தெய்வநாயகப் பெருமாள் கோவில் - திருவகீந்திரபுரம்

வரலாறு

இத்தலத்தைப்     பற்றி     பிரம்மாண்ட புராணத்தில் ஐந்து
அத்தியாயங்களிலும், ஸ்காந்த புராணத்திலும், ப்ரஹன் நாரதீய
புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. இத்தலம் பற்றி ஸ்காந்த புராணம்
பின்வருமாறு உரைக்கிறது.

ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்கட்கும் கடும்போர் மூண்டு
யுத்தத்தில் அசுரர்கள் வெற்றி பெற்றனர். முறியடிக்கப்பட்ட தேவர்கள்
திருமாலைத் துதித்து உதவி புரிய வேண்டுமென்று விண்ணப்பிக்க,
அவர்கட்கு உதவ வந்த ஸ்ரீமந் நாராயணன் கருட வாகனத்தின்
மேலிருந்து போரிட அசுரர்கள் நாராயணனையும் எதிர்த்து கடும்போர்
புரிந்தனர். இறுதியில் ஸ்ரீமந் நாராயணன் சக்ராயுதத்தை ஏவ, அது சகல
அசுரர்களையும் அழித்தது.

இந்நிலையில் அசுரர்களின் உதவிக்கு வந்த சிவன் சக்ராயுதத்திற்கு
எதிராக தனது சூலாயுதத்தை ஏவ அதுவும் சக்கரத்தின் பாற்பட்டு
அதற்கோர் அணிகலன் போன்று அச்சக்கரத்தையே சார்ந்து நிற்க,
இது கண்ட சிவன் தன் ஞான திருஷ்டியால் நோக்க, ஸ்ரீமந் நாராயணன்
அங்கு தனது மும்மூர்த்தி வடிவத்தை அரனுக்கு காண்பித்தார்.
அவ்வடிவில் ஸ்ரீமந்நாராயணனுடன் பிரம்மா, சிவன், தேவர்களும் தெரிய,
சிவன் துதித்து நிற்க, எம்பெருமான் சாந்தமுற்று சக்ராயுதத்தை ஏற்றுக்
கொண்டு, சூலாயுதத்தையும் சிவனிடமே சேர்ப்பித்து ரிஷிகள்,
தேவர்களின் வேண்டுகோளின்படி அவ்விடத்திலேயே கோயில்
கொண்டார்.

அவ்வமயம் தாக சாந்திக்கு நீர் கேட்க, நீர் கொணர கருடன்
ஆகாயத்தின் மீது பறக்க, ஆதிசேடன் தரையிலிறங்கி தனது வாலால்
பூமியை அடித்துப் பிளந்து தீர்த்தம் உண்டு பண்ணி பகவானுக்கு
அளித்தார்.

இவ்வாறு ஆதிசேடனால் திருவாகிய பூமியை வகிண்டு நீர் கொண்டு
வரப்பட்டதால் திரு+வகிண்ட+நீர்     (திருஹிந்தபுரம்)     எனப்
பெயருண்டாயிற்று.     ஆதிசேடன் கைங்கர்யத்தாலே இத்தலம்
திருவஹீந்திபுரம் என அழைக்கப்படுகிறது. அவன் பெயராலேயே
இங்குள்ள தீர்த்தமும் சேஷ தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.

இத்தலத்தின் எல்லைகளை பூலோகத்தில் திருக்குடந்தைக்கு
வடக்கில் 6 யோசனை தூரத்திலும், காஞ்சிக்குத் தெற்கிலும்,
சமுத்திரத்திற்கு மேற்கே அரையோசனை தூரத்திலும் அமைந்துள்ளது
என்று புராணம் வர்ணிக்கிறது.

முன் பின்