தாடாளன் கோவில் - திருக்காழிச்சீராம விண்ணகரம்
சிறப்புக்கள்
  1. மஹாபலிச் சக்ரவர்த்தி யாகம் செய்த இடத்தில் தானும் யாகம்
    செய்யவிரும்பி விசுவாமித்திரன் ஒரு இடத்தை தெரிவு
    செய்ததாகவும், யாகம் முடியும் வரை இடையூறுகளைக் களைய
    இராம இலக்குவர்களைத் துணைக் கழைத்ததாகவும் வால்மீகி
    கூறுவார். அவ்விடத்திற்கு சித்தாஸ்ரமம் என்று பெயர். அந்த
    சித்தாஸ்ரமம் என்பது     இவ்விடம்தான் என்றும் சில
    ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். இவர்களின் ஆதாரத்திற்குத் துணை
    நிற்பது சித்தாஸ்ரமம் பாடலிகவனத்தில் அமைந்திருந்தது
    என்பதேயாகும். இருப்பினும் இது ஆய்வுக்குரிய விஷயமேயன்றி
    முடிவான உண்மையாக ஏற்றுக் கொள்ளுமாறில்லை.

  2. 108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை திருமங்கை
    ஆழ்வார் விண்ணகரம் என்று குறிக்கின்றார். விண்ணகரம்
    என்றால் விண்ணில் உள்ள பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம்
    என்பது பொருள். அந்த விண் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

    1. பரமேச்சுர விண்ணகரம
    2. காழிச்சீ ராம விண்ணகரம்
    3. அரிமேய விண்ணகரம்
    4. வைகுந்த விண்ணகரம்
    5. நந்திபுர விண்ணகரம்

    ஆனால் விண்ணகர் என்னும் சொல்லை நம்மாழ்வார்தான் முதன்
    முதலாகக் கையாண்டுள்ளார். உப்பிலியப்பன் கோவிலை
    திருவிண்ணகர்     என்றே நம்மாழ்வார்     மங்களாசாசனம்
    செய்துள்ளார். ஆண்டாளும் நாச்சியார் திருமொழியில் மேகவிடு
    தூது பாசுரத்தில் இச்சொல்லைக் கையாண்டுள்ளார்.

    எம்பெருமானின் கைங்கர்யத்திற்காக பொருளைக்கொள்ளையடிக்க
    முயன்ற திருமங்கையாழ்வார், பெருமாளை மங்களாசாசனம்
    செய்வதற்காக இச்சொல்லையும் “இலக்கிய கொள்ளை”
    கொண்டுவிட்டார்.

  3. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்
    செய்யப்பட்ட ஸ்தலம், மணவாள மாமுனிகளும் இரண்டுமுறை
    இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார்.

  4. ஒரு சமயம் இத்தலம் அழிவுற்றபோது உற்சவப் பெருமாளை
    மட்டும் ஒரு மூதாட்டி தவிட்டுப் பானையில் வைத்துக் காத்து
    தினமும் திருவாராதனம் முடித்து மீண்டும் தவிட்டுப்
    பானைக்குள்ளேயே வைத்துக் காத்துவந்தாள். திருமங்கை
    யாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம் அந்த மூதாட்டியின் கனவில்
    வந்த எம்பெருமான் தன்னை திருமங்கையிடம் ஒப்புவிக்குமாறு
    கூற அவ்விதமே திருமங்கையிடம் கொடுக்க அவர் இங்கே
    பிரதிஷ்ளடை செய்தார் என்பர். எனவே எம்பெருமானுக்கு
    “தவிட்டுப் பானைத் தாடாளன்” என்ற பெயரும் உண்டு.

    திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வரும்போது ஞானசம்பந்தர்
    வாதுக்கழைத்ததாகவும், அப்போதுதான் சுயமாக கவிபாட
    ஆராதன விக்ரக வேண்டுமென்று திருமங்கையாழ்வார் தெரிவிக்க
    அவரது சீடர்கள் மூதாட்டியிடம் தாடாள விக்ரகப் பெருமாள்
    இருப்பதை அறிந்து அதனைப் பெற்று வந்து கொடுத்ததாகவும்
    கூறுவர்.

  5. ஆற்காடு நவாபின் ஆட்கள் இவ்வூருக்குத் தண்டாலுக்கு (வரி
    வசூலுக்கு) வரும்போது தாடாளப் பெருமாளைத் தூக்கிச் சென்று
    நவாபின் மகளிடம் கொடுக்க அவளும் படுக்கையறையிலும்,
    உப்பரிகையிலும் வைத்து விளையாட, சீர்காழியில் உள்ள சிதம்பர
    படையாச்சி கனவிலும், அர்ச்சகரின் கனவிலும் வந்து தாம்
    இருக்குமிடத்தை தெரிவிக்க, நாங்கள் வந்து எப்படி உம்மைக்
    கொணர்வது என்று கேட்க காவல்கட்டுகளை கடந்து மதிற்சுவர்
    அருகே வந்து வெண்ணெய் உண்ட தாடாளா வா, தவிட்டுப்
    பானைத் தாடாளா வா என்று அழைக்க நான் வந்துவிடுவேன்
    என்று கூறினார். அவ்விதமே அவ்விருவரும் வரும்போது
    காவலர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க மதிற்சுவரை
    அடைந்து.

    தாடாளா வா தாடாளா வா
        வெண்ணெய் உண்ட தாடாளா வா
    தாடாளா வா தாடாளா வா
        தவிட்டுப் பானைத் தாடாளா வா என்று கூற

    உப்பரிகையில் நவாபின் மகள் அப்பெருமானைத் தூக்கிப்போட்டு
    விளையாடிக்கொண்டிருக்க சரேலென்று சாளரத்தின் வழியாகப்
    பாய்ந்து இவர்களின் கரத்தில் சேர, ஓட்டமும் நடையுமாகக்
    கொண்டுவந்து அப்பெருமானை ஊர் சேர்த்ததாகக் கூறுவர்.

    இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் சிதம்பரப் படையாச்சியின்
    வம்சத்தாருக்கு இக்கோவிலில் தனி மரியாதைகள் உண்டு.

  6. திருக்குறளின் 610ஆம் பாடல் இப்பெருமானையே குறிக்கின்றது
    என்று     திருக்குறளை     ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த
    ஸ்ரீ.வி.வி.எஸ்.ஐயர் குறிக்கின்றார்.

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
        தா(அ)யது எல்லாம் ஒருங்கு - குறள் 610
    தா அயது - தாவிய பரப்பு முழுவதும்
        அடி அளந்தான் - அடியால் உலகளந்த திருமால்

    திருமாலின் காலடிக்கீழ் உலகடங்கியது போல் சோம்பலற்ற
    மன்னனின் கீழ் உலகு தங்கும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
    உலகளக்கத் திருமால் கொண்ட அவதாரம் த்ரிவிக்ரம
    அவதாரமாகும். இத்தலத்து எம்பெருமானின் திருநாமமும்
    திருவிக்ரமனாகும்.

    Behold the prince that Knoweth not sloth: he will bring
    with his away all that hath been measured by the steps
    of Trivikrama
    என்பது ஸ்ரீ வி.வி.எஸ்.அய்யரின் ஆங்கில மொழி பெயர்ப்பாகும்.

    (Above lines are taken from Thirukkural English translation
    by Sri. V.V.S.Ayyar. Dedicated to Bharadwaja Ashramam,
    Cheranmahadevi)

  7. திருமங்கையாழ்வாரின் மேன்மைக்கும் புகழுக்கும் இத்தலம் ஒரு
    உந்துகோலாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.
    ஞானசம்பந்தரை வாதில் வென்று     அவரது வேலை
    மங்கையாழ்வார் பரிசாகப் பெற்றது இந்த தலத்தில்தான்.
    திருமங்கையாழ்வார் வடதேச யாத்திரை சென்று இவ்வூரின்
    வழியாகத் திரும்பும் சமயம், அவரின் சீடர்கள் திருமங்கையின்
    பட்டப்பெயர்களை உரக்க கூவிக் கொண்டு வர அங்கு
    நின்றிருந்த சிவனடியார்கள் இப்போது ஞான சம்பந்தர் இங்கு
    எழுந்தருளியிருப்பதால் நீங்கள் யாரும் உங்கள் தலைவரின்
    விருதுப் பெயர்களை இங்கே கூவிக்கொண்டு செல்லலாகாது
    என்று கூற, இவர்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டு
    செல்வோம் என்று கூற வாதம் வளர்ந்து, இறுதியில்
    ஞானசம்பந்தரும், மங்கையாழ்வாரும் வாதுக்குத் தயாரானார்கள்

    திருமங்கையை நோக்கிய ஞான சம்பந்தன் உம்மைப் பெரிய
    வரகவியென்று விருதோதிச் செல்கிறார்களே, உம்மால் ஒரு குறள்
    சொல்ல முடியுமா என்று கேட்க, உடனே மங்கை மன்னன்,

    ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி
        உலகனைத்தும் ஈரடியா லொடுக்கி - ஒன்றும்
    தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
        தாடாளன் தாளனைவீர் தக்க கீர்த்தி
    அருமறையின் திறன் நான்கும் வேள்வியைந்தும்
        அங்கங்கங்கள வைகளாறும் இசைகளேழும்
    தெருவில் மலிவிழா வளம் சிறக்கும் காழிச்
        சீராம விண்ணகரே சேர்மினீரே
                -என்று அவர் கூறிய குறள்

    என்னும் வார்த்தையையே கவியின் முதலடியாகக் கொண்டு,
    ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என எண்வரிசையிலும் பாடி
    தொடர்ந்து வரும் பத்துப் பாடல்களில் திருமாலின் பத்து
    அவதாரங்களை விளக்கி நிற்க, இத்திறன் கண்டு வியந்த
    ஞானசம்பந்தர் நாலுகவிப்பெருமாள் என்பது உமக்கே செல்லும்,
    விருதோதிச் செல்லும், விருதோதிச் செல்லும் என்று கூறி
    கையிலிருந்த வேலினையும் பரிசாகக் கொடுத்து திருமங்கையின்
    கால்களுக்கு தண்டை அணிவித்து மகிழ்ந்தார்.

    இதனால்தான் திருமங்கையாழ்வாரும் தாம் பிற ஸ்தலங்களைப்
    பாடிய பாக்களில் தமது ஒன்றிரண்டு பெயர்களை மட்டும்
    இணைத்துப் பாடி, இங்கே தம்மைத் தடுத்து தாம் வெற்றி
    கொண்டமையால் தனது 8 விருதுப் பெயர்களையும் கீழ்வரும்
    பாடலில் ஒருங்கே சொல்கிறார்

    செங்கமலத்து அயனனைய மறையோர் காழிச்
        சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
    அங்கமலத் தடவயல் சூழ் ஆலி நாடன்
        அருள்மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
    கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன்
        கொற்றவேற் பரகலான் கலியன் சொன்ன
    சங்கமுகத் தமிழ் மாலை பத்தும் வல்லார்
        தடங்கடல் சூழலுகுக்குத் தலைவர் தாமே
                 - என்றார்.

    திருமங்கை இப்பாடலில் குறித்துள்ள தமது பட்டப் பெயர்கள்
    1. ஆலிநாடன் 2. அருள்மாரி 3. அரட்டமுக்கி 4. அடையார்சீயம்
    5. கொங்குமலர் குழலியர்வேள் 6. மங்கை வேந்தன் 7. பரகலான்
    8. கலியன்.

  8. திருஞான சம்பந்தரும், திருமங்கையாழ்வாரும் சமகாலத்தவர்கள்
    என்பது வரலாறிந்தார் கூற்று. மதத்தால் இருவரும் வேறு
    பட்டவராயினும் மனத்தால் “கற்றானைக் கற்றோனே காமுறுவான்”
    என்பதற்கொப்ப ஒருவரையொருவர் சந்திக்கப் பேராவல்
    பூண்டவராயிருந்தனர் என்பதும்     ஒருவருடன்     ஒருவர்
    கன்னித்தமிழில் கலந்துரையாடக் காலங்கருதிக் காத்து இருந்தனர்
    என்பதும் கீழ்க்கண்ட இரண்டு பாக்களால் விளங்கும்.

    கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக்
        கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
    அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம்
        அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா
    படியுண்ட பெருமானைப் பறித்து பாடி
        பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
    கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று
        கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே

    என்பது ஞானசம்பந்தரின் தாய்ப்பேச்சு அதாவது தன்னைத்
    தாயாக நினைத்துக் கொண்டு தன் மகளின் நிலை கூறுகிறார்.

    ஏ மங்கை மன்னா, பரம்பொருளாம் திருமாலை வழிப்பறி செய்தீர்.
    உமது பவனியைக்காண என் மகள் ஒருநாள் வந்தபோது அவள்
    உள்ளத்தையும் வழிப்பறி செய்தீர். இதுமுறையோ, எனது ஒரே
    மகள் உள்ளமிழந்து உயிர் ஒன்றுடன் வருந்த நிற்கிறாளே, என்று
    கூறும் வகையில் திருமங்கையாழ்வார் தனது உள்ளத்தையும்
    திருடிவிட்டதாய் (வழிப்பறி செய்து விட்டதாய்) ஞானசம்பந்தர்
    கூறினார்.

    இதனைக் கேட்ட திருமங்கை, தன்னைத் தலைவியாகப் பாவித்துக்
    கொண்டு, தலைவி படும் துயரத்தைச் சொல்லும்முகமாய் தலைவிப்
    பேச்சுப் பேசுகிறார்.

    திருஞான சம்பந்தர் மயிலையில் அனலில் வெந்த ஒரு பெண்ணை
    உயிர்ப்பித்துக் கொடுத்தார். இச்செய்தியை அடிப்படையாகக்
    கொண்டு தலைவிப் பேச்சில் திருமங்கை கூறுகிறார்.

    ஞானசம்பந்தரே நானும் ஒரு பெண். பெண் என்றால் அபலை
    என்பர் பெரியோர். நான் தங்களையே நினைந்து நினைந்து
    காணாக் காதலுற்று பிரிவாற்றாமையால் வருந்தி நிலவொளி கூட
    அனலாக வேகும்படி நிலவில் வெந்திருக்கிறேன். தாங்கள்
    மயிலாப்பூரில் அனலில் வெந்த ஒரு பெண்ணை பிழைக்கச்
    செய்தீரே அது என்ன விந்தை, சித்து விளையாட்டால் கூட
    இதனைச் செய்ய முடியுமன்றோ, ஆனால் தங்களைக் காண
    விரும்பி நிலவில் வெந்த இந்தப் பெண்ணுடன் கூடி
    உயிர்ப்பித்தாலன்றோ தங்கள் பெருமை நிலைக்கும் என்றார்.
    இதோ அப்பாடல்

    வறுக்கை நுறுங்கணி சிதறிச் செந்தேன் பொங்கி
        மருக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
    பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
        பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
    அருட்குலாவு மயிலை தன்னில் அனலால் வெந்த
        அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோம் என்று
    இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
        இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே
                    - என்றார்.

    பக்திச் சோலையிலே திளைத்து பாசுரங்களைத் தமிழன்னைக்கு
    வாரித்தெளித்த இவ்விரு கவி வள்ளல்களும் கண நேரத்தில்
    (தாய்ப்பேச்சு, தலைவிப்பேச்சு என்று) இரண்டு காதற்பூக்களைத்
    தமிழன்னைக்குச் சொருகி விட்டுச்சென்று விட்டனர்.

முன்