இவ்விடத்தில் எம்பெருமானுக்கு அமைந்துள்ள பெயர் மிகவும்
ஆழ்ந்து ரசிக்கத்தக்கதாகும். எம்பெருமானின் திருமுகத்தை தண்
என்னும் சந்திர ஒளிக்கு உவமானமாக ஆழ்வார்கள்
பகர்ந்ததில்லையா.
சந்திரனின் சாபந்தீர்த்ததால் பெருமானுக்கு இப்பெயர்
உண்டாயிற்றென்றாலும் எம்பெருமானின் திருமுக வொளியும்
நிலவொளி போன்றதென்று ஆழ்வார்கள் புகழவில்லையா,
அதற்குத்தான் எம்பெருமானும் இப்பெயர் தோன்ற நின்றாரோ
என்னவோ ஆழ்வார்கள் எம்பெருமானின் திருமுகப் பொலிவில்
மயங்கி நின்றதை இங்கு எடுத்துக்காட்டுவோம்.
“திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்” - என்றும்
“கதிர்மதியம்போல் முகத்தான்”
- என்றும் ஆண்டாள் மயங்குகிறாள்
நேமியும் சங்கும் இருகைக் கொண்டு
பண்ணெடுஞ் சூழ்சுடர் ஞாயிற்றொடு
பால்மதியேந்தி, ஓர் கோல நீல
நன்னெடுங் குன்றம் வருவதொப்பான்
- என்று நம்மாழ்வார் நயங்காட்டுகிறார்.
திருநீர்ச் சந்திரமண்டலம் போல
செங்கண்மால் கேசவன்
-என்று பெரியாழ்வார் பெரிதுபடுத்துகிறார்.
சலம்பொதியுடம் பில் தழலுமிழ்ப் பேழ்வாய்ச்
சந்திரன் வெங்கதிரஞ்ச
மலர்ந்தெழுந் தணவி மணி வண்ண உருவில்
மால் புருடோத்தமன், என்றும்
“வாணிலா முறுவல்” என்றும்
திங்களப்பு வாணெரி கா
லாகி திசை முகனார் தங்களப்பன்
என்று திருமங்கையாழ்வாரும் காட்டவில்லையா இவ்வாறெல்லாம்
எம்பெருமானைக் கதிர்களுக்கு உவமைப்படுத்தி சந்திர முகமாக
ஆழ்வார்கள் கொண்டாடின அழகை தனக்குப் பெயராகவே
சூட்டிக்கொண்டு திகழ்கிறார் இந்த நாண்மதியார்.
சங்க காலத்திலேயே இப்பகுதி பெரும் புகழ் பெற்றிருந்தது.
அப்போது இந்நகரில் தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்டன.
இன்றைய காவிரி பூம்பட்டிணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில்
உள்ள இவ்வூர் பண்டைய நாளில் சங்கு வாணிகத்தில்
தலைசிறந்திருந்தது. இங்கு சங்குகள் குவித்துவைத்து
விற்கப்பட்டதை சங்க நூல்கள் பரக்கப் பேசுகின்றன.
இவ்விடத்தைச் சுற்றிலும் புரசமாக விளங்கியதால் (பலாச
மரக்காடுகள் இருந்தமையை) இவ்விடத்தைக் காடு என்று
சுட்டினர். தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்ட இடமும் காடும்
சேர்ந்து தலைச்சங்காடு ஆயிற்று. இவ்வூருக்கு அருகில்
திருவெண்காடும் இருப்பதால் காடு என்னும் பெயர் ஊருக்கு
வருதல் வழக்கமாயிற்று, எனலாம். காடு என்னும் ஈற்றடி
வரப்பெற்ற திவ்யதேசம் இதுஒன்றுதான்.
(காட்டில் வேங்கடம், கண்ணபுரநகர் என்று திருவேங்கிடம்
இருந்த இடத்தையும் காடு என்று குறித்ததை ஈண்டு
நோக்கத்தக்கது)
இவ்வூரில் இருந்த மாடலன் என்னும் மறையோன் ஒருவன்
அகத்திய முனிவனின் பொதிய மலையை வலங்கொண்டு
குமரியாற்றில் முறைப்படி தீர்த்தமாடி மீண்டும் தன் கிளைஞர்
(உறவினர்) வாழும் சொந்த ஊரான தலைச் சங்கானத்திற்கு
மீள்கிறார் என்று இவ்வூரைப்பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
“தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து
நாண்மறை முற்றிய நலம்புரிக் கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலங்கொண்டு
குமரியம் பெருந்துறைக் கொள்கையிற் படிந்து
தமர்முதல் பெயர்வோன்”
என்று சிலப்பதிகாரம் இவ்வூரின் தொன்மை பெயரைச் சுட்டுகிறது.
சிலம்பில் கூறப்பட்டுள்ள தலைச் செங்காணமும் தலைச்சங்காடும்
ஒன்றுதான்.
இத்தலத்தில் பெருமானின் கையில் உள்ள சங்கு மிகவும் பேரழகு
வாய்ந்தது. வெண்சுடர்ப் பெருமாள் (மூலவர் நாண்மதியராகிறார்,
உற்சவர் வெண்சுடர் பெருமாள் ஆகிறார்) நீளா தேவியுடனும்
நிலமகளுடனும் பேரழகுடன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள
செப்புச் சிலைகள் மிக்க கலை நுணுக்கம் வாய்ந்தவை.
வீரபாண்டியனின் தலைக்கொண்ட பரகேசரி வர்மன், முதலாம்
ராசராசன், முதலாம் இராசேந்திரன், ஆகிய சோழ மன்னவர்கள்
இத்தலத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்
என்பதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
திருக்கோட்டியூர் பெண்ணொருத்தி இக்கோவிலுக்குச் செய்த
நிலதானத்தைப் பற்றி வீரபாண்டியனின் தலைக்கொண்ட பரகேசரி
வர்மனான இரண்டாம் ஆதித்தனின் மூன்றாம் ஆட்சியாண்டுக்
கல்வெட்டுக் கூறுகிறது.
இவனாட்சியின் 12ஆம் ஆண்டு வெட்டப்பட்ட கல்வெட்டு
கொல்லம் என்னும் ஊரைச் சேர்ந்த வணிகன் இக்கோவிலுக்குச்
செய்த விளக்கு தானத்தைப் பற்றிக் கூறுகிறது.
-
திருமங்கையாழ்வாரால் மட்டும் தலைப்பில் இட்ட பாடலால்
மங்களாசாசனம் செய்யப்பட்டதலம். பெரிய திருமடலிலும் (2674
இல் 134) இத்தலத்தை திருமங்கை மீளவும் மங்களாசாசனம்
செய்கிறார். கதிர்மதியம் என்று ஆண்டாள் திருப்பாவையில்
கூறியுள்ளதையும் இப்பெருமானுக்கிட்ட மங்களாசாசனமாகக்
கொள்ளலாம்.
கதிர்மதியம் என்று முதலில் ஆண்டாள் எம்பெருமானை
மங்களாசாசித்தார். கதிர்மதியம் (474) என்றதில் நிலவிற்கு
மட்டுமே எம்பெருமானின் திருமுகத்தை உவமானப்படுத்தினால்
போதுமோ என்று நினைத்தார்போலும் உடனே திங்களும்
ஆதித்தயனும் எழுந்தாற்போல் (495) என்றாரோ.
தலைச்சங்க நாண்மதியத்தைப் பற்றிக் கீழ்காணும் அருமையான
பாடல் ஒன்று காணப்படுகிறது.
செப்புங்கால் ஆதவனும்
திங்களும் வானும் தரையும்
அப்புங் காலும் கனலும்
ஆய் நின்றான் கைப்பால்
அலைச்சங்கம் ஏந்தும்
அணி அரங்கத்து அம்மான்
தலைச்சங்க நாண்
மதியத்தான்.
சுமார் 40 ஆண்டுகளாக யாரும் செல்ல முடியாதபடி
முட்புதர்களாலும், கள்ளிச் செடிகளாலும் மூடப்பட்டு வழிபாடின்றி
இருந்த இத்தலத்தினை தனது தளர்ந்த வயதில் புணருந்தாரணம்
செய்ய முயன்ற வடுக நம்பி பணியைத் தொடங்குங்காலை
முக்தியடைந்து விட்டதால் அவரது சீடரான சுந்தர ராமானுஜ
தாசர் என்பவர் திருப்பணி செய்து இன்றுள்ளவாறு கோவிலைக்
கட்டியுள்ளார். இவரின் குடும்பத்தாரும் இவரும் கோவிலுக்கு
அருகாமையில் குடியிருந்து நிர்வாகத்தையும் நேரில் பார்த்து
வருகின்றனர் 1972இல் குடமுழுக்கு நடைபெற்றது.