-
இங்குள்ள உற்சவர் மிக அழகானவர்
-
அயோத்தி எம்பெருமானே இங்கு பதினொருவரில் ஒருவராக
எழுந்தருளினார். அயோத்தி ராமன் புருடோத்தமனல்லவா
அயோத்தியில் உள்ளவன்தான் புருடோத்தமன் என்பதை
திருமங்கையாழ்வார் மட்டுமல்ல, பெரியாழ்வாரும்,
வடதிசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய
எம்புரு டோத்தம னிருக்கை
- என்றார்.
அந்த அயோத்தி எம்பெருமானே இங்கு எழுந்தருளியமையால் புருடோத்தம திருநாமம் உண்டாயிற்று.
-
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம்
-
மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளினார்.
-
தை அமாவாசைக்கு மறுநாளான கருட சேவைக்கு இந்தப்
புருடோத்தமனும் புறப்படுவார்.
-
தமிழ்நாட்டில் சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும்
பெண்கள் பந்து விளையாடியதை இலக்கியங்கள் பேசுகின்றன.
இவ்வூரின் பெண்கள் பந்து விளையாட்டில் சிறப்புற்றுத்திகழ்ந்தனர்.
இவ்வூரில் பந்தடிக்கும் பெண்களின் கால்களில் உள்ள
சிலம்போசையும், கைவளையல்களின் ஓசையும் எந்நேரமும்
மல்கியிருக்குமாம், திவ்ய தேசங்களின், மருங்கமைந்த இயற்கைச்
சூழ்நிலைகளையும், பிற நிகழ்வுகளையும் தம் பாடல்களில்
விரித்துரைக்கும் திருமங்கை இதை விட்டுவிடுவாரா என்ன.
இதோ இதைப் பற்றித் திருமங்கை கூறுகிறார்.
அப்பன் வந்துறைகோயில்
இளைய மங்கைய ரினையடிச் சிலம்பினோ
டெழில் கொள் பந்தடிப்போர் கை
வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர்
வண் புருடோத்தமமே - 1264
-
வ்யாக்ர பாத முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை
கட்டிச் சூட்டும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தார்.
இக்கோவிலில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது
குழந்தை உபமன்யூவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச்
சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி தூண்ட
வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப்
பாலைப் புகட்டி அனுக்கிரஹம் புரிந்து வ்யாக்ர பாதமுனிவருக்கும்
காட்சி தந்தார் என்பதும் இத்தலத்தோடு பேசப்படும் வரலாறாகும்.