வடபத்ரசயனார் கோவில் - திருவில்லிபுத்தூர்

வரலாறு

வராஹ ஷேத்திரம்

வராஹ புராணத்தின் ரகஸ்ய காண்டத்தில் 9 அத்தியாயங்களில்
இத்தல வரலாறு பின்வருமாறு பேசப்பட்டுள்ளது.எம்பெருமான் வராஹ
ரூபியாய் பிராட்டியைத் தன் மடியில் வைத்துக்கொண்டு நம்பாடுவான்
போன்ற பக்தர்களின் கதையை இவ்விடத்தில் பிராட்டிக்கு கூறியதாக
ஐதீகம். எனவே இதனை “வராஹ ஷேத்ரம்” என்றே குறிப்பிடுகின்றன.

முன்னொரு காலத்தில் வராஹ வழிபாடே நாடெங்கும் பரவியிருந்தது.
அப்போது தலைசிறந்த வராஹ ஷேத்திரங்களாகத் திகழ்ந்த தலங்கள்
திருமலை, திருக்கடன் மல்லை, திருவிட வெந்தை, தஞ்சை மாமணிக்
கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமுஷ்ணம் போன்றன.

ஒரு காலத்தில் “சுதபா” என்னும் முனிவர் திருமாலிருஞ்
சோலையில் தெளிவிசும்பு பெற தவமிருக்கும் கால் துர்வாச முனிவர்
தமது சீடர்களுடன் அவரைக் காண வந்து வெகுநேரம் அவரது
குடிலில் காத்திருந்தார். ஆனால் நீராடுவதில் விருப்பம் கொண்டு
ஜலக்கிரீடையில் ஈடுபட்டவராக தண்ணீருக்குள்ளேயே மூழ்கி இருந்தார்.
துர்வாசரின் சினம் அதிகரித்துக்கொண்டே சென்றது. வெகுநேரம்
கழித்து வந்த சுதபா முனிவரை வெகுண்டு நோக்கிய துர்வாசர், நீர் யாம்
வந்திருப்பதை அறிந்தும் எம்மை மதியாது தண்ணீருக்குள்ளேயே
மூழ்கிக் கிடந்ததால் “எப்போதும் நீருக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கும்
மண்டுகமாகக் கடவாய்” என்று சபித்துவிட்டார்.

தமது நிலையுணர்ந்த சுதாப முனிவர் தம்மை மன்னித் தருளும்படி
மன்றாடி வேண்டினார். அதற்கு அவர் வராஹ ஷேத்திரத்திற்கு அருகில்
தருமாத்தரி என்றொரு மலையுள்ளது. அதற்கருகில் பிரவாஹித்துக்
கொண்டிருக்கும் புண்ணியநதி யொன்றுள்ளது.எண்ணற்ற ரிஷிகள் அங்கு
தவஞ்செய்து அந்நதியில் நீராடிய மாத்திரத்தில் சாபந் தீர்ந்து
தெளிவிசும்பும் பெற்றுள்ளனர். அவ்வருவியில் நீராடின மாத்திரத்தில்
உன் சாபம் தீரும் என்று துர்வாசர் கூறவே, அவ்வருவியில், யான்
தெளிவிசும்பு பெற விரும்பி தவம் மேற்கொண்ட திருமாலிருஞ்
சோலையானையே அங்குகாணவேண்டும் என்று வேண்ட அதுவும்
பலிக்குமென்றார். துர்வாசரின் சாபம் பலிப்பதற்கான ஒரு முகூர்த்த
நேரம் ஆவதற்குள் தம் தபோ பலத்தால் ஆகாய மார்க்கத்தில்
பறந்து அந்நதியில் (நூபுர கங்கையில்) நீராடினவுடன் சாபவிமோசனம்
பெற்று திருமாலிருஞ்சோலை சுந்தர ராஜனையே தியானம் பண்ண
அவரும் பிரத்யட்சமானார். இவ்வாறு திருமாலிருஞ்சோலை எழிலழகன்
இங்கு வந்து குடிகொண்டார். இஃது வராஹ ஷேத்திரம் எனப் பெயர்
விளங்கப்பட்ட காலம், காலவரைக்கு உட்படாத முன்னொரு யுகத்தில்
நடந்ததாகும்.

வடேசுபுரம்

மண்டுகர் தவஞ்செய்த இவ்வனத்தில் சிலயாண்டுகள் கழித்து
எண்ணற்ற ரிஷிகளும் இத்தலத்தின் பேற்றையெண்ணி இங்குவந்து
தவஞ் செய்யலாயினர். இது போழ்து இப்பகுதி சம்பகாரண்யம் என்ற
பெயரோடு விளங்கியது. அவ்வமயம் காலநேமி என்னும் அரக்கன்
இங்குதவஞ்செய்த முனிவர்கட்குத் தீரா இடும்பை விளைவித்து இந்திர
லோகத்தையும் துன்புறுத்தினான். எல்லோரும் சென்று இவ்வரக்கனைக்
கொல்ல வேண்டுமென்று மஹா விஷ்ணுவை வேண்ட காலம்
வரும்போது அவனையழிப்போம் என்று மஹாவிஷ்ணு கூற இறுதியில்
அவ்வரக்கனின் தொல்லைகள் அதிகமாக விஷ்ணு அங்கே தோன்றி
சக்ராயுதத்தை ஏவினான். அவனைத் துண்டு துண்டாக்கிய சக்ராயுதம்
அப்பாபத்தைப் போக்கித் தன்னைச் சுத்தப்படுத்த நினைத்த
மாத்திரத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளை நினைக்க
உடனே அவர்களும் வந்து புனிதப்படுத்தினர். சக்ராயுதத்தை
புனிதப்படுத்திய மூன்று நதிகளும் எம்பெருமானை இவ்விடத்திலேயே
இருந்து காட்சியருளவேண்டுமென்று கேட்க, அவர் தமக்கு மிகவும்
ரம்யமான ஸ்தலம் இதுதானென்றும் இப்புரிக்கு வடேசுபுர மென்றும்,
இங்கிருக்கும் எனக்கு வடமஹாதாமா வென்றும் (வடபெருங்
கோயிலுடையான்) என்றும் பெயர் விளங்கும். யான் இங்கு நித்யவாஸம்
பண்ணுவேன். நீங்கள் மூவரும் உம்மில் ஒரு சக்தியை பிரித்து இங்கு
தடாகங்களாக மாற்றிவிட்டுச் செல்லுங்கள், கலியுகத்தில் இச்சேஷத்ரம்
மிகப்புகழையடையும் என்றும் கூறி திருநாடு புக்கார்.

வில்லிபுத்தூர்

இஃதிவ்வாறிருக்க கங்கை கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த
முனிவர்களில் சரப முனிவர் என்பவர் தமது பிராப்தகர்மத்தினால்
வேடனாய் வந்து பிறந்து அப்போதும் தமது பூர்வ ஞான பலத்தால்
தவமியற்றும் முனிவர்களை மறைந்து நின்று தாக்க, இதுகண்ட
முனிவர்கள் இவனை விரட்டிக் கொல்ல நினைக்க அவன் தனது
குருவைஅடைந்து நடந்த விருத்தாந்தங்களைச் சொல்ல அவர் தமது
ஞானதிருஷ்டியால் இவர் மஹா ஞானியென்றுணர்ந்து இவருக்குத் தீங்கு
இழைக்கக் கூடாதெனப் பணித்து, அவரைச் சமாதானப்படுத்தி உம்மைக்
கொல்ல வந்த இவ்விருவரும் வராஹ ஷேத்ரத்தில் மன்னர்களாய்ப்
பிறப்பர். அவ்வாறு பிறந்து வில்லன், கண்டன் என்றும் பெயர்பெற்று
வேட்டைக்கு வரும் தருவாயில் ஒரு புலியைத் துரத்திக் கொண்டு வரும்
போது இருவரும் தனித்தனியே புலியை விரட்ட காட்டிற்குள் பிரிய
நேரிட்டு, புலியைத் துரத்தி சென்ற கண்டன் அதனோடு பொருது மடிய,
மடியும் தருவாயில் நாராயண மந்திரத்தைச் சொல்லி மோட்சம் பெற்றான்:
அவனைத் தேடி வந்த வில்லி பல இடங்களிலும் அலைந்து கண்டனைக்
காண முடியாமல் அயர்ந்து தூங்க அவன் கனவில் வந்த பெருமாள்
கண்டன் இருக்குமிடத்தை தெரிவித்து அவனுக்குச் செய்ய வேண்டிய
இறுதிக்கடன்களை செய்துவிட்டு இக்காட்டையழித்து ஒரு திருநகரியை
உண்டாக்க, அதுவும் நின் பெயரால் வில்லிபுத்தூர் என அழைக்கப்படும்
என்று சொல்ல அவனும் அவ்விதமே செய்து இந்த வில்லிபுத்தூரை
உருவாக்கினான்.

எம்பெருமான் (வராஹ ரூபியாய் தான் இருந்த போது பிராட்டி
வேண்டியபடி) திருமகள் ஆண்டாளாக அவதரிக்கும் காலம்
நெருங்குவதையெண்ணி தனது புள்ளரையனாகிய கருடனைப் பார்த்து
வில்லிபுத்தூரில் வாசம் செய்யும் மூங்கில் குடி என்னும்
வம்சத்திலிருக்கும் முகுந்தர் என்பவருக்கு 4வது புத்திரனாக
விஷ்ணுசித்தர் என்ற பெயரில் அவதரிக்க கடவாய் என்ன அவ்விதமே
அவதரித்து, விஷ்ணு சித்தன் என்ற பெயர் பூண்டு, திருமால் மீது மிக்க
பக்தி கொண்டு நித்ய கைங்கர்யங்களைச் செய்து இறைவனுக்குப்
பாமாலையும் பூமாலையும் சூட்டி வருங்காலையில் மதுரையை ஆண்ட
வல்லபன் என்னும் பாண்டிய மன்னன் மறுமைப் பேற்றில் பேரவா
கொண்டவனாக பல மதங்களையும் பற்றி ஆராய்ந்து வருங்காலையில்
எது உண்மையிலேயே மோட்சம் கொடுக்க வல்லதென வினவ
பற்பலரும்பற்பல     விதமாய்ச்     சொல்ல     இறுதியிலே சகல
மதத்தாரையுமழைத்து மோட்சம் தரத்தக்க மதம் (மார்க்கம்) எதுவென்று
நிர்ணயஞ் செய்ய ஒரு போட்டியொன்று வைத்தான். மந்திரத்தால்
செய்யப்பட்ட பொற்கிழியொன்றைக் கட்டுவித்து சகல மதத்தாரையும்
அழைத்து தத்தம் மதமே சிறந்ததென வாதிடச் சொல்லி, யாருடைய
மதம் சிறந்தது (மோட்சம் தரத்தக்க வல்லது) என்று நிருபிக்கும்
தருவாயில் பொற்கிழி தானே அறுபட்டு விழ வேண்டுமென்றும் ஏற்பாடு
செய்ய எண்ணற்ற மதத்தினரும் வந்து வாதம் பல புரிந்து வருங்காலை,
விஷ்ணுசித்தன் கனவிலே தோன்றிய எம்பெருமான் அவரைச் சென்று
வாதிடுமாறு சொல்ல அவ்விதமே அவரும் செய்து பரதத்துவம் என்னும்
மோட்சத்தைக் கொடுக்கவல்லது ஸ்ரீவைஷ்ணவமே என்று நிருபிக்க
பொற்கிழி அறுபட்டு வீழ்ந்தது, பாண்டியன் மிகவும் மகிழ்ந்து இவரைப்
பலவாறு, கொண்டாடி     துதித்து பட்டர்பிரான்     என்னும்
பட்டத்தையுமளித்தான்.

பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான்
    வந்தாரென்று ஈண்டிய சங்கம் எடுத்தூத
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்தான்
    பாதங்கள் யாமுடைய பற்று என்ற பாட்டினாலும்
    
இதையறியலாம்.

இதன்பின் பாண்டிய மன்னன் இவரை பட்டத்து யானை மீது ஏற்றி
நகர்வலம் வரச் செய்த தருணத்தில் எம்பெருமான் பிராட்டியோடு கருட
வாகனத்தில் இவருக்கு காட்சி தந்தருளினார் அதனைக் கண்ட விஷ்ணு
சித்தர்     இப்பூவுலகில் எம்பெருமானுக்குத்     தீங்கு யாதும்
நேர்ந்திடலாகாதே, கண்ணேறு பட்டுவிடலாகாதே என்று நினைந்து
பல்லாண்டு, பாடினார்.

இதன்பின் மீண்டும் வில்லிபுத்தூரையடைந்து விட்டு சித்தர்
தொடர்ந்து எம்பெருமானின் கைங்கர்யத்திலீடுபட்டு நந்தவனம்
அமைத்து மலர் பறித்து எம்பெருமானுக்கு பாமாலையோடு பூமாலையும்
படைத்துக்கொண்டிருந்தார்.

இஃதிவ்வாறிருக்க எம்பெருமானிடம் பிராட்டி, பூலோகம் சென்று
இறைவனுக்கு கைங்கர்யம் செய்ய எண்ணியிருப்பதையுணர்த்த
எம்பெருமானும் சம்மதிக்க விஷ்ணு சித்தர் நந்தவனக் கைங்கர்யத்தில்
ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே வேளையில் அங்கிருந்த திருத்தூழாய்ச்
செடியடியில் ஆடிப் பூரத்தில் அன்றலர்ந்த மலராய் அவதரித்திருக்க
சற்றே இவ்விந்தையைக் கண்ட அவர் வந்திருப்பது திருமகளேயென
உணர்ந்து தம்பத்தினியான விரஜையிடம் கொடுத்து கோதை என்றே
பெயர்சூட்டி வளர்க்க, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
ஆண்டாள் வளர்ந்து பருவம் எய்தினாள்.

விட்டுசித்தன் என்னும் பெயர் கொண்ட பெரியாழ்வார் தினந்தோறும்
இறைவனுக்குச் சூட்டிவைக்கும் பூமாலையை ஆண்டாள் தானே எடுத்து
தனது குழலிற்சூடி அதன்பின் பெருமாளுக்குச் சூட்டலானாள். இவ்வாறு
தினந்தோறும் நடந்து வருவதை ஒரு நாள் கண்டுவிட்ட பெரியாழ்வார்
கோதையை மிகவும் கடிந்துகொண்டு எம்பெருமானுக்குச் செய்யும்
கைங்கர்யத்தில் இப்படியொரு பழுது நேர்ந்ததே என்றெண்ணி மிகவும்
வருத்தமுற்று அயர்ந்து தூங்குகையில் கனவில் வந்த எம்பெருமான்
ஆண்டாள் சூடிக்களைந்த கண்ணியே தமக்கு மிகவும் உகப்பு என்று
சொல்ல இதைக்கேட்ட விட்டு சித்தர் மிகவும் வியந்து போனார்.

பின் ஆண்டாளுக்குத் திருமணம் முடிக்க பேச்சு எடுக்குங்காலை
தான் “மானிடர்க்கு வாக்குப்படேன் அரங்கனுக்கே ஆட்படுவேன்”
என்று     கூறி தனது தோழிகளை அழைத்துக் கொண்டு
(கிருஷ்ணவதாரத்தில்     மோஹித்து)     கிருஷ்ணாவதாரத்தில்
கோபிகாஸ்திரிகள் கோபாலனை எவ்விதஞ்சென்று துதித்தினரோ அதே
போன்று     ஸ்ரீவில்லி புத்தூரை     கோகுலமாகவும். அங்கே
எழுந்தருளியிருந்த வடபெருங்கோயிலுடையானை கண்ணனாகவும், தனது
தோழிகளை கோபிகாஸ்திரீகளாகவும் கற்பனை செய்துகொண்டு தினமும்
கோயிற் சென்று பாடல் புனைந்து பாமாலை சூட்ட, இவளின் எண்ணம்
ஈடேறுமோ என்று பெரியாழ்வார் வியந்திருந்த ஒரு காலையில் அவர்
கனவில் தோன்றிய எம்பெருமான், “நின் திருமகளோடு அரங்கம் வாரீர்
யாமாட் கொள்வோம்” என்று சொல்ல அவ்விதமே வல்லப தேவ
பாண்டியனிடம் பல்லக்குப் பரிவாரங் களைப் பெற்று அரங்கம்
எழுந்தருளுகையில் தென்திருக் காவேரியின் மத்தியில் வந்து
கொண்டிருக்கும் போது பல்லக்கிலிருந்து கோதை மறைய ஈதென்ன
விந்தையென்று கோயிலுக்குள் புகுந்து காணுகையில் அரங்கனுக்கு
அருகில் கோதை எழுந்தருளியிருக்க இக்காட்சியைக் கண்டு மிகவும்
சிலாகித்துப் போய் வில்லிபுத்தூரார் அரங்கனடி பணிந்து இத்திருமணக்
கோலத்தை வில்லிபுத்தூரிலும் காட்டியருள வேண்டுமென கேட்க,
அவ்விதமே வில்லிபுத்தூர் வந்து வடபெருங்கோயிலை அலங்கரிக்க
எம்பெருமான் திருமண கோலத்தில் எழுந்தருளினார்.

முன் பின்