவந்த வசிட்டர் அவன் பாதாரவிந்தங்களைப் பற்றிக்
கொண்டார். உடனே கோபுரங்களும் விமானங்களும் உண்டாகிவிட்டன.
பிரம்மனும் தேவர்களும் வந்து பிரம்மோத்ஸவம் நடத்தினராம்.

கண்ணன் கட்டுண்டு நின்றபடியால் கண்ணங்குடியாயிற்று இத்தலம்.
கிருஷ்ணன் அர்ச்சை வடிவில் நின்ற காரணத்தால் கிருஷ்ண
ஷேத்திரமாயிற்று.

முன் பின்