வடபத்ரசயனார் கோவில் - திருவில்லிபுத்தூர்

சிறப்புக்கள்
 1. பாண்டிநாட்டு 18 ஸ்தலங்களில் இரண்டு ஆழ்வார்கள்
  தந்தையும், மகளுமாய் அவதரித்தது, இந்த திவ்ய தேசத்தில்
  மட்டும்தான்.

 2. கும்பகோணத்தின் தலவரலாற்றோடு திருமலையும் ஸ்ரீரங்கமும்
  எவ்விதம் சம்பந்தப்பட்டதோ அதே போன்று திருமாலிருஞ்
  சோலையும், திருவரங்கமும் இத் தலத்தோடு சம்மந்தப்படுகிறது.

 3. எம்பெருமானின் பல்வேறு அம்சங்கள் 12 ஆழ்வார்களாய்
  அவதார மெடுத்த காலையில், பிராட்டியே ஆழ்வாராக அவதரித்த
  பேறுபெற்ற ஸ்தலம்.

 4. தமிழ்நாடு     அரசு முத்திரையில் இடம் பெற்றிருப்பது
  இக்கோவிலின் ராஜகோபுரமாகும்.

 5. தற்போது கண்ணாடி மாளிகையொன்று இங்கு அமைக்கப்
  பட்டிருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

 6. ஆண்டாள்     அவதரித்த இடத்தில் துளசிச் செடியும்,
  நந்தவனமும் இன்றும் உள்ளன.

 7. வட பெருங்கோயிலுடையானாக எம்பெருமான் எழுந்தருளியுள்ள
  கோயில் மிக்க தொன்மையும் பேரழகும் வாய்ந்ததாகும்.

 8. பெரியாழ்வாராலும்,     ஆண்டாளாளும் மங்களாசாசனம்
  செய்யப்பட்ட ஸ்தலம்.

 9. தந்தைவழி பிள்ளை என்பது போல பெரியாழ்வாரும்
  ஆண்டாள் தேவியும் கிருஷ்ணவதாரத்தில் மூழ்கி பேரானந்தம்
  அடைந்த இடம். பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக வரித்து
  பூச்சூட்டி, நீராட்டி, முலையூட்டி, கொஞ்சிக் குலாவும் தீந்தமிழ்
  பாக்களை தெய்வீகச் சுவை ததும்ப வழங்கினார். ஆண்டாள்
  தேவியோ கண்ணனை, காதலனாக அவனுக்கு மையல் பட்டு
  நிற்கும் மங்கையாக நின்று மயக்கும் பாக்களை அள்ளித் தெளித்து
  இறுதியில் அவரோடு இரண்டறக் கலந்தார்.

 10. பாண்டியநாட்டோடும், வைணவ சம்பிரதாய மேன்மையோடும்
  தொடர்புகொண்ட ஸ்தலம்.

 11. இதற்கருகில் உள்ள திருவண்ணாமலை தென்திருப்பதி என்று
  பெயர் பெற்று திருமலைக்குச் செய்யவேண்டிய பிரார்த்தனைகள்,
  வேண்டுதல்கள், இங்கேயே செய்துவிடும் பழக்கமுள்ளது.திருமலை
  வேங்கடவனைப் போன்றே ஸ்ரீனிவாச மூர்த்தியாக எம்பெருமான்
  இங்கே எழுந்தருளியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுமார் 4கி.மீ.
  தொலைவில் உள்ளது.

 12. பெருமாளுடன் கருடாழ்வார் எழுந்தருளியிருப்பது இங்கு ஒரு
  சிறப்பம்சமாகும்.

 13. ஸ்ரீரங்கத்தில் இருப்பதுபோல் அரையர் சேவையும் இங்குண்டு.
  சுதாப முனிவர் வராஹ ஷேத்ரத்திற்கு வந்து அழகர் மலையானை
  நினைத்து     தியானஞ் செய்ய அங்கே எழுந்தருளிய
  திருமாலிருஞ்சோலை     நின்றான்     சுதபா முனிவரின்
  வேண்டுகோளுக்கிணங்கி அங்கேயே இருந்து பக்தர்களின் பாவம்
  போக்க நித்ய வாசம் செய்து வருகிறார். இத்தலம் காட்டழகர்
  கோவில் என்றும், காட்டழகர் சுந்தரராஜப் பெருமாள் கோவில்
  என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் முன்புறமுள்ள
  நூபுர கங்கையில் எப்போதும் தண்ணீர்வந்து கொண்டே இருக்கும்.
  கடுமையான பஞ்ச காலத்திலும் இங்கு தண்ணீர் வரும். இந்த
  தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது தான் மிகவும்
  ஆச்சர்யமான விஷயமாகும்.சுமார் 50 அடி அகலத்தில் கற்களால்
  தொட்டி கட்டி வைத்துள்ளனர். இங்கு பெருமாள் பூதேவி ஸ்ரீ
  தேவி சமேதராயிக் காட்சி தருகிறார்.

  இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும்
  செண்பகத் தோப்பு பகுதியில் உள்ளது. இங்கு செல்ல
  வேண்டுமெனில் செண்பகத்தோப்பு பகவதி நகர் வரை
  வாகனங்கள் செல்லும், அதன்பின் சுமார் 6கி.மீ. மலைப்பாதையில்
  நடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் காட்டுயானைகள்
  அதிகம் வசித்தாலும் யாரையும் துன்புறுத்துவதில்லை.

  ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று இங்கு மிக
  விசேஷமான திருவிழா நடைபெறும். 6 கால பூஜையும் விசேஷ
  அலங்காரங்களும் நிறைந்து இத்தலம் ஒளிமயமாய்த் திகழும்.
  இவ்விழாவை ராஜபாளையும் பூசப்பாடி தாயாதியார் ராஜாக்களான
  பங்கார் ராஜாக்கள் வகையறாவினர். இத்திருவிழாவை சிறப்புற
  நடத்தி வருகின்றனர். இச்சமயம் இங்கு பெருங்கூட்டம் வரும்.
  காரைக்குடி செட்டியார்கள் அதிகம் வருவர். பிறமாதங்களில்
  நடைபெறும் முக்கிய விழாக்கள் விசேடங்களின் போதும் இங்கும்
  கூட்டம் அதிகமாக வரும்.

 14. எம்பெருமானுக்கு பெரியாழ்வார் தொடுத்த பூமாலையைச்
  சூடிப்பார்த்து திருப்தியடைந்து கொடுத்தனுப்பி கொண்டிருந்தாள்
  ஆண்டாள். இதன் நினைவாக இன்றும் தினந்தோறும் முதல்நாள்
  இரவு ஆண்டாளுக்கு சாத்தப்பட்ட மலர் மாலை வடபத்திர
  சாயியாக பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுக்கு சிரசின் மேல்
  மறுநாள் காலை முதல்மாலையாக அணிவிக்கப்படுகின்றது.

 15. பெரியாழ்வார் தமது திருமாளிகையில் வைத்து வழிபட்ட
  லெட்சுமி நாராயணர் இங்கு தனிக்கோவிலில் வைத்து வழிபாடு
  செய்யப்படுகிறது.

 16. பெரியாழ்வார் கட்டிவைத்த மலர் மாலையைத்தான் அணிந்து
  கொண்டு இதை இவ்வாறே எம்பெருமானுக்கே அணிவித்தால்
  அழகாய் இருக்குமா என்று ஆண்டாள் தனது ஒப்பனையை
  சரிபார்த்த கண்ணாடிக் கிணறு என்று பெயர் பெற்ற சிறு கிணறு
  ஆண்டாள் சன்னதிக்கு அருகாமையில் இன்றும் உள்ளது. இந்தக்
  கிணற்றில்தான் ஆண்டாள் தனது அழகு பார்ப்பாளாம்.

 17. பெரியாழ்வாரின் வம்சத்தார் இன்றும் இவ்வூரில் வாழ்கின்றனர்.
  கோவிலுக்கு வெகு அருகாமையிலேயே வாசம் செய்கின்றனர்.
  பெரியாழ்வாருக்கு வாரிசு இல்லை. அவரது சகோதரர்
  ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின்
  வழிவந்தோர், “வேதப்பிரான் பட்டர்” என்ற திருநாமத்துடன்
  பெரியாழ்வாரின் வம்சத்துக் குரியவர்களாக இன்றும் கைங்கர்யம்
  செய்து கொண்டிருக்கிறார்கள்.

 18. உற்சவகாலங்களில் ஆண்டாளுக்கும் ரெங்க மன்னாருக்கும்
  திருமஞ்சன நீராட்டு செய்யும் போது கட்டியம் கூறும் உரிமை
  இவர்களுக்குண்டு.

 19. மார்கழி பகற்பத்து முதல் நாளன்று ஆண்டாள் ரங்க மன்னார்
  துணையுடன்     சன்னதித் தெருவில் எழுந்தருளும்போது
  பெரியாழ்வாரின் வம்சத்தில் வந்த வேதப்பிரான் பட்டர்கள்
  அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். தங்கள் வீட்டு வாசலில்
  அவர்களை நிறுத்தி பிறந்தவீட்டு உபசாரங்களையும் செய்கிறார்கள்.
  வாசலிலும் திண்ணையிலும் காய்கறிகளையும், கனிவர்க்கங்களையும்
  நிரப்பி பாலும் பருப்பும் (இவ்விதம் காய்கறிப் பரப்பி வைத்து
  பெண்வீட்டுச் சீதனமாக வழங்குவதை “பச்சை பரத்தி என்றும்
  பொரிகடலையுடன் சர்க்கரைப்பால் கலந்து கொடுப்பதை”
  மணிப்பருப்பு” என்றும் வழங்குவர்) நிவேதனம் செய்து தம்
  குடும்பத்து பெண்ணான ஆண்டாளையும், மாப்பிள்ளை
  அரங்கனையும் அன்போடு உபசரிக்கிறார்கள்.

 20. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதார தினமான ஆடி மாதம்
  பூரநட்சத்திரத்தன்று நடைபெறும் திருவாடிப்பூரத் திருவிழாவும்,
  ரத உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அப்போது இங்கு
  நடைபெறும் 5 கருட சேவை வேறெங்கும் இல்லாததாகும் 5
  கருட சேவையில் பங்கு பெரும் எம்பெருமான்கள்.

  1. திருவண்ணாமலை (ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மருங்கமைந்த
      வெங்கிடாசலபதி பெருமாள்)
  2. திருத்தங்காலப்பன், திருத்தங்கல் பெருமாள்.
  3. வடபத்ரசாயி
  4. ரெங்கமன்னார்
  5. காட்டழகர் சுந்தரராஜன்

 21. திருக்கல்யாணத்தின்போது பெண்வீட்டாரான பெரியாழ்வாரின்
  தற்போதுள்ள வாரிசினர் சந்நதிக்கு வந்துண்ண பெருமாள்
  “பரதேசம்” செல்ல விருப்பதைத் தடுத்து மகளை மணங்கொள்ள
  பிரார்த்திக்க, அவ்விதமே எம்பெருமான் ஏற்றுக்கொண்டதை
  “திருவுள்ளம் பற்றித் திருவுள்ளம் ஆக்கினார்” என்று
  அறிவிக்கிறார்கள். இந்நிகழ்ச்சி இன்றும் நடைபெறக்கூடிய
  தெய்வீகம் கமழும் இனிய நிகழ்ச்சியாகும்.

 22. ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஆகிய மூவரும் சேர்ந்தது
  ஆண்டாளாகக் காட்சியளிப்பது இங்குதான், மற்ற தலங்களில்
  பெருமாள் தம்பதி சமேதராய்க் காட்சி அளித்தால் (கல்யாண
  திருக்கோலத்தில்) ஸ்ரீதேவியும், பூதேவியும் அருகிலிருப்பார்கள்.
  இந்த தலத்தில்தான் ஆண்டாள் ஒருவரோடு காட்சிதருகிறார்.
  பெருமாளுக்கு வலப்புறத்தே ஆண்டாளும், இடப்புறத்தே
  கருடாழ்வாரும் காட்சியளிக்கின்றனர். இந்த அமைப்பும்
  வேறெங்கும் இல்லாததாகும்.

 23. இங்கு திருமஞ்சனம் ஆகும் போது ஆண்டாளின் சன்னதிக்கு
  முன்பு ஒரு காராம்பசு கொண்டு வரப்படுகிறது. தேவி
  காராம்பசுவைப் பார்த்துக் கண்திறப்பதாக ஐதீகம். தட்டொளி
  என்னும் கண்ணாடியும் எதிரே பொருத்தப் பட்டிருக்கிறது.
  இதற்குப் பிறகுதான் பிராட்டி முன்னிரவில் சூடிய மாலையைக்
  கழற்றிக்கொடுக்க அதை, பெருமாள் அணிந்து கொண்டு
  கண்விழித்துப் பெருமாள் திருப்பள்ளி யெழுச்சியாகிறார்.

 24. இங்குள்ள திருமுக்குள தீர்த்தம் மிகவும் பிரசித்திவாய்ந்தது.
  காலநேமி என்னும் கொடிய அரக்கனை எம்பெருமான் தன்
  சக்ராயுதத்தால் அழித்தார். ரத்தம் தோய சக்கரத்தாழ்வார் வந்து
  எம்பெருமானிடம் நின்றவுடன் சக்கரத்தைத் தூய்மைப்படுத்த
  கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் தமது
  தீர்த்தத்தை ஒரு குளத்தில் சொரிய, சக்கரம் சுத்திகரிக்கப்பட்டது.
  இந்த மூன்று நதிகளின் நீர் சேர்ந்ததால்தான் இதற்கு
  திருமுக்குளம் என்ற பெயர் உண்டாயிற்று என்பர்.

முன்